செவ்வாய், 8 மார்ச், 2011

இதற்கு பேர் தான் பத்திரிக்கைச் சுதந்திரமா ?


இன்றைக்கு இந்தியாவில் தொலைக்காட்சியானாலும் பத்திரிக்காயயானாலும் - அவர்களின் போக்கு என்பது நடுநிலை என்கிற பத்திரிகை தர்மத்த்கிற்கு விரோதமாக தான் இருக்கிறது. தொலைக்காட்சி முதலாளிகளும் பத்திரிக்கை முதலாளிகளும் ஒரே மாதிரியான போக்கைத்தான் கடைபிடிக்கிறார்கள். அவர்களுகைய ஆசையை, எதிர்பார்ப்பை - அவர்களின் தேவைக்குத் தகுந்தாற்போல் உண்மை செய்திகளை மறைப்பதும், சில செய்திகளை மிகைப்படுத்தி காட்டுவதுமான கருத்துத் திணிப்பை செய்கின்றனர்.
இந்த இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இடதுசாரிகள் பற்றிய செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். மக்கள் நலன் - தேச நலன் இவைகளுக்காக எப்போதும் பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் போராடிக்கொண்டே இருக்கும்
இடதுசாரிகள் பக்கம் மக்களின் கவனம் சற்றும் திரும்பிவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதே சமயத்தில் இடதுசாரிகளுக்கு எதிரான செய்திகளை மிகைப்படுத்திக் காட்டுவதிலும் குறைவில்லை. இப்படிதான் பத்திரிகைச் சுதந்திரம் என்பதை தங்கள் வசதிக்கேற்ப முரண்பாடுகளோடு
பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஜனநாயகத்தையே கேளிக்கூத்தாக்கியிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன்சிங் ஆணைப்படித்தான் செய்திகளை முடக்குவதும் வெளியிடுவதுமான வேலைகளை இன்றைக்கு ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.
சென்ற 2009 ஆம் ஆண்டு இறுதியில் ஆசியான் ஒப்பந்தத்திற்கு எதிராக கேரளா மாநிலத்தை ஆளும் இடது முன்னணி நடத்திய - கின்னஸ் சாதனை புரிந்த மிகப்பெரிய, நீண்ட, அடர்த்தியான மனிதச்சங்கிலிப் போராட்டத்தை தொலைக்காட்சி முதலாளிகளும் பத்திரிக்கை முதலாளிகளும் திட்டமிட்டே செய்தி வெளிவராமல் மறைத்துவிட்டனர். இதற்கு பேர் தான் பத்திரிக்கை சுதந்திரமா..?
அதேப்போல் தான் கடந்த பல மாதங்களாக ஒரு மெகா தொலைக்காட்சித்தொடர் போல் நீண்டுகொண்டேப்போகும் 2G-ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளில் - கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைக்குழு உறுப்பினர் தோழர். சீத்தாராம் எச்யூரி அவர்கள் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி பிரதமருக்கு இரண்டுமுறை கடிதமெழுதியதிலிருந்து இன்றுவரை பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி பாராளுமன்றத்திலும் வெளியிலும் இடதுசாரிகள் தொடர்ந்து போராடிவரும் செய்திகளை ஊடகங்கள் திட்டமிட்டே மறைத்ததை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேசமயத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்
ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல் மக்களிடம் காட்டிக்கொள்ளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காக பாராளுமன்றத்தில் கூச்சல் - குழப்பத்தை ஏற்படுத்திய போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகளாய் வெளியிடப்படுகிறது என்றால்
இதிலிருந்து பத்திரிகை- தொலைக்காட்சி முதலாளிகளின் எதிர்பார்ப்பு தான் என்ன..? காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பா. ஜ. க தான் என்கிற தவறானக் கருத்தை மக்களிடம் உருவாக்குவதும், தப்பித்தவறிகூட மக்களின் கவனம் இடதுசாரிகள் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துக்கொள்வதும் தான் அவர்களின் ஜனநாயகக் கடமையாக செய்துவருகிறார்கள். இதற்கு பேர் தான் பத்திரிக்கை சுதந்திரமா..?
சமிபத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று புதுடெல்லியில் பாராளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பாராளுமன்றத்தையே அதிரச்செய்த தொழிலாளர்கள் பேரணியை புதுடெல்லி மக்களே வியந்து பார்த்தனர். ஆனால் நாட்டின் எந்த மூலைக்கும் அந்தச் செய்தி சென்றுவிடாமல் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் பார்த்துக்கொண்டன. ஒரு பெட்டிச்செய்தியாகக்கூட வெளியிடவில்லை என்பது தான் உண்மை. அதே சமயத்தில் பிரபுதேவா-நயன்தாரா, நித்தியானந்தா-ரஞ்சிதா என பல பேருடைய படுக்கையறைகளை எட்டிப்பார்க்கும் ஊடகங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கித்துவம் தருவதில்லை என்பது துரதுஷ்டமானது.
அதேசமயம் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி அடிப்பதிலும் தவறுவதில்லை. மேற்குவங்கம் சிங்கூர்-நந்திகிராமில் மாவோயிஸ்ட் - திரிணமுல் கூட்டத்தினர் இடதுசாரி அரசுக்கு எதிராக திட்டமிட்டு நடத்திய வன்முறைகளை வரிந்துகட்டிக் கொண்டு ஊடகங்கள் காட்டுகின்றன. இதற்கு பேர்தான் பத்திரிக்கைச் சுதந்திரமா..?
ஊடகங்களின் இந்தக்குணத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
நடுநிலைத் தவறிய ஊடகங்களின் பொருப்பற்றப்போக்கை சரிசெய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஆட்சியாளர்கள் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்காது என்பதற்கும், ஊடகங்களின் குரல்வளையை நெறிக்காது என்பதற்கும் உத்திரவாதமில்லை. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி
ஆட்சியை ஊடகங்கள் மறந்திருக்க முடியாது. அன்றைக்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை காப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராடினார்கள். இன்றைக்கும் இடதுசாரிகள் வீதியில் இறங்கி போராடுவார்கள். அது அவர்களின் குணம்.

கருத்துகள் இல்லை: