சனி, 14 மே, 2011

புதுச்சேரி : காசுக்காக மனசாட்சியை விற்ற அரசு ஊழியர்களின் கேவலம்

              அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி மாநில சட்டபேரவைத் தேர்தலில் தமிழகத்தைப் போலவே மக்கள் என். ஆர். காங்கிரஸ் - அதிமுக  கூட்டணி மூன்றில் இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறச் செய்து  ஆட்சிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக  வைத்திலிங்கம் தலைமையிலான செயல்படாத காங்கிரஸ் ஆட்சியை புதுவை மக்கள்  தூக்கி எறிந்திருக்கிறார்கள். 
                 கடந்தத் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்ப்பதில் தயக்கம் காட்டினார்கள். தான் கேட்ட இடமும் கிடைத்துவிட்ட திருப்தியில் சி பி ஐ கட்சிககூட மார்க்சிஸ்ட் கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அக்கறை காட்டவில்லை. அதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போல் தனித்தே நிற்பது என்று முடிவெடுத்து, புதுவையில் லாசுப்பேட்டை  தொகுதியிலும், கேரளப் பகுதியில்  மாஹி தொகுதியிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியில் இறங்கியது.
                   புதுவை லாசுப்பேட்டையில்  புதுச்சேரி அரசு ஊழியர்  சங்கங்களின் சம்மேளனத்தின் கௌரவத் தலைவராக பணியாற்றும் "தோழர். C.  H. B" என்று அரசு ஊழியர்கள் மத்தியில்  அன்போடு அழைக்கப்படும் தோழர்.சி.எச்.பாலமோகனன் அவர்களை  புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லாசுப்பேட்டைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. லாசுபேட்டை தொகுதியை பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் கட்சி என்பது மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கட்சி. ஏற்கனவே பல சட்டமன்றத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் போட்டி இட்டு தோற்றுப்போயிருக்கிறது என்றாலும் லாசுப்பேட்டை பகுதி பிரச்சனைகளுக்காக போராட்டங்களை தொடர்ந்து நடத்திவரும் கட்சி என்கிற வகையிலும் மக்களுக்கு நன்கு பிரசித்தமான கட்சி. அது மட்டுமல்ல கட்சியின் அமைப்புகளும், தொழிற்சங்கம் - மாதர் சங்கம் - வாலிபர் சங்கம் - மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளும் வலுவாக உள்ள தொகுதி என்கிறப் பார்வையோடு தான் சி பி எம் கட்சி அங்கே தனித்து போட்டியிடுவதென முடிவெடுத்தது. அதேப்போல் புதுவை அரசு ஊழியர்கள் கணிசமாக குடியிருக்கும் தொகுதியும் லாசுப்பேட்டை தான். இந்தத் தொகுதியின் வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தினரும்  ஆவார்கள். சுமார் ஐந்தாயிரம் வாக்காளர்கள் அரசு ஊழியர் பகுதியில் இருக்கிறார்கள். அதனால் தான் அரசு ஊழியர்கள் நலனுக்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும்  தோழர் பாலமோகனன் அவர்களை கட்சியின் வேட்பாளராக நிறுத்தியது.
                   ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசு ஊழியராய் பணியில் சேர்ந்து,   புதுச்சேரி அரசு ஊழியர்களுக்காக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சங்கம் அமைத்து ஊழியர்களின்  உரிமைகளுக்காக போராடி, பல தியாகங்களைச் செய்து, தனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பலன்களை எல்லாம்  உதறித்  தள்ளிவிட்டு இன்று வரையில் அவர்களுக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவர் தான் பாலமோகனன்.  இன்றைக்கு அரசு ஊழியர்கள் நல்ல வருமானத்தோடும், அரசுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பயப்படாத தன்னிச்சையான - சுதந்திரமான வேலைக் கலாச்சாரத்தோடும், மூன்று வேளை நல்ல சாப்பாட்டோடும், பல்வேறு வசதிகளோடும்,  நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் இன்னும் சொல்லப்போனால் புதுவையில் மற்ற மக்களை காட்டிலும் உயர்வான நிலையிலிருந்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணமாகத் திகழ்பவர் தோழர் பாலமோகனன் அவர்களாகத்தான்  இருக்கமுடியும். அரசு ஊழியர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் குறைந்தது ஒரு பிடிச் சோறாவது பாலமோகனனின் போராட்டங்களினாலும் தியாகத்தினாலும் கிடைத்ததாகத் தான்  இருக்க முடியும்.  உண்மையிலேயே இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறவர்களாக இருந்தால் அரசு ஊழியர்கள் பாலமோகனன் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். அதையெல்லாம் எதிர்பார்க்காமல் தான் பாலமோகனன் இன்றுவரை அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக தங்களுக்காக உழைத்துக் கொண்டும்,  போராடிக்கொண்டும், பலத் தியாகங்களை செய்துகொண்டும் இருப்பவர் பாலமோகனன் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள். 
                சுமார் 24,000 வாக்காளர்களைக் கொண்ட லாசுப்பெட்டைத் தொகுதியில் மட்டும் 5000 மேற்பட்ட வாக்காளர்கள் அரசு ஊழியர்கள் மற்றும்  அவர் தம் குடும்பத்தை சார்ந்தவர்கள். இந்த வாக்குகளின் மீதெல்லாம் நம்பிக்கை வைத்து தான் பாலமோகனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 
                ஆனால் தேர்தல் முடிந்து, மே 13-ஆம் தேதியன்று வாக்குகளை எண்ணும் போது தான் தெரிகிறது  லாசுப்பேட்டையிலுள்ள அரசு ஊழியர்கள் எவ்வளவுப்பெரிய துராகிகள் என்று. தோழர் பாலமோகனன் எவ்வளவு ஓட்டுப் பெற்றிருக்கிறார் என்றால், வெறும் 647 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட்டையும் இழந்திருக்கிறார்  என்பது தான் அதிர்ச்சிகரமானது. வெட்கக்கேடானது. அரசு ஊழியர்கள் ஒருசிலரை தவிர வேறு யாரும் பாலமோகனன் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படியென்றால் அரசு ஊழியர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டிருகிறார்கள் என்றால், ஓட்டுக்கு பணம் கொடுத்த அரசியல் வியாபாரிகளுக்கே  ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வெட்கக்கேடானது. இதைவிட ஒரு நன்றிக்கெட்டத்தனம் வேறு இருக்க முடியாது.. புதுச்சேரி அரசு ஊழியர்கள் காசுக்காக மனசாட்சியையே விற்றிருக்கிறார்கள் என்பது தான் இந்த தேர்தல் முடிவு காட்டும் உண்மையாகும். 

புதுவை அரசு ஊழியர்கள் திருந்தவேண்டும் :

                     பொதுவாகவே புதுவையில் எந்தத் துறைகளை எடுத்துக் கொண்டாலும் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய சேவைகளுக்கு - பணிகளுக்கு அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெறுவது என்பது ஒரு வழக்கமாகவே போய்விட்டது.  பொதுமக்கள் அன்றாடம் செல்லக்கூடிய மின் அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம், காவல் துறை, சர்வே மற்றும் பதிவு அலுவலகம், தாலுக்கா  அலுவலகம், வீடுகட்ட அனுமதித் தரும் திட்ட ஆணையம், நகரமன்ற அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் இப்படியாக எந்த அலுவகத்திற்கு சென்றாலும் பாக்கெட்டுல பணத்தோடு தான் செல்லவேண்டும். நாய்க்கு பிஸ்கெட்டு துண்டு போடுகிற மாதிரி பணத்தை தூக்கி எறிந்தால் தான் வேலை செய்வார்கள்.  இந்த சமூகவிரோத செயல்களை மக்களும் தங்களுக்கு வேலை ஆனால் சரி என்று சகித்துக்கொண்டும், பொறுத்துக்கொண்டும் போகிறார்கள். பாதிக்கப்படும் மக்களெல்லாம் ஒரு நாள் வெகுண்டெழுந்தால் இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு திருந்தவேண்டும்.

கருத்துகள் இல்லை: