சனி, 4 ஜூன், 2011

நல்ல துவக்கம் - இது தொடர வேண்டும்.

         தமிழக மக்களின் பேராதரவுடன் தமிழகத்தில் ஆட்சியமைத்த அதிமுக அரசின் கொள்கை பிரகடனம் என்று கூறத்தக்க ஆளுநர் உரை சட்டப்பேரவையில் வெள்ளியன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நிறை வேற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

      கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும்; அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி யன்று மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் துவங்கும்; அதே நாளில் 9.11 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

       அதேபோன்று நகர்ப்புறங்களை தூய்மைப்படுத்த பாலிதீன் பைகளுக்கு தடை, சூரிய மின் சக்தியுடன் பசுமை வீடு திட்டம், சென்னை குடிநீர், சாலை மேம்பாட்டுக்கு புதிய திட்டம், அனைத்துக் கிராமங்களுக்கும் தார்ச்சாலை, கிராமப்புறங்களில் சூரிய சக்தி தெருவிளக்குகள், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன.

          விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் விலை கட்டுப்பாட்டு நிதி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு காரணமான முன் பேர வர்த்தகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்து வதும் அவசியமாகும். சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத்திட்டம் பல்வேறு குறைபாடுகளை கொண்டதாகவும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது. அந்தக் குறைகள் களையப் பட வேண்டும். அதே நேரத்தில் அரசு மருத்துவ மனைகள் மற்றும் கிராமப்புற மருத்துவமனை கள் மேம்படுத்தப்படும் என்ற அதிமுக அரசின் அறிவிப்பு செயல்வடிவம் பெற வேண்டும்.

       சமச்சீர் கல்விக்கான பாடங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய பொதுப்பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, சமச்சீர் கல்வித்திட்டத்தை உண்மையான வகையில் செயல்படுத்த அதிமுக அரசு முன்வரவேண்டும். இதில் கால தாமதம் செய்யக்கூடாது.

      முந்தைய திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட மேலவை ரத்து செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மேலவையை மீண்டும் கொண்டுவர முயற்சித்த போதே மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

        புதிய தலைமைச்செயலகத்தின் தரமற்ற கட்டுமானப் பணி குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அதற்கான விசாரணை நடைபெறும் அதே நேரத்தில், கட்டுமானப் பணிகள் தொடர்வதும் புதிய தலைமைச்செயலக செயல்பாடு தொடர்வதும் அவசியமாகும்.

            மொத்தத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான அறிகுறிகள் இந்த ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. இது தொடர வேண்டும்.

நன்றி : தீக்கதிர்   ( மேலும் பல செய்திகளுக்கு "தீக்கதிர்" படியுங்கள் )

கருத்துகள் இல்லை: