சனி, 30 ஜூலை, 2011

புதுச்சேரி ஜூலை - 30 தியாகிகளுக்கு அஞ்சலி...

ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள்
-எஸ்.சிவக்குமார்
             பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் , வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில்  தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்பட்டும் , உழைக்கும் மக்களை 
கொத்தடிமைகளாக வைத்துகொண்டு அவர்களை சுரண்டியும்  வெள்ளை முதலாளிகள்  கொழுத்து வந்தனர். தொழிற் சங்கம் அமைப்பது சட்டவிரோதம் என்று முதலாளிகள் கூறினர். தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை வாங்கி அடிமைப்படுத்தி வந்தனர். ஆண்-பெண், குழந்தை என்று அனைவரின் உழைப்பும் அட்டையை போல் உறிஞ்சப்பட்டது. தொழிலாளர்கள் எந்திரத்தில் அடிபட்டு உடல் உறுப்புகள் இழந்தாலும் அல்லது செத்தாலும் நஷ்ட ஈடு எதுவும் கிடையாது. இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து 3 பஞ்சாலைகளிலும் பணியாற்றிய (சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள்) தொழிலாளர்கள் கட்டுப்பாடாக திரண்டெழுந்தனர்.
                1935ம் ஆண்டிலிருந்து ரகசியமாக சங்கம் அமைத்து செயல்பட்டார்கள்; போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியில் ஏற்பட்ட அனுபவத்தை பெற்ற பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சி இந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையின் பலத்தையும் அதன் போராட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது.
              வேலை நேர உரிமைக்காக கோரிக்கை வைத்த தொழிலாளர்களை அழைத்து பேசுவதற்கு மாறாக,அவர்களை அடக்கி ஒடுக்கும் செயல்களில் வெள்ளைக்கார முதலாளிகள் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் இந்த அணுகு முறையை எதிர்த்து சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களை அடக்குவதற்காக,  பிரெஞ்சு அரசு ராணுவத்தையே ஆலைக்குள் திட்டமிட்டு அனுப்பியது. சுழல் பீரங்கி, துப்பாக்கி ஆயுதங்களோடு ராணுவப்படை ஆலைக்குள் நுழைந்தது. நிராயுதபாணியான தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, ஆயுத பாணி சகிதங்களோடு ராணுவம் மறுபுறம் நின்றது. கிட்டத்தட்ட போர்க்களமாகவே மாறியது சுதேசி பஞ்சாலை.
             சுழலும் பீரங்கிகளால் தொழிலாளர்களை சுட்டார்கள். அதில் பஞ்சாலை தொழிலாளர் தோழர்கள்-அமலோர்பநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 தோழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள். ஆனால் நெஞ்சுரமிக்க தொழிலாளர்கள் அஞ்சி ஓட வில்லை. ஒரு பக்கத்தில் தங்கள் அருமை தோழர்கள் குண்டு பாய்ந்து - குடல் சரிந்து - குருதி வெள்ளத்தில் மிதந்தது கண்டு பொங்கிவரும் ஆத்திரத்தையெல்லாம் நெஞ்சிலே தேக்கிக் கொண்டு வீறுகொண்டு எழுந்தனர்; கூலிப்படையை விரட்டியடித்தனர்.
                    ஆசியாவிலேயே எட்டு மணிநேர வேலை - எட்டு மணிநேர ஓய்வு  - எட்டு மணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளி மக்களுக்கான உரிமைக்கான வீரம் செறிந்த  போராட்டமும், உயிர்த் தியாகமும் புதுவையில் தான் நடைபெற்றது என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதும், நம் உரிமைக்கான போராட்டங்களுக்கு உரம் சேர்ப்பதும் ஆகும். நமக்கான உரிமைக்காக ஜூலை 30 அன்று உயிர்த் தியாகம் செய்த அத்துணைத் தோழர்களையும் சிரம் தாழ்த்தி வணங்கி அஞ்சலி செலுத்துகிறோம்.

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
மனப்பூர்வ அஞ்சலி.

S.Raman, Vellore சொன்னது…

Red Salute to the Martyrs