சனி, 2 ஜூலை, 2011

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறை - அராஜகம் - ப. சிதம்பரம் மௌனம்...!

                 மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மே - 13 அன்று தேர்தல் முடிவுகளை அறிவித்த நாளிலிருந்து மம்தா கட்சியின் காலிகள் மாவோயிஸ்ட்டுகளின் துணையோடு வன்முறையையும், அராஜகத்தையும் கட்டுக்கடங்காமல் அரங்கேற்றி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு என்பதே பாதுகாப்பின்றி சீர்கெட்டு போய்கொண்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பாய் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாவோயிஸ்ட்களின் ஆதரவோடு திரிணாமுல் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு வன்முறைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இடது முன்னணி   ஆட்சியிலிருந்த போது அடிக்கடி மூக்கை நுழைத்த ப. சிதம்பரம் இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டிருக்கிறார். 
                      

அதிர்ச்சி தரும் தகவல்கள்...

               # கடந்த மே 13 முதல் ஜூன் 26 வரையிலான காலக்கட்டத்தில் இடது முன்னணியின் ஊழியர்கள் 19 பேர், ஆளும் மம்தா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வன்முறைத் தாக்குதலால்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.  
           #  காயமடைந்த 620 தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
                 # கட்சி ஊழியர்களாகிய 189 பெண்கள் மற்றும் கட்சி பெண் அனுதாபிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
                 # திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான 193 கட்சி அலுவலகங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 628 கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
                # மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும்  அனுதாபிகளின் வீடுகளை அடித்து தகர்த்ததன் விளைவாக 12,500 தோழர்கள் வீடற்றவர்களாக ஆகியுள்ளனர்.
                # தொடர் வன்முறைக்கு அஞ்சி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள, வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

               மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் மற்ற இடது சாரிகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை  அந்த மாநிலம் சார்ந்த தனிப்பட்டப் பிரச்சனையாக பார்த்து ஒதுங்கிவிடமுடியாது. நாட்டிலுள்ள அனைவரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும்.
               பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்கு முறைகளை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்கம், 1971 - 1976 ஆண்டுகளில் அரைப்பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்ட் இயக்கம் மம்தா பானர்ஜி - காங்கிரஸ் கட்சி - மாவோயிஸ்ட் கூட்டணியின் இன்றைய வன்முறை வெறியாட்டத்தை  எதிர்த்து உறுதியாகப்  போராடி, முன்பைவிட வலுவான சக்தியாக தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை: