ஞாயிறு, 2 அக்டோபர், 2011

10 - ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஒழுக்கசீலரான கல்வி அமைச்சர்..!

                     புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் 
பி. எம். எல்.  கல்யாணசுந்தரம், 10-ம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையாம்.  ஒரு கல்வி அமைச்சர் பத்தாம் வகுப்புக் கூட முடிக்கவில்லை என்கிற லட்ச்சணம் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இன்னும் அவரைப் பற்றிய வரலாறு என்னன்னா..இவர் ஏற்கனவே கடந்த 1991-ல் அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார் என்றும், அந்த தேர்வில்  தமிழ் பாடத்தில் 48 மதிப்பெண்ணும், ஆங்கிலம் பாடத்தில் 47 மதிப்பெண்ணும் , கணிதம் பாடத்தில் 75 மதிப்பெண்ணும் பெற்று மூன்று  பாடங்களில் மட்டுமே  தேர்ச்சி அடைந்திருக்கிறார் என்றும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  
                இருபது ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த கல்யாணசுந்தரம், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சரான பிறகு தோல்வியடைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை  மீண்டும் எழுதி  10-ம் வகுப்பை நிறைவு செய்ய முடிவு செய்து, விழுப்புரம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட - புதுச்சேரியிலிருந்து 40 கி. மீ. தொலைவிலுள்ள  திண்டிவனத்தில் உள்ள தாகூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி என்கிற தனியார் பள்ளியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார். இதற்கானத் தேர்வு சென்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்திருக்கிறது.  
                கல்வி அமைச்சராக பணியாற்றக்கூடியவர்  10 - ஆம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையே என்று அதை நிறைவு செய்ய முயற்சி செய்ததை பாராட்டத்தான் வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது காமராசருக்குக் கூட இப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை.
                 இதில் என்ன பார்க்கவேண்டி இருக்குன்னா...புதுவையை சேர்ந்த அமைச்சர் ஏன் தமிழ்நாட்டிற்கு சென்று எழுதவேண்டும்..:? அங்கே என்ன ''விசேஷம்''..?  திண்டிவனத்தில் சில தனியார் பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேரங்களில், காசை வாங்கிக்கொண்டு புத்தகத்தை பார்த்து பதில் எழுதவும், ஆள் மாறாட்டம் செய்து பதில் எழுதவும் அனுமதிக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். புதுவையை சேர்ந்த சில பெற்றோர்கள் படிப்பில் நாட்டமில்லாத தன் பிள்ளைகள் எப்படியாவது தேர்ச்சி  பெறவேண்டும் என்கிற நோக்கில்  திண்டிவனத்தில் உள்ளப் பள்ளிகளில் விண்ணப்பிப்பது இன்றும் வழக்கமாக தான் உள்ளது.
                 அதுவும் ஒரு கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் தன் சொந்த ஊரிலேயே விண்ணப்பித்து தேர்வு எழுதாமல், வேற்று மாநிலத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதுவது என்பது நமக்கெல்லாம் சந்தேகத்தை வரவழைக்கிறது.
                அது மட்டுமல்ல, நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் தேர்வின் போது அந்த பள்ளியில் இவருக்காக தேர்வு எழுதிய ஒரு இளைஞன் கல்வித் துறையின் பறக்கும் படையால் பிடிபட்டிருக்கிறான் என்றும், பிறகு பள்ளி நிர்வாகம் தலையிட்டு அந்த இளைனை தப்பவைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைகாட்சியாளர்களுக்கும் செய்தி பரவி அந்தப் பள்ளியில் ஒரே பரபரப்பாகியிருக்கிறது.
               அந்த பரபரப்பு புதுச்சேரியிலும் பரவி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென்று அமைச்சரின் தொகுதியிலேயே மறியல் போராட்டமெல்லாம் நடந்திருக்கிறது. 
               கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம்,  தான் தேர்வு எழுத அந்தப் பள்ளியில் விண்ணப்பித்தது உண்மைதான் என்றும், வியாழக்கிழமை நடந்த அறிவியல் தேர்வு மட்டுமே நான் நானே அந்தப்  பள்ளிக்கு சென்று தேர்வு எழுதியதாகவும், வெள்ளிக்கிழமை ஆளுநருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இருந்ததால் சமூக அறிவியல் எழுத செல்லவில்லை என்றும் ஒரு வாக்குமூலத்தை திருவாய் மலர்ந்திருக்கிறார்.
                    அப்படி இவரால் தேர்வு எழுத செல்ல முடியவில்லை என்றால், சமூக அறிவியல் பாடத் தேர்வு இவர் பெயரில் எழுதியது யார்..?  இவருக்கே தெரியாமல் இவரது தேர்வு அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு சென்று இவருக்காக இவரது ''சீடர்கள்'' எழுதினார்களா..? தெரியவில்லை. 
               திண்டிவனத்தில் கல்வித் துறை அதிகாரிகளை அணுகியபோது, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றத் தகவலை தெரிவித்தார்கள்.
               கல்யாணசுந்தரம் அமைச்சராக பதவியேற்ற போதே, எதிர்கட்சிகளிடமிருந்து - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. கல்யாணசுந்தரம் ஏற்கனவே சட்டவிரோதச்  செயல்களிலும், சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு கிரிமினல் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது.
                இந்த சூழ்நிலையில் தான் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வகையாக சிக்கிகொண்டிருக்கிறார். இந்த தேர்வு முறைகேடு என்பது நிருபிக்கப்பட்டால், கல்யாணசுந்தரம் தானாக பதவி இறங்கவேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். அதுமட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படவேண்டும். ஒழுக்கமற்ற ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது கூட சமூகத்திற்கு கேடுவிளைக்கும்.

கருத்துகள் இல்லை: