சனி, 8 அக்டோபர், 2011

எழுச்சியாக எழுந்த அமெரிக்க மக்களின் கோபம் ..!

                ''உலகத்தின் சொர்க்கபுரி'' என்று முதலாளித்துவம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்துள்ள தொழிலாளர்களின் எழுச்சி என்பது உலக மக்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. உலக முதலாளித்துவத்தின் சூதாட்ட மையமாக திகழும் அமெரிக்காவின் ''வால் ஸ்டிரீட்'' பகுதியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன்என்று தொடங்கப்பட்ட போராட்டம் இன்று போஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பல நகரங்களுக்கும் பரவி அமெரிக்கா முழுதும் ஒரு எழுச்சி தீ பரவிவருகிறது. 
                 இங்கெல்லாம் கூடியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வளர்ந்துவரும் கோபம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும், சமதர்ம சமூகத்தை நோக்கியதாகவும் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தரமான வாழ்க்கை முறை மற்றும் மற்ற அத்தியாவசிய தேவைகளுமே போராடும் அந்த மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் கோரிக்கையாகும்.
                ஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கத் தகவல் தொடர்பு ஊழியர்கள் சங்கம், அமெரிக்காவின் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஒன்றுபட்ட ஆசிரியர்கள் சம்மேளனம் என பல்வேறு தொழிற்சங்கங்களும்  இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடுவது  மட்டுமில்லாமல், மாணவர்கள், இளைஞர்கள், படித்துவிட்டு வேலைதேடுபவர்கள், முதியவர்கள் என லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர் என்பதை பார்க்கும் போது, மக்களின் கோபமும், அதன் வீச்சும் புரிந்திருக்கும்.
              எகிப்து, கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த எழுச்சிகளை போல் அமெரிக்காவிலும் எழுந்திருப்பதை கண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆடிப்போயிருக்கிறார் என்பது தான் உண்மை. அதனால் தான் அந்த ஒன்றுபட்ட எழுச்சியை ஒடுக்குவதற்கு அமெரிக்க அதிபர் பல்வேறு அடக்குமுறைகளை கையாள்கிறார் என்று அமெரிக்காவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
              அனைவருக்கமான கல்வி, வேலை, தேவையான வருமானம், வீடு, மருத்துவம், சுகாதாரம் மற்றும் மற்ற அத்தியாவசியத் தேவைகள்  சேர்ந்த அடிப்படை தேவைகளை கொண்ட தரமான வாழ்க்கைமுறையை நோக்கிய - சமதர்ம சமத்துவ சமூகத்தை நோக்கிய - பெருமுதலாளிகளை மட்டுமே வாழவைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம் என்பது ஒரு அமைப்பாகவோ... ஒரு அரசியல் பின்னணியோ... ஒரு நம்பிக்கையான தலைமையின் கீழோ நடைபெறாமல் ஒரு ஒன்றுபட்ட எழுச்சியில் எழுந்த போராட்டமாகும். இந்த  எழுச்சிமிகு  போராட்டம் என்பது நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு நிலைகுலையாமலும், கலைந்து போகாமலும்  மேலும் வலுப்பெற்று  வெற்றி பெறவேண்டும். இதற்கு உலக உழைப்பாளி மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: