திங்கள், 17 அக்டோபர், 2011

தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் தேவை - தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும்...!

                     ஜனநாயக நாட்டில் மக்கள் தான் எஜமானர்கள். தேர்தல் நேரங்களில் கை கட்டி, வாய் பொத்தி, வணக்கமாய் ஓட்டுக் கேட்பார்கள். வெற்றிபெற்ற பின்னே அவர்கள் எஜமானர்களாக மாறிவிடுவார்கள். அதன் பிறகு மக்கள் தான் அவர்களிடம், கை கட்டி, வாய் பொத்தி வணக்கமாய் நிக்கோணம். இது நம்ப நாட்டில் ஒரு பொதுவான அம்சம்.. நமக்கெல்லாம் பழகிப் போன விஷயம். ஐந்தாண்டுக்கொரு முறை இது போன்ற முறை என்பது மாறிமாறி வரும். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு ஜெனங்களும் கண்டுக்காம போய்கிட்டே தான் இருக்காங்க..
                  ஆனால் இவர்கள் கையில் ''இரண்டு ஆயுதங்கள்'' இருக்கிறது என்கிற நினைப்பே இல்லாமல்  இருப்பது தான் வேதனையான விஷயமாகும். நமது இந்திய பாராளுமன்றம் நம் கைகளில்  இரண்டு ஆயுதங்களை கொடுத்திருக்கிறது. ''ஒன்று : தேர்தல் வாக்குச் சீட்டு. மற்றொன்று : தகவல் அறியும் உரிமை சட்டம்'' 
                   தவறான ஆட்சியாளர்களையும், தவறான மக்கள் பிரதிநிதிகளையும் விரட்டியடிப்பதற்கும், தூக்கி எரிவதற்கும் இந்த இரண்டு ஆயுதங்கள் நமக்குப் போதும். வேறு துப்பாக்கியோ, வெடிகுண்டோ, கத்தியோ தேவையில்லை. அவைகளின் மீது நமக்கு நம்பிக்கையும் இல்லை. இந்த இரண்டு ஆயுதங்களையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், நாட்டில் ஊழல்களை ஒழித்துவிடமுடியும். அன்னா ஹசாரே  மற்றும் மோடி  போன்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அத்வானி போன்றவர்கள் ரதயாத்திரையும் நடத்தவேண்டாம்.
              ஆனால் அந்த இரண்டு ஆயுதங்களில் ஒன்றான ''வாக்குச்சீட்டு'' என்கிற ஆயுதம் தான் கூர் மழுங்கியிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அரசியலில் நேர்மையும், பொதுவாழ்க்கையில் தூய்மையும் இருக்க வேண்டுமென்றால்  ''வாக்குச்சீட்டு'' என்கிற ஆயுதத்தை கூர்மை படுத்தவேண்டும்.  அதற்கு தேர்தல் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டும். 
               பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வலியுறுத்திவரும், ''தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையும்'', ''தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையும்'' தேர்தல் விதிமுறைகளில் இணைக்கப்படவேண்டும் என்பது தான் இன்றைக்கு தேர்தல் ஆணையத்திடம் இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளாகும்.
               நேற்று முன் தினம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.எஸ்.ஒய்.குரேஷி ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையையும் வழங்குவது என்பது ஆபத்தானது என்று கூறியிருக்கிறார். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எடுபடாது என்றும் கூறியிருப்பது துரதஷ்டவசமானது.
                    மேலும் கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், இந்த உரிமைகளை  விதிமுறைகளில் சேர்ப்பது என்பது எதிர்காலத்தில் தொடர்ச்சியான தேர்தல்களுக்கு வழிவகுத்துவிடும் என்கிற அச்சத்தையும் தெரிவித்தார்.
              ஆனால், தேர்தல் விதிமுறைகளில் இது போன்ற மாற்றங்கள் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு நாட்டில் நடைபெறும் பல்வேறு வகையான ஊழல்களை பார்க்கும் போது, இது போன்ற மாற்றங்கள் தேவை என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முதலில் உணரவேண்டும். தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நில்லாமல், நடுநிலைமையோடு இன்று இந்த இரு உரிமைகளையும் சட்டமாக்கி நடைமுறைப் படுத்தவேண்டும். 
              அப்போது தான் இந்திய தேசத்தில் நாம் இதுவரை பார்க்காத, அரசியலில் நேர்மையையும், பொதுவாழ்க்கையில் தூய்மையையும் பார்க்கமுடியும். இதை தான் இந்திய மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள். இவைகள் பற்றிய கருத்துகளை மக்களிடமும், அனைத்துக்கட்சிகளிடமும் ஜனநாயக முறைப்படி  கேட்டறிய வேண்டும். நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி அவர்கள் தன்னுடைய பணிக்காலத்திலேயே அதற்கான முயற்சி எடுக்கவேண்டும்.
              மேலே குறிப்பிட்ட இரண்டு உரிமைகள் எதோ அன்னா ஹசாரேக்கு சொந்தமானது போலவும், அவர் மட்டும் தான் இந்த கோரிக்கையை வைத்து போலவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் பல காலமாக இடதுசாரிகள்  இதே கோரிக்கையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவது என்பது மறைக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

1 கருத்து:

kumaresan சொன்னது…

இன்றைய தேர்தல் சட்டங்களில் பிரதிநிதியைத் திருமப அழைபபதற்கான விதி இல்லை என்பது உண்மை. அதை மட்டும் சொல்வதோடு குரேஷி நிறுத்திக்கொண்டிருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். அதைத் தாண்டி அப்படியொரு விதியால் தொடர்ந்து தேர்தல் நடத்திக்கொண்டிருகக வேண்டி வரும் என்றெல்லாம் அவர் சொன்னது வரம்பு மீறல். அப்படியொரு விதியை உருவாக்க வேண்டியவர் அவரோ தேர்தல் ஆணையமோ அல்ல. நாடாளுமன்றம்தான்.