வியாழன், 20 அக்டோபர், 2011

''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' - உலகெங்கும் பரவும் மக்கள் எழுச்சி

           
           அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிராகக் கடந்த மாதம் 17 ஆம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் 2 ஆயிரம் பேரை அந்நாட்டின் காவல்துறை கைது செய்துள்ளது.
               ''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' என்று பங்குச்சந்தையை முன்னிறுத்தும் அமெரிக்காவின் முதலாளித்துவக்கொள்கையை எதிர்த்துத் துவங்கிய போராட்டம் தற்போது சுமார் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. போராட்டத்தின் வீச்சு அதிகரிக்க, அதிகரிக்க அடக்குமுறை நடவடிக்கைகளையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் காவல்துறையினர் அதிகரித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
          நியூயார்க்கில்தான் இந்தப் போராட்டம் துவங்கியது. அங்கு தற்போது போராட்டக்களத்தில் இருக்கும் மக்கள், தங்கள் முழக்கங்களை விரிவுபடுத்தியுள்ளனர். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், பெரு நிறுவன உயர்அதிகாரிகளுக்கு கூடுதல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் எழுப்பி வருகிறார்கள்.

கைக்கூலியினராய் காவல்துறையினர்...

       மக்களின் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறைக்கு நிதி தர பெரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பொருளாதார விமர்சகரும், பத்திரிகையாளருமான மேக்ஸ் கெய்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், போராட்டக்காரர்களை ஒடுக்கவும் 25 கோடி ரூபாயை ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவர் ஜேமி டிமோன் நியூயார்க் காவல்துறைக்கு தந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
           போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூள் தூவப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருப்பவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சியிலும் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது மாதிரியான எந்தவொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். முகாமடித்துத் தங்கியுள்ளவர்கள் போராட்டம் வெல்லும்வரை நகர மாட்டோம் என்ற உறுதியோடு இருக்கிறார்கள்.

அனைத்து கண்டங்களிலும் போராட்டம் பரவுகிறது....
          உலகின் அனைத்து கண்டங்களிலும், சுமார் 951 நகரங்களில் இந்தப் போராட்டம் பரவியுள்ளது. ''அமெரிக்க எழுச்சி'' என்று அழைக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு கருத்து ரீதியான தலைமை இல்லை என்றாலும், ஆட்சியாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் வல்லுநர்களில் ஒருவரான டெட் மார்கன் கூறுகையில், நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் ஆகியவை இந்தப் போராட்டங்களால் நடுநடுங்கிக் கிடக்கின்றன என்கிறார்.

ஐரோப்பாவும்  குலுங்குகிறது....

          இத்தாலியின் ரோம் நகரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் சுமார் லட்சம் பேர் முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பெர்லின் மற்றும் பிராங்க் பர்ட் ஆகிய இரண்டு நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றனர்.    

கருத்துகள் இல்லை: