வெள்ளி, 7 அக்டோபர், 2011

பெண்ணுரிமைப் போராளிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாராட்டுகிறோம்...!

              2011 - ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த ஒரு வாரகாலமாக தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு இந்த பரிசுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு மூன்று பெண்களுக்கு - அதுவும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கு  பகிர்ந்தளிக்கப்படுகிறது.  இதன் படி அமைதிக்கான நோபல் பரிசுக்காக லைபிரீய அதிபர் ஆலன் ஜாண்சன்சர்லீப், இதே  நாட்டை சேர்ந்த சமூக போராட்ட வீராங்கனை லீமாத் போவீ, ஏமன் நாட்டை சேர்ந்த பெண்ணுரிமைப் போராளி தவக்குல்கர்மான் ஆகிய மூன்று  பெண்கள்   தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
          சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக   பெண்களின் முன்னேற்றமில்லாமல்   நாம் ஜனநாயகத்தையும் அமைதியையும்  அடைய முடியாது. அமைதியை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றும் இந்த நோபல் பரிசுக் குழுவினர் தங்களுடைய தேர்வு கருத்துப்பட்டியலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
                பொதுவாக அமெரிக்க ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க ஆதரவு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும், சோஷலிச நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் தான்  நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அதிலும் அமைதிக்காக கொடுக்கப்படும் பரிசினை அறிவிக்கும்  போது ஏதாவது சர்ச்சை எழுவதும் வழக்கமாகத் தான் இருந்து வருகிறது. இப்படித் தான் 2009 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கொடுத்தபோதும், சென்ற ஆண்டு சீன அரசுக்கு எதிராக செயல் பட்டு சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் லியூ சியோபோக்கு கொடுத்தபோதும் சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.
                 ஆனால் இந்த முறை தான் நோபல் பரிசு வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைப் போராளிகள் என்ற மதிப்பளித்து மூன்றுப் பெண்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளித்திருப்பது வரவேற்கத்தக்கது.    
                 ஆலன் ஜாண்சன்சர்லீப்  என்பவர் 72 வயதான   இவர் கடந்த 2005 - ஆம் ஆண்டு  ஆப்பிரிக்க  நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முறைப்படி  தேர்ந்தேடுக்கப்பட்டவர். அதற்கு முன்பு  இவர் லைபீரியாவில் அமைதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். சமீபத்தில் இரண்டாவது முறையாக லைபீரியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2005  - ஆம் ஆண்டு இவர் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டது முதலே லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாடுபட்டவர். மேலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாடுபட்டவர்.
                  அதே நாட்டை சேர்ந்த  லீமாத் போவீ ஒரு ஆப்பிரிக்க  அமைதி ஆர்வலர். அமைதிக்கான இயக்கத்தை ஏற்படுத்தி லைபீரியாவின் 2-வது சிவில் போரை 2003-ல் முடிவுக்குக் கொண்டுவந்தவர். கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் பெண்களை இணைத்து அவரது உரிமைக்காக போராடியவர். மேலும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்திக் கொடுத்தவர்.
                    ஏமன் நாட்டை சேர்ந்த தவக்குல்கர்மான்,  32  வயதான  இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாவார். அந்நாட்டில் நடந்த பல்வேறு மனிதஉரிமை போராட்டம் மற்றும் அதிபருக்கு எதிரான புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். பெண் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த பரிசு தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும். இதனை ஏமன் நாட்டு புரட்சிக்கர இளைஞர்களுக்கும் மக்களுக்கும்  அர்ப்பணிக்கிறேன்  என்று மகிழ்ச்சி ததும்பக் கூறினார்.
                   இம்முறை பெண்ணுரிமைப் போராளிகள் மூவருக்கு நோபல் பரிசு அளித்திருப்பது என்பது பெண்ணுரிமைப் போராளிகளுக்கு தரப்பட்ட அங்கீகாரமாகவும், கௌரவமாகவும் கருதப்படுவது மட்டுமல்லாமல், இந்தப் பரிசு உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துகள் இல்லை: