புதன், 9 நவம்பர், 2011

துரத்தியடிக்கப்பட்ட சென்னை ''அங்காடித் தெரு'' தொழிலாளர்கள்...!

                   சென்னையில் ஒரு ''அங்காடித் தெரு'' - அது தான் தி. நகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு. எப்போதும் ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் தெரு. இந்த தெருவில் கிடைக்காத பொருட்களே கிடையாது. சின்ன குண்டூசி முதல் பெரிய்ய்யய்ய யானை வரைக் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பொருட்கள் தரமானதா.. சொல்லப்படும் விலைகள்  நியாயமான விலை தானா... ஆராய்வதை விட மக்கள் தங்கள் ஊர்களில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட இங்கு குறைவாகவே இருக்கும். அங்கு விற்கப்படும்  அத்தனைப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது தான் இந்த தெருவின் முக்கிய அம்சமாகும். அதனால் தான் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
                  பொங்கல், ரம்சான், கிருஸ்துமஸ், தீபாவளி  போன்ற பண்டிகைகள்  ஆனாலும் சரி... கல்யாணம், காதுகுத்தல், புதுமனை புகுவிழா - இப்படி பல்வேறு குடும்ப விழாக்கள் ஆனாலும் சரி இங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக கூடிவிடுவார்கள். அத்தனை பொருட்களும் அவர்களின் தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் இங்கே தான்  கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழகம்  மற்றும்  புதுவையிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து மக்கள் வருவார்கள். காலையில் இந்த தெருவில் பொருட்கள் வாங்குவதற்கு நுழைந்தார்களானால் நாள் முழுக்க தேவையான பொருட்கள் அத்தனையையும் வாங்கிவிட்டு  இரவில்  தான் வீடு திரும்புவார்கள்.
                         எந்த எதிர்பார்ப்போடு மக்கள் கூடுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு  அங்கே 75000 வகையானப் பொருட்கள் அங்கே கிடைக்கிறது என்பதும் இன்னொரு சிறப்பம்சமாகும்.  அத்தனை வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதென்றால் அது சம்பந்தமான தொழிலாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்... உண்மையிலேயே விரல் விட்டு ''எண்ணிப்'' பாருங்கள். 
              1 .  விற்பனையாளர்கள் ( இரு பாலர்களும் )
              2 .  மேற்பார்வையாளர்கள் ( இரு பாலர்களும் ) 
              3 .  மேலாளர்கள்  ( இரு பாலர்களும் )
              4 .  சமையல் கலை தொழிலாளர்கள் ( சமையல் செய்து பரிமாறி      
                    இலையை எடுத்து சுத்தம் செய்பவர்கள் வரை
              5 .  சுமை தூக்கும் தொழிலாளர்கள் 
              6 .  லாரி, வேன், ஆட்டோ, மூன்று சக்கர சக்கர சைக்கிள் ஓட்டும்   
                    தொழிலாளர்கள்  
              7 .  லிப்ட்  இயக்குபவர்கள்
              8 .  டீ, காபி விற்பனையாளர்கள்
              9 டீ, காபி போடும் தொழிலாளர்கள்
            10 டீ, காபி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
            11 .  இங்குள்ள கடை வாசலையும், கடைகளையும், கடைகளிலுள்ள  
                    கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 
            12  . மின்சாரம்  மற்றும் தண்ணீர் சம்பத்தப்பட்ட வேலைகளை செய்யும்
                    தொழிலாளர்கள்
            இவர்களைத் தவிர சாலை ஓரத்தில் டீ, காபி, குறைந்த விலை சாப்பாடு போன்றவை விற்கப்படும் தள்ளுவண்டிக்கடைகள்,   கையேந்தி பவன்கள் , வட மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்து போடப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் உள்ளாடைகள், கைக்குட்டைகள், ஆயத்த ஆடைகள், ஷூ, செருப்பு, சாக்ஸ், சீப்பு, கண்ணாடி, அலங்கார பொருட்கள், அலங்காரச் சாயங்கள், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், தலையில் - கழுத்தில் - கைகளில் - கால்களில் அணிவது... அப்பப்பா... எத்தனை வகையான பொருட்கள். அத்தனையும் பெண்களையும், குழந்தைகளையும் கவரும் பொருட்கள். அதனைப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடியவர்கள் யாரென்று ஆய்வு செய்தால்... படித்து விட்டு வேலைக் கிடைக்காதவர்கள், பார்வை - கை - கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், வயதான பெற்றோர்களை பார்த்துக்கொள்ளும் இளைஞர்கள்,  சகோதரிகளின் திருமண பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரர்கள், குழந்தைகளின் படிப்புக்காக உழைக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானப்  பெற்றோர்கள்   என  அந்த அங்காடித் தெருவில், வயிறார சாப்பிட முடியாவிட்டாலும் உயிர் வாழ்வதற்காகவாவது  இப்படியாக பிழைப்பு நடத்துபவர்கள் லட்சம் பேர் இருப்பார்கள். இவர்களெல்லாம் வெளியூரிலிருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள்.
               இவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு, நீதிமன்ற ஆணைப்படி ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும்  விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று சொல்லி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தனை வகையான தொழிலாளர்களும் அந்த அங்காடித்  தெருவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விஷயமாகும்.
              இங்குள்ள கடைகளின் கட்டிடங்கள் விதிப்படி காட்டப்படாதது என்பது இந்த தொழிலாளர்கள் செய்த குற்றமா..? ஆட்சியாளர்கள் செய்த குற்றம்..!
இந்த தெருவிலுள்ள அத்துணைக் கடைகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு - ''அய்யாவாக'' இருந்தாலும் சரி, ''அம்மாவாக''  இருந்தாலும் சரி.. இந்த ஆட்சியாளர்களுக்கும், கழக கண்மணிகளுக்கும், ரத்தத்தின் ரத்தத்திற்கும், இரு கழகங்களின் குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கும், போலீஸ்காரர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், மற்றும் மின்வாரியம், மாநகராட்சி, வருமானவரி அலுவலகம், விற்பனை வரி அலுவலகம் என இங்கெல்லாம் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் இந்த அங்காடித் தெருவில் உள்ள ''பெரிய்ய்ய்ய'' கடைகளெல்லாம்  வாயை இளித்துக்கொண்டே பணம் கொடுக்கும் தானியங்கி எந்திரம் - ஏ . டி. எம். என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
              இன்று ஏற்பட்டிருக்கும் இத்தனை பிரச்சனைகளுக்கும் இது தான் காரணமாகும்.    

1 கருத்து:

bandhu சொன்னது…

ஆக்கிரமிப்பு செய்து ஒரு கடை கட்டி அதில் நூறு பேர் வேலை செய்ய ஆரம்பித்தால் அந்த ஆக்கிரமிப்பை தவறு என்று நடவடிக்கை எடுக்க கூடாதா?