செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஸ்டாலின் மகள் - கம்யூனிசத்தை ஒழித்துக்கட்ட முதலாளித்துவத்துக்கு கிடைத்த ஆயுதம்...!

                   தோழர் லெனினுக்குப் பிறகு சோவியத் யூனியனின் அதிபராகவும் முதலாளித்துவத்தின் சிம்மசொப்பனமாகவும் விளங்கியவர் தோழர் ஸ்டாலின். மார்க்சியத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியவர்களில் ஸ்டாலின் முதன்மையானவர் என்றே சொல்லவேண்டும். அதனால் தான் உலகத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் காரல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கல்ஸ், லெனின் ஆகிய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களின் வரிசையில் நான்காவது  இடத்தை தோழர் ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
              மாமேதை லெனின் வகுத்துத் தந்த போர்த் தந்திரங்களில் இவர் மிகுந்த தேர்ச்சிப்பெற்றவர். அப்படிப்பட்ட போர்த்தந்திரங்கள் அடிப்படையில் தான் அப்போது நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியன் மக்களை மட்டுமல்ல உலகமக்கள் அனைவரையும் காக்கவும், தனது தலைவன் தந்த அருமைக்கும் பெருமைக்கும் உரிய சோவியத் சோசலிசத்தை பாதுகாக்கவும் நடத்த போரில் வெற்றி பெற்று உலக மக்களால் இன்றுவரை மதிக்கப்படுகிறார். ஆனால் முதலாளித்துவவாதிகளால் இன்றுவரை எதிரியாகவே கருதப்படுகிறார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தாக்கபடுகிறார் என்பதையும் நாம் உற்று நோக்கவேண்டும். தோழர் ஸ்டாலின் மீதான முதலாளித்துவத்தின் இப்படிப்பட்ட  தாக்குதலுக்கு அவர்களுக்கு ஆயுதமாகக் கிடைத்தவர் தான் அவரது மகள் ஸ்வெட்லானா என்பதும் வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்று.
             ஸ்டாலின் வாழ்ந்த காலங்களிலும் இறப்புக்குப் பின்னும்,  அவரது மகள்
ஸ்வெட்லானா தனது தந்தை ஸ்டாலின் மீது சொல்லப்பட்ட புகழ்ச்சிகள் ஏராளம். அதேப்போல் அவர் மீதான இகழ்ச்சிகளும் விமர்சனங்களுமும் கூட ஏராளம் என்று தான் சொல்லவேண்டும். மகள் ஸ்வெட்லானா தன தந்தையைப் பற்றி வெளியிட்ட விமர்சனங்கள் முதலாளித்துவத்துக்கு கிடைத்த அல்வா  துண்டுகள் போல் இன்றுவரை வெளுத்துவாங்குகின்றனர்.
              அவரது இந்த விமர்சனங்களையே அரசியலாக்கி, ஸ்டாலினுக்கு எதிரான கீழ்த்தரமான பிரச்சார வேலைகளை முதலாளித்துவவாதிகள் இன்றுவரை செய்து வருகின்றனர். அதனால் தான் வரலாற்றில் சர்வாதிகாரி போலவும், தனிமனித ஒழுக்கம் இல்லாதவர் போலவும் ஸ்டாலின் சித்தரிக்கப்படுகிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
              லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகக் கடுமையான கோபம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. 
                 இப்படியாக அடிப்படையற்ற - சம்பந்தமில்லாத அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் களங்கமும்,  பொய்ச்சித்திரமும் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்   எதையும் பயன்படுத்த அவர்கள் தவறியதேயில்லை.
                    இன்றைக்கு முதலாளித்துவ நாடுகளெல்லாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி,  முதலாளித்துவம் என்பது தோல்வியைத் தழுவி திணறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் - அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து கரையேற மக்களின் கவனம் மற்றும் பார்வைகள் முழுதும் ''சோஷலிச தீர்வுகளை'' நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும்  இன்றைய  சூழ்நிலையில், ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதற்கும், கம்யூனிசத்தையே குழிதோண்டி புதைப்பதற்கும் முதலாளித்துவத்திற்கு கிடைத்த வாய்ப்பு தான்.. அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.. ஸ்டாலினால் "குட்டிச் சிட்டுக் குருவி" (Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட  அவரது மகள் ஸ்வெட்லானாவின் கடந்த நவம்பர் 22 அன்று மரணம் அடைத்தார்.
                   ஸ்வெட்லானாவின் மரணத்தை மட்டுமே பேசவேண்டிய முதலாளித்துவ பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் ஸ்டாலின் பற்றிய அவதூறு புராணங்களையே பிரதானமாக பேசின.  இவர்கள் அவதூறு சொல்வதுபோல் உண்மையில் ஸ்டாலின் பாசம் இல்லாதவரோ... கல்நெஞ்சக்காரரோ  அல்ல. மனிதகுலத்தையே நேசிக்க முடிந்த அவரால் தன் குடும்பத்தை நேசிக்க முடியாமலா போயிருக்கும்...? சமூகத்தின் நலனா குடும்பத்தின் நலனா என்ற கேள்வி வரும்போது, அவர் தன் குடும்ப நலனைவிட சமூகத்தின் நலனே முக்கியம் என்று முடிவுகள் எடுத்திருக்கிறார். என்பது தான் அவரைப் பற்றிய பெருமையளிக்கும் உண்மை. 
            அதற்காக அவர் தன் மகள்மீது பாசமே இல்லாதவரா? இக்கேள்வியை சமீபத்தில் ஸ்வெட்லானாவிடமே கேட்டார் அமெரிக்காவின் விஸ்கான்சின் ஸ்டேட் ஜர்னலின் நிருபர். அதற்கு ஸ்வெட்லானா, "ஆம். அவர்(ஸ்டாலின்) என்மீது பாசத்துடனிருப்பார். நான் அவரது அம்மாவைப் போல் இருப்பேன். அவரது அம்மாவைப் போல் எனக்கும் இந்த சிவப்புத் தலைமுடிகள்; அவரைப் போன்ற தோலின் நிறம் இருக்கும்" என்று கூறினார்.           
                  அதேப்போல்,  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படையிடம் கைதியாகப் பிடிபட்ட ஸ்டாலினின் மகன் யாகோவ்-ஐ விடுவித்தால் ஜெர்மன் ராணுவத் தளபதி ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று ஹிட்லர் கோரினார். ஆனால் தனக்கொரு நீதி; ஊருக்கொரு நீதி என்றில்லாத வளையாத நீதிக்குச் சொந்தக்காரரான ஸ்டாலின் சாதாரண படைவீரனாகிய த‌னது மகனுக்கு ஒரு தளபதி இணையான ஒருவன் மாற்று அல்ல‌ என்று கூறி மறுத்துவிட்டார். அதனால் அவரது மகன் நாஜிக்களால் கொல்லப்பட்டார் என்பது இன்றும் மறக்கமுடியாத - நினைத்தாலே மெய்சிலிர்க்கும் வரலாறு.   மனித குலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிப்பதாக இருந்த அந்த யுத்தம் போன்றதொரு சூழலே இல்லாத நிலையில்கூட ஊழல் மந்திரிகளின் மகன் அல்லது மகளை மீட்பதற்காக நிபந்தனையின்றி தீவிரவாதிகளை விடுவிக்கும் அரசியல்வாதிகளைப் போற்றும் முதலாளித்துவவாதிகள் அப்பழுக்கற்ற பொதுநலத்தின் உச்சகட்ட அடையாள‌மான ஸ்டாலினை இதற்காகத் தூற்றுவது விந்தையாகத் தான் இருக்கிறது..
                        ஒரு மகள் என்ற முறையில் ஸ்வெட்லானாவிற்கு ஸ்டாலின் மீதிருந்த கோபம் எல்லா வீடுகளிலும் சாதாரணமாகக் காணப்படுவது போன்று தான். "நான் விரும்பிய இலக்கியம் படிக்க முடியாமல் அப்பாவின் வற்புறுத்தலுக்காக வரலாறு படித்தேன்; அவரது விருப்பத்திற்காக நான் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்தேன்; ஆனால் நான் தேர்ந்தெடுத்த கணவரை என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை" என்று ஸ்வெட்லானா கூறுவதெல்லாம் வீடுதோறும் அன்றாடம் நாம் காணும் மனக்குறைகள்தான். தன் வீடு, தன் மனைவி-மக்கள் என்று அல்லும் பகலும் பாடுபட்டு தன் பிள்ளைகளுக்கு எத்தனை சொத்துச் சேர்த்து வைத்தாலும் "என்ன பெருசா எங்களுக்குச் சேர்த்து வச்சிட்ட" என்று அப்பாக்களை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நாம் எங்கும் பார்க்கலாம். தன் குடும்பத்திற்காகவே பாடுபடும் அப்பாக்களுக்கே இதுதான் நிலமை என்றால், ஒட்டுமொத்த சமூகத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட ஒருவரின் பிள்ளைக்கு தன் சுய விருப்பம்-ஆசைகள் நிராசைகளாகிப்போன தருணங்கள் நிறையவே இருக்கும். அந்தத் தந்தை ஸ்டாலினாக இருப்பதனாலேயே மகளின் அற்ப ஆசைகளை பூதாகரமாக்கி அதை நிராசையாக்கிய தந்தையை கொடுமைக்காரனாக்கிச் சித்தரிப்பது முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஊடகங்களின் தந்திரமே அன்றி வேறொன்றும் இல்லை.
                 தோழர் ஸ்டாலின் 1953  - ல் இறக்கும்  தருணத்தில் அவருடன் அருகில்  இருந்தவர்களில் ஸ்வெட்லானாவும் ஒருவர். ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த திருத்தல்வாதியான  குருசேவ், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கிய காலகட்டத்தில் தான் 1967  - ல் - 14 ஆண்டுக‌ளுக்குப் பிறகுதான் ஸ்வெட்லானா சோவியத் யூனியனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.
                    சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா இடையேயான அப்போதைய  பனிப்போர் காலத்தில் குருஷேவ் ஆட்சி செய்த சோவியத் யூனியனுக்கு எதிரான கருத்து யுத்தத்தில் அமெரிக்காவின் கைக்கருவியாக - ஒரு ஆயுதமாக  ஸ்வெட்லானா அமெரிக்காவிற்கு பயன்பட்டார் என்பதை அன்றைய சரித்திரம் அறிந்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். குருசேவ் ஸ்வெட்லானாவை துரோகி தூற்றினார். அதேசமயம் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கு ஸ்வெட்லானாவையும் பயன்படுத்திக் கொண்டார் குறிப்பிடத்தக்கது. 
                       ஆனால் அமெரிக்காவில் தஞ்சமடைந்த முதல் நாளில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது குருசேவின் சோவியத் யூனியனை ஸ்வெட்லானா விமர்சித்தாலும் தன் தந்தை மீது மேலே கூறிய மனக்குமுறல்களைச் சொன்னாலும் ஸ்டாலினுக்கு எதிரான குருசேவின் திருத்தல்வாதக் கும்பலின் அவதூறைப் பற்றிச் சொல்லும்போது "என் தந்தையை நேசிக்கிறேன்; அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இன்று ஸ்டாலின் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்படும் அந்தப் பயங்கரமான சம்பவங்களுக்கு எங்கள் அரசியல் தலைமைக் குழுவில் இருந்த மற்றவர்களே பொறுப்பானவர்கள்" என்றே சொன்னார்.
             பின்னர் தனது புகலிட வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஸ்வெட்லானா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு ஸ்டாலினைப் பொறுப்பாக்கி என்ன எழுதியிருந்த போதும் பின்னாட்களில் அவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசவும் ஆரம்பித்துவிட்டார். 1982  - ல் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபரிடம் ஸ்வெட்லானா தான் அவருக்கு (ஸ்டாலினுக்கு) துரோகம் இழைத்து விட்டதாகவும், "நான் செய்த காரியங்களுக்கு என் தந்தை என்னைக் கொன்றே போட்டிருப்பார்" என்றும் கூறியிருக்கிறார் என்பதையையும் மறுப்பதற்கில்லை.  அவரது இந்த மனமாற்றத்தின் பாதிப்பில் எழுதியதால்தான் அவரது கடைசி சுயசரிதை நூலை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன்வரவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
              ஸ்டாலினது இறப்பைப் பற்றி நினைவு கூரும் போது கூட ஸ்வெட்லானா "அவர் இறந்தபோது நான் என் நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்டேன். என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
               இருந்தாலும் ஸ்டாலின் எனும் அந்த மாபெரும் வரலாற்று மனிதரோடு வாழ்க்கையில் உடன் பயணிக்க வேண்டுமானால், அவரது தோழர்களுக்கு மட்டுமல்ல, மனைவி-மகன்-மகளுக்கும்கூட ஒரு குறைந்தபட்ச தியாக உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும்  தேவைப்படுகிறது என்பது பெருமையளிக்கும் விஷயமாகும். அந்த அர்ப்பணிப்பை அவரது மகன் யாகோவ் கடும் சோதனைக் காலத்தில் தந்தையுடனிருந்து தன் உயிரையும் தியாகம் செய்து நிரூபித்து விட்டார். ஆனால், பாவம் மகள் ஸ்வெட்லானாவால் அந்த உயரத்தை கடைசிவரை எட்டமுடியாமலேயே போய்விட்டது. ஆனாலும் அந்த மாமனிதன் இறக்கும் அந்தக் கடைசித் தருணம் வரை அவரது அன்பு மகள் ஸ்வெட்லானா அவருக்குச் செல்லமான "குட்டிச் சிட்டுக் குருவி"தான்.

3 கருத்துகள்:

சீனி மோகன் சொன்னது…

"என் தந்தையை நேசிக்கிறேன்; அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இன்று ஸ்டாலின் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்படும் அந்தப் பயங்கரமான சம்பவங்களுக்கு எங்கள் அரசியல் தலைமைக் குழுவில் இருந்த மற்றவர்களே பொறுப்பானவர்கள்" என்றே சொன்னார். அந்தப் பயங்கரமான சம்பவங்கள் என்ன என்று விளக்குங்கள். அரசியல் தலைமைக் குழுவின் தலைவர் என்ற முறையில் அந்தச் சம்பவங்களுக்கு அவரைத் தானே பொறுப்பாக்க முடியும் ? சாதித்ததெல்லாம் அவர் தனியாகச் செய்தது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் என்றால் வேதனைக்கு மட்டும் கூட்டுப் பொறுப்பு என்பது எப்படி நியாயமாகும் ?

ELANGO T சொன்னது…

ஸ்டாலின் மகள் குறித்த அருமையான பதிவு.

Gurumurthy சொன்னது…

EXCELLENT article.
- J.Gurumurthy