திங்கள், 19 டிசம்பர், 2011

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் மக்கள் தலைவர் கிம் ஜோன்கில் மறைந்தார் - அமெரிக்கா கழுகு கிழக்காசியாவில் வட்டமிடுகிறது...!

 
அமெரிக்காவின் 
சிம்மசொப்பனம் - 
கொரிய குடியரசு 
மக்கள் தலைவர் 
மறைந்தார்...
 
                                  
 
       வடகொரியா என்று அழைக்கப்படும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாட்டின் மக்கள் தலைவர்  கிம் ஜோன்கில், உயர் ராணுவ  ஆய்வுப்பணியில் இருக்கும் போது சென்ற டிசம்பர் 17 - ஆம் தேதி தன்னுடைய 69 - வது வயதில்   மாரடைப்பால் காலமானார் என்று வடகொரியா தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. கொரியா தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும், நாட்டின் ராணுவத்தளபதியாகவும்   பணிசெய்து, தேசத்தின் சுயசார்பு மற்றும் வளர்ச்சிக்கு உழைத்தவர். ''மாபெரும் தலைவர்'' என்றும், ''அன்புத் தலைவர்'' என்றும், ''தேசத்தின் தந்தை'' என்றும், ''இரும்பு தளபதி'' என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  கிம் ஜோன்கிலின் மறைவு என்பது வடகொரியா மக்களிடையே சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. இவரது இறப்பு கொரிய தொழிலாளர் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகவும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சோகமாகவும் கருதப்படுகிறது.
                   ஏகாதிபத்திய சூழ்ச்சியினால் சோவியத் யூனியன் உள்ளிட்ட சோஷலிச நாடுகளெல்லாம் சிதறுண்டு போன சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் சோஷலிச நாடுகளில் வடகொரியாவும்  ஒன்று. மக்கள் சீனம், கியுபா குடியரசு, சோஷலிச வியட்நாம் வரிசையில் இன்று இந்த கொரிய குடியரசு நாடும் விளங்குவதில் கிம் ஜோன்கிலின் பங்கு மிக அதிகம். இவரது குன்றாத தேசபக்தியும், அயராத உழைப்பும் வடகொரியாவை வீரத்தின் விளைநிலமாக மாற்றியிருக்கிறது.  அதனால் தான்,  வடகொரிய ராணுவம் உலகத்திலேயே நான்காவது இடத்தில் உயர்ந்தியிருப்பதால்,  வடகொரியா அமெரிக்காவிற்கு நீண்ட கால சவாலாக இருந்துவருகிறது. 
                 கிம் ஜோன்கில் அமெரிக்காவிற்கு அடங்கி நடக்காததால், அமெரிக்காவும், அமெரிக்க அடிவருடி நாடுகளும் இவரை சர்வாதிகாரி என்றே அழைக்கின்றனர். அதனால் அமெரிக்க நாசப்படுத்தத் துடிக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. எனவே கிம் ஜோன்கில் இறப்பில் ஏதாவது இலாபம் காண முடியுமா என்று அமெரிக்க கழுகு கிழக்காசியாவின் மேல் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்க, அமெரிக்கா அதிபர் ஒபாமா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு ராணுவங்களை தயார்படுத்தி வைக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் வடகொரியாவை ஒட்டிய தென்கொரிய எல்லைப்பகுதிகளில் ராணுவம் உஷார்நிலையிலும்,  பதட்டமான நிலையிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
             என்ன நடக்கப்போகிறது என்று உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: