புதன், 21 டிசம்பர், 2011

செவ்வணக்கம் தோழர் கிம் ஜோங் இல்....!

                   

                                              RED SALUTE  TO      

                                              COMRADE KIM JONG IL    

          
 
                        வடகொரியா என அழைக்கப்படும் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியும், கொரியத் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளருமான கிம் ஜோங் இல் டிசம்பர் 17ம் தேதி மறைந்துவிட்டார்.
                  வடகொரிய மக்களோடும், கொரியத் தொழிலாளர் கட்சியோடும் தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் இரங்கலையும் பகிர்ந்துகொண்டு, செம்பதாகையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
                  ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செங்கொடியை உயர்த்திப்பிடித்து, சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறுகிறோம் என உலகிற்கு உரத்து அறிவித்த சின்னஞ்சிறிய நாடு வட கொரியா. கொரிய மக்களின் மகத்தான தலைவர் கிம் இல் சுங் தலைமையேற்று நடத்திய புரட்சியை அவருக்குப் பின்னர் கடந்த சுமார் 17 ஆண்டு காலம் பாதுகாத்து, முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தியவர் கிம் ஜோங் இல்.
                     கிம் ஜோங் இல் தலைமையில் வடகொரிய தேசம், உலக வரலாற்றிலேயே மிகக்கடுமையான காலகட்டத்தில் பயணம் செய்தது. அண்டை நாடான தென்கொரியாவின் எல்லையில் கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அமெரிக்க ராணுவமுகாம், எந்த நேரமும் வடகொரியாவைத் தாக்கும் முஸ்தீபுகளுடன் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
                    அதுமட்டுமின்றி, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கும் முனைப்பில் வடகொரியா ஈடுபட்டிருப்பதாகக் கூறி, அந்நாட்டை ‘தீமையின் அச்சு’ நாடுகள் வரிசையில் சேர்த்தது அமெரிக்கா; இந்தக் காரணத்தை கூறிக்கொண்டே வடகொரியா மீது வரலாறு காணாத பொருளாதாரத்தடைகள் பாய்ந்தன. அனைத்து வழிகளிலும் அந்நாட்டின் வளர்ச்சியை முடக்க முயற்சித்து வருகிறது ஏகாதிபத்தியம். தனது இந்த நோக்கத்தை நிறை வேற்றிக்கொள்ள தென்கொரியாவையும் ஜப்பானையும் அது பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
                    எந்த நேரமும் தாக்கப்படலாம் என்ற அபாயத்திலேயே இருந்தபோதிலும், சுயசார்புக்கொள்கை எனும் கிம் இல் சுங்கின் கோட்பாட்டை காலத்திற்கு ஏற்றவாறு, நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி, சோசலிசப்பாதையில் முன்னேறுவது என்ற உறுதிப்பாட்டோடு வட கொரியாவை வழிநடத்திச் சென்றார் கிம் ஜோங் இல்.
                  தனது இறுதி மூச்சு வரையிலும் மார்க்சிய- லெனினியக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்தவர்; சோசலிசமே எதிர்காலம் என உரத்து முழங்கியவர் கிம் ஜோங் இல்.
                    இல்லின் மறைவைத் தொடர்ந்து கொரியத் தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், இவரது மகனுமான கிம் ஜோங் உன், அரசுக்கு தலைமையேற்கிறார். அவரது தலைமையின் மீது மக்களும், கட்சியும், மத்திய ராணுவக் கமிஷனும், நாடாளுமன்றமும் நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்துள்ளன.
                   ஆனால் எப்போதும் போல நிலைமையைப் பயன்படுத்தி வடகொரியப் புரட்சியை சீர்குலைக்க ஏகாதிபத்தியக் கழுகுகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் உயர்த்திப்பிடித்த சிவப்புப் பாதையில் உறுதியுடன் பயணிப்போம் என வட கொரிய மக்கள் முழங்கு கிறார்கள்.

செவ்வணக்கம், தோழர் கிம் ஜோங் இல்.....

கருத்துகள் இல்லை: