வெள்ளி, 23 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு : உரிமை காப்போம் - சகோதர உறவைக் காப்போம்!

                    
                    
                                                                 
தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,  
தமிழ்மாநிலச் செயலாளர்,  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.   
                                                                         


                  முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
                     தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப்படையை அனுப்ப வேண்டும், அணையை பலப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரவையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
                      முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவைப் பொறுத்தே தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை உள்ளது. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய ஒன்றாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. அணையின் அளவு 136 அடியாக குறைக்கப்பட்டதால் ஏற்கெனவே பாசனப் பரப்பு சுருங்கியுள்ளதோடு, ஒரு பகுதியில் இருபோக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறி யுள்ளது.
               இந்தப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5பேர் கொண்ட அதிகாரம் பெற்ற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் பாசனப் பாதுகாப்பு குறித்து இந்த அதிகாரம் பெற்ற குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.
                     முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை ஆகும். அணையின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்கள் மற்றும் நீரியல் துறை நிபுணர்களே துல்லியமான முடிவை கூறமுடியும். உயர் நிலைக்குழு அமைத்துள்ள தொழில் நுட்பக்குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.
                    நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இரு தரப்பும் காத்திருப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகம் மற்றும் கேரளம் தங்களது தரப்பு நியாயத்தை முழுமை யாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கேரள சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டுமென்றும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல.
                     இந்தப் பின்னணியில், தமிழக -கேரள எல்லையில் இருவாரங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. கேரளத்திற்கு சென்ற சபரிமலை பக்தர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அதே போன்று தமிழகத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு டீக்கடைகள், பேக்கரிகள் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
                      தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் கவலையளிக்கத்தக்க இத்தகைய போராட்டங்களை கைவிட வேண்டும். பொருளாதாரத்தடை, எல்லை முற்றுகை போன்றவைகள் பிரச்சனையை தீர்க்க உதவாது. மாறாக மக்கள் ஒற்று மையை சிதைக்கவே இட்டுச்செல்லும். தமிழகமும் கேரளமும் பாரம்பரியமாக நல்லிணக்கமும் நல்லுறவும் கொண்ட மாநிலங்களாகும், புவியியல் ரீதியாக மட்டுமின்றி பொருளியல் ரீதியாகவும் இரு மாநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. காய்கறி, முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு செல்கின்றன. ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு குடிநீர் கிடைக்கிறது.
                     கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்திலும் நீண்ட நெடுங்காலமாக நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றனர். பண்பாட்டு ரீதியாகவும், இரு மாநில மக்களுக்கிடையிலும் நெருங்கிய உறவு நீடித்து வருகிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாகவும், கலைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும்.
                 இந்தப் பின்னணியில், சகோதர மக்களிடையே மோதல் தூண்டிவிடப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமாகும். தமிழக - கேரள எல்லையின் இரு பகுதியிலும் பதற் றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடம் தராமலும், ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இரையாகா மலும், பாரம்பரிய நட்புறவு மற்றும் அண்டை மாநில நல்லுறவை பேணுமாறு இரு மாநில மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                    கேரளாவில் வேலை நிமித்தம் பணிபுரியும் தமிழ் மக்களுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு வழங்க வேண்டுமென்றும், தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்றும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
                      மத்திய அரசு இந்த விசயத்தில் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இரு மாநிலங்களிலும் சுமூக நிலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
                  கட்சியின் கேரள மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களை தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் பணியாற்ற வேண்டும், சபரி மலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்துவித பாதுகாப்பு வழங்குவது, அரசு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஈடுபடவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு விரைந்து கிடைத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

* தமிழகத்தின் பாரம்பரிய பாசன, குடிநீர் உரிமையை பாதுகாப்போம்.

* தமிழக-கேரள மக்களுக்கு இடையி லான சகோதர உறவை பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை: