ஞாயிறு, 25 டிசம்பர், 2011

முதல்வர் அவர்களே... அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வேண்டாம் - தேவைக்கேற்ற சம்பளம் கொடுங்கள்...!




                                                                     
அரசு ஊழியர்கள் மீது                                      
முதல்வருக்கு                    
ஏனிந்த கரிசனம்...?
                                                                     


          நடந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ''தினம் ஒரு அறிவிப்பு'' என்பது முதலமைச்சர் எப்போதும் தமிழக மக்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறது. 
                  அப்படி வந்த அறிவிப்பு வரிசையில் நேற்று வந்த அறிவிப்பு என்பது சற்று வித்தியாசமாக இருந்தது. அரசு ஊழியர் பக்கம் முதலமைச்சரின் கனிவான பார்வை பட்டிருப்பது போல் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
                    அந்த அறிவிப்பு என்னவென்றால், சிறப்பாகப் பணியாற்றும் மூன்று 
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திரதினத்தன்று பதக்கமும், ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையும் கொண்ட ''நல் ஆளுமை விருது''   வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதலமைச்சர் இந்த விருது கொடுப்பதன் மூலம் அரசு ஊழியர்களின் உழைப்பை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று நினைத்தாரா...? அல்லது இப்படிப்பட்ட விருதுகள் கொடுப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் உள்ளிருக்கும் திறமையை வெளியே கொண்டுவரவேண்டும் என்று நினைத்தாரா...? அல்லது அரசு ஊழியர்கள் மத்தியில்   இப்படி ஒரு போட்டியை உருவாக்கி அவர்களை இப்போதை விட சிறப்பாக வேலை செய்ய வைக்கவேண்டும் என்று நினைத்தாரா...? என்பது தெரியவில்லை. இது அரசு ஊழியர்கள் மீது முதலமைச்சரின் ''கருணையான பார்வையா'' அல்லது ''கடுமையான பார்வையா'' என்பது  தெரியவில்லை.  எது எப்படியோ அரசு ஊழியர்கள் உஷாராக இருக்கவேண்டும். அடுத்து என்ன அறிவிப்பு வருமோ.....? 
  அரசு அலுவலகங்களில் 
  பணிக்கலாச்சார சீர்கேடுகள்...!
                       
             முதல்வர் அவர்களே... அரசு ஊழியர்களுக்கு விருது கொடுப்பது இருக்கட்டும். அரசு அலுவலகம் என்றால் வெறும் ஊழியர்கள் மட்டுமல்ல. அவர்கள் அதில் ஒரு அங்கம் தான். அரசு அலுவலகம் என்றால் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள், மாநில - மாவட்ட உயர் அதிகாரிகள், காவல் மற்றும் நீதித்துறைகளின்   அதிகாரிகள் இப்படியாக ''உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்களில்'' தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அரசு அலுவலகம் என்பது நீண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா...?      
               அப்படியென்றால், இன்றைக்கு தமிழகத்தைப் பொருத்தமட்டில் - இந்த இரண்டு திராவிடக்கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து அரசு அலுவலகம் என்றால் ஒரு ''முதலையை''  போல் ஆக்கிவிட்டார்கள். கண்ணை மூடி நன்றாக யோசித்துப்பாருங்கள். தமிழகத்தின் ''அரசு  எந்திரம்'' என்பது ஒரு ''முதலை'' வடிவத்தில் தெரியும்.    உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்கள் எல்லாம் முதலையின் ''தலைப்பக்கத்தைச்'' சேர்ந்தவர்கள். பிறகு முதலையின் பின் பக்கம் மெல்ல குறுகலாகச் செல்லும் ''வால்''  பக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஊழியர்கள். தலை எவ்வழியோ அப்படித்தான் வாலும் போகும்.  
                      அப்படித்தான் இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிக்கலாச்சாரம் என்பதே சீர்கெட்டுப் போயிருக்கிறது என்றால் அதற்கு இந்த இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சி முறை தான் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எந்த தேவைகள் என்றாலும் அரசு அலுவலகம் செல்லவேண்டும் என்றால் வெறும் கையோடு செல்லமுடியாது. அதாவது காசு இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது என்பது இன்றைய தமிழக மக்களின் கசப்பான அனுபவமாகும்.
                 வேலைக்கேற்ப - அந்த வேலையின் தன்மைக்கேற்ப நூறிலிருந்து பல லட்சங்கள் வரை கொட்டி அழுதால் தான் அங்கே நம் வேலை நடக்கும். இறப்பு சான்றிதழ் வாங்குவதாக இருந்தாலும் கூட காசு கொடுத்தால் தான் வாங்க முடியும் என்ற ''நல்லப்  பழக்கம்'' என்பது இங்கே ''தேச உடைமை'' செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது. முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தில் புறப்பட்டு,   அமைச்சர்கள் மற்றும் மேலே   சொன்ன  உயர்மட்ட அதிகாரம் படைத்தவர்கள்  அலுவலகம் வழியாக பாய்ந்து  கீழே  உள்ள  மற்ற  பிரிவு  அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரை வந்து சேருகிறது. 
                இந்த சூழ்நிலையில் சேவை மனதோடு செய்கிற  நல்ல பணிக்கலாச்சாரத்தை எங்கே பார்ப்பது...? இதில் என்ன அளவுகோல் வைத்து சிறந்த ஊழியர்களை தேர்ந்தெடுப்பீர்கள்....? அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அந்த மூன்று பேர் நிச்சயமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களாக தான் இருப்பார்கள். ஆளுங்கட்சியின் பிரச்சாரங்களுக்கு தேவைப்படுபவர்களாக தான் அவர்கள் இருப்பார்கள். எப்படியிருந்தாலும் இந்த விருதும்  கூட காசு கொடுக்காமல் அவர்களுக்கே கூட கிடைக்காது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. .
             முதல்வர் அவர்களே... எவ்வளவோ அதிரடி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். அதைப்போல் முதலில் தாராளமயமாகிவிட்ட ஊழலையும், இலஞ்சத்தையும்  ஒழித்துக்கட்டுங்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுங்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் இருக்கும் போது பணியாளர் தேர்வாணையம் எதற்கு....? தேர்வாணையமும் காசு சம்பாதிப்பதற்கான ஏற்பாடு தான். அதையும் ஒழித்துக்கட்டுங்கள். பைசா செலவில்லாமல் படித்து, பைசா செலவில்லாமல் வேலை கிடைத்தாலே போதும், பிறகு தானாக சிறந்த ஊழியர்கள் கிடைப்பார்கள். அத்தனை பேரும் சிறந்த ஊழியர்கள் தான்.
                இதை நீங்கள் மேலிருந்து செய்து காட்டுங்கள். தலை நன்றாக செயல்பட்டால் வாலும் நன்றாக செயல்படும்.

கருத்துகள் இல்லை: