ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மக்களின் வாழ்க்கைநிலை அறியாத மாமன்னன் மன்மோகன் சிங்...!

                                                       வாழ்க்கை எளிதாக இல்லை பிரதமரே!
                                                                         -சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,
             இது ஒரு ஆபத்தான காலம். நல்லெண்ணங்களின் அடிப்படையில் அமைந்த சில புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து மறுபரிசீலனை தொடங்கிவிட்டது. சில தீர்மானங்களின் அடிப்படைகளைச் சிதைக்கும் வகையில், வேறு சில தீர்மானங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவை குறித்தெல்லாம் என்ன சொல்வது? பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் புத்தாண்டு செய்தியில் நெருடலான கேள்வி இது தான்.
 

ஐந்து அம்சத் திட்டம்!

              ஒரு சக்தி வாய்ந்த லோக் பால் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மேலவையில் இதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினை எவ்வாறு நிறைவேற்றப்போகிறார்கள் என்றும் இதுவரை கூறவில்லை. எனினும், வாழ்க்கைப் பாதுகாப்பு (கல்வி, உணவு, சுகாதாரம், வேலை வாய்ப்பு குறித்த பாதுகாப்பு), பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு என ஐந்து அம்சத் திட்டத்தினை பிரதமர் அறிவித்திருக்கிறார்.

லோக்பால் நாடகம்!

            முதலில் லோக்பால் சட்டத்தினை எடுத்துக்கொள்வோம். மாநிலங்களவையில் சில முக்கியமான திருத்தங்களுடன்தான் மசோதாவினை நிறைவேற்ற முடியும் என்ற நிலைமை முன்கூட்டியே தெரிந்தும் கூட,  அங்கு ஒரு நள்ளிரவு நாடகம் நடத்தப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும், மக்களவையிலும் எவ்வித ஆட்சேபணையினையும் எழுப்பாத ஐ.மு. கூட்டணியின் கூட்டாளி திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு திறம்பட உதவி செய்தது.
            இந்த மசோதா மட்டுமே போதுமானதல்ல எனவும், வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்கும் வகையிலான ஆட்சியமைப்புச் சீர்திருத்தம் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். பொருளாதாரத்தினை தாராளமயப்படுத்தியதன் பின்னணியில், ஊழலில் சில புதிய வடிவங்கள் தோன்றியுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், அது உருவாக்கியிருக்கும் சலுகை சார் முதலாளித்துவம் குறித்து வாய் திறக்கவில்லை. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் சட்டத்திற்கு ஆதரவாகவும் எழுந்த மக்களின் ஆர்ப்பரிப்பில், இரண்டு விஷயங்கள் அமிழ்ந்து போய்விட்டன. நீரா ராடியா ஒலி நாடாக்களில் வெளிவந்த உண்மைகளும், பணம் கொடுத்துப்பெறும் செய்தி ஆகிய இரண்டுமே அவை. ஊழல் மலிந்த அரசியல்வாதி - அரசு அதிகாரி - முதலாளி - கார்ப்பரேட் ஊடகம் என்ற தகாத கூட்டே வளர்ந்து வரும் சலுகை சார் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதிராக இலட்சக்கணக்கில் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்தபோது அந்தச் செய்தியினை பார்வை படாத மூலையில் வெளியிட்ட ஊடகங்கள்தான், இன்று அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் பின்னால், வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. கீழ்மட்ட ஊழலில் அரசு நிர்வாகத்தின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை  ஊழியர்களை குறிவைக்கும் இந்த ஊடகங்கள் மெகா ஊழல்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. அவுட்சோர்சிங் மூலம் வேலைகளை வெளியாருக்கு தந்துவிட்ட நிலையில், நான்காம்  பிரிவு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் என்பதை சி.பி.ஐ (எம்) உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவையில் சுட்டிக்காட்ட நேர்ந்தது. இந்தியா உலகில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உயரவேண்டும் எனில், நாட்டின் இயற்கை வளங்களில் நடக்கும் மெகா ஊழல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத் தப்படவேண்டும்.

“ஊக்குவிப்பும்” “சுமையும்”!

           பிரதமரின் ஐந்து அம்சத் திட்டத்தில் உள்ளார்ந்த முரண்பாடுகள் உள்ளன. அதிகரித்து வரும் இந்தியாவின் நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பது பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. மானியங்களைக் குறைப்பதன் மூலம்தான் இது சாத்தியம் என பிரதமர் கூறுகிறார். மானியங்களுக்கான செலவு ஆண்டொன்றிற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், பெட்ரோலியத் துறையிலிருந்து மட்டுமே அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானம் ரூ.1,30,000கோடியெனஅரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
           கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்  ஆவணங்களின் படி, அரசு வசூலிக்காமல் விட்ட அதிபயங்கரமான சலுகைத்தொகை ரூ. 14,28,028 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகை ரூ.3,63,875 கோடி. இவ்வாண்டில் எதிர்பார்க்கப்படும் ரூ. 4,65,000 கோடி. வசூலிக்காமல் விடப்பட்ட சலுகைத் தொகையான ரூ.14,28,028 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்த நிதிப்பற்றாக்குறை என்ன மிகப் பெரியதா? முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை “ஊக்குவிப்பு” என்கிறார்கள். இந்தியாவின் 80 கோடி ஏழை மக்களுக்குக் கொடுக்கப்படும் தொகையினை “சுமை” என்கிறார்கள். இந்த தொகை கூட, ஏழை மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு வாழ்வதற்குத்தானே தவிர, அவர்களின் வசதியான வாழ்க்கைக்காக அல்ல. இதைத்தான், பொருளாதாரப் பாதுகாப்பில் சுமையாக உள்ளது எனவும், அதனைக் குறைப்பது அவசியம் எனவும் பிரதமர் கூறுகிறார். மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பினை இதன் மூலம் எப்படி உறுதி செய்ய முடியும்? பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகளை கறாராக வசூலித்து, அத்தொகையினை பொது முதலீடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தானே அதனைச் சாதிக்க முடியும்?

சர்வதேச விலை சரிதானா?

             எரிசக்திப் பாதுகாப்பு குறித்துப் பேசும் போது, எண்ணெய் விலையினை சர்வதேச விலையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உண்மையான உற்பத்தி விலை எதுவாக இருந்தாலும் சரி, அதைத்தாண்டி சர்வதேச விலையுடன் இணைப்பது என்பது, தொடர்ந்து அதன் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் ரூ.10,998கோடி எனவும், வரவுக்கும் செலவிற்கும் இடையிலான கையிருப்பு உபரி  ரூ. 49,470 கோடி எனவும் அதன் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது மின் கட்டணத்தையும் சர்வ தேச விலை அளவுடன் இணைக்க வேண்டும் என்பது மக்களின் மீதான சுமையினை மேலும் அதிகரிப்பதற்குத்தானே உதவும்?

சுற்றுச் சூழல் பாதுகாப்பு!

              அதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகள், எரிசக்தி தேவைகளுடன் முரண்பட வேண்டுமென்பதில்லை. அண்மையில் டர்பன் நகரில் நடந்த வெப்ப-தட்ப மாற்றங்கள் குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் கார்பன் புகை வெளியேற்றத்தினைக் கட்டுப்படுத்துவோம் என இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து அத்தகைய வாக்குறுதிகளை பெறாமல் இந்தியா வாக்குறுதி அளித்தது துரதிருஷ்டமே.
               எரிசக்தி உற்பத்தி கணிசமாக உயராமல், வறுமை ஒழிப்பு சாத்தியமல்ல என பிரதமர் கூறுகிறார். இன்றைக்கு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப்பு கிடையாது. மூன்றில் இரண்டு பகுதியினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. குழந்தைகளில் சரி பாதி சத்துணவின்றி வாடுகின்றனர். மூன்றில் இரண்டு பகுதி கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

2011 உணர்த்தும் பாடம்!

              இந்நிலையில், பிரதமர் வெளிப்படுத்தியிருக்கும் கவலைகளுக்கும், அவர் கூறியிருக்கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. வாழ்க்கைப் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் உள்ளீடற்றவை. உண்மையிலேயே மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்றால், பொருளாதரச் சீர்திருத்தங்களையும், தாராளவாதக் கொள்கைகளையும் முற்றிலுமாகத் திரும்பப்பெற வேண்டும்.
                   பிரதமரும், ஐ.மு.கூட்டணியும் விஷயங்களை மெள்ள மெள்ள மறு பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் இந்திய மக்கள் மன நிறைவடைய முடியாது. வாழ்க்கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமெனில், அரசாங்கத்தின் முரண்பட்ட அணுகு முறைகளிலிருந்து அதனை விலகச் செய்வதற்கு, மக்கள் சக்தியினை திரட்டுவதும் நிர்ப்பந்திப்பதும் தேவை. 2011 அனுபவம் அதைத் தான் உணர்த்தியிருக்கிறது.

தமிழில் : ஜெ. விஜயா நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’(3.1.2012)

கருத்துகள் இல்லை: