ஞாயிறு, 13 மே, 2012

சச்சின் மாநிலங்களவை உறுப்பினர் ஆக தகுதியானவரா...?

            இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள பெயர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் இவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.தற்போது பரிந்துரைக்கப்பட் டுள்ள சச்சின், ரேகா, அனு ஆகா ஆகிய மூவருமே மகாராஷ்டிரா மாநிலத்தவர் என்பதும் விரைவில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் எதிர்பாராத இணைப்புச் சம்பவங்கள் அல்ல. அவை தெரிந்து தான் இணைக்கப்பட்டுள்ளன.
              சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. முரண்பட்ட கருத்துக்களில் அவருக்கு எதிரானவையே ஏராளம். எந்தவொரு நிகழ்வு குறித்தும் இதுவரை கருத்து கூறாத சச்சின் நாடாளுமன்ற உறுப்பினரான பின் மட்டும் கூறி விடப் போகிறாரா? சர்ச்சைகள்அவருடைய கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து அவர் மட்டுமே கவலைப்பட வேண்டும். சாதனைகளுக்காக மட்டும் ஆடும் நபர்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அதுபோல் சச்சினும் பல சர்ச்சைகளைத் தவிர்த்து வருகிறார். “மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனைச் சும்மா இருக்கவிடுவதில்லை” என்ற சொலவடைக்கு உயிர் கொடுப்பது போல் சச்சினும் சிலவற்றில் சிக்கியுள்ளார். 
ஷூமேக்கர் சச்சினுக்கு வழங்கிய பெர்ராரி கார்
             மதுரை உயர்நீதிமன்றத்தில் சச்சின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமைக்காவில் நடந்த விருந்து ஒன்றில் மூவண்ணக் கொடி வரையப் பட்ட கேக் ஒன்றை சச்சின் வெட்டியதன் மூலம் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்துவிட்டார். எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சினை எம்.பி. ஆக நியமித்தது தவறு என்று மேலூரைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2003ம் ஆண்டில் அவருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி 360 மாடனா ரக காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. இதற்கு அவர் இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்க வேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தார். அன்றைய காங்கிரஸ் அரசு அவருக்கு வரி விலக்கு அளித்தது. அரசிடம் வரிவிலக்கு பெற்ற காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.
           இதற்கு சச்சின் அரசுக்கு மூலதன லாப வரி கட்டவேண்டும். ஆனால் கட்டவில்லை. சச்சின், பந்த்ராவில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு சொகுசு மாளிகையைக் கட்டியுள்ளார். 2011 ம் ஆண்டில் அவர் அந்த வீட்டுக்கு குடி ஏறினார். மும்பை மாநகராட்சி அவருக்கு தண்டம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியிடம் குடியிருப்பு தகுதிச் சான்றிதழ் பெறாமல் குடியேறியதற்கு ரூ.4.35 லட்சம் தண்டம் கட்டுமாறு மும்பை மாநகராட்சி கூறியது. அவருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் அரசு மாநகராட்சி ஆணையரிடம் பரிந்துரை செய்தது. நோட்டீசைப் பெற்றுக்கொண்ட சச்சின் தண்டத்தொகையைக் கட்டிவிட்டார். பல விளம்பரங்களுக்கு மாடலாகச் செயல்பட்ட சச்சின், விளம்பரங்களில் தான் ஒரு நடிகர் மட்டுமே. கிரிக்கெட் ஆட்டக்காரர் இல்லை என்று வாதாடி ரூ.2 கோடி வரிவிலக்குப் பெற முயன்றார்.
           இவர் உலகிலேயே மிகப் பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர். அதுமட்டுமல்ல தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டுள்ளார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரமும், கார் செலவுகளுக்காக (இவரிடம் 40 கார்கள் உள்ளன) ரூ.1,42,824 - ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். வருமானவரித்துறை இவற்றை நிராகரித்து விட்டது. தற்போது இவர் எம்.பி.ஆக விரும்புவது எதற்காக என்பதை யூகிக்க முடிகிறது. காங்கிரஸ் சில அரசியல் காரணங்களுக்காக சச்சினுக்கு எம்.பி. பதவி அளிக்க முன் வந்துள்ளது. சச்சினும் தற்சார்பு நலன்களுக்காக அதை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டார் என்பது தான் உண்மை. 
நன்றி : தீக்கதிர் / 13.05.2012

கருத்துகள் இல்லை: