வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தொடர்ந்து குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் பணவேட்டையாடும் தனியார் பள்ளிகள்....!

               இதுவரை பணவேட்டையாடி வந்த தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியிலேயே படிக்கும்  குழந்தைகளின்   உயிர்களைக் குடிப்பது என்பது தொடர்கதையாகிவிட்டது. 
          அண்மையில் தான் ''சீயோன்'' என்ற பள்ளியின் பேருந்தில் அதேப்  பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பஸ்ஸில் அலட்சியமாய் விடப்பட்டிருந்த ஓட்டையின் வழியாக சாலையில்  விழுந்து அதே பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறி உயிரிழந்தது.  கோரக்காட்சியை பார்த்து தமிழகமே அழுதது. 
             அந்த கண்ணீரே இன்னும் காயவில்லை. அதற்குள் இன்று அதே சென்னை  - கே. கே. நகரில் உள்ள பத்மா செஷாத்திரி பால பவன் சீனியர் செகண்டரி ஸ்கூலில் இன்று காலை பள்ளியின் உள்ளேயே இருக்கும் நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி இறந்திருக்கிறான்.
             என்றைக்கு கல்வி கடைச்சரக்கானதோ அன்றையிலிருந்தே குழந்தைகளின் உயிருக்கு உத்திரவாதமில்லை  என்றாகிவிட்டது. கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 92 குழந்தைகளில் ஆரம்பித்து, இன்று உயிரிழந்த குழந்தைகள் வரை அரசின் அலட்சியப் போக்கும், பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் தனியார் பள்ளிகளுமே காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
              தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனேயே அதை டாக்டர் ஆக்க வேண்டும்... இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்றெல்லாம் துடித்து, தங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஒரு குறிப்பிட்ட  பள்ளியிலேயே முட்டி மோதி இடம் வாங்கி தன்  ஆசைக் குழந்தைகளை படிக்கவைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை கண்காணிக்கத் தவறிவிடுகிறார்கள். பெரும்பாலான விபத்துக்களுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.  
            அதுவும் இதுபோன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட ஆபத்தான விளையாட்டுகளும், பயிற்சிகளும் குழந்தைகளின் பெற்றோர்களின் கண்காணிப்பில் தான் நடத்தப்படவேண்டும் என்பதை அரசு கட்டயமாக்கவேண்டும். அதனால் பள்ளிகளில் பாடநேரத்தில் இதுபோன்ற விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதிக்கக்கூடாது. விடுமுறை நாட்களில் பெற்றோர்களின் கண்காணிப்பில் மட்டுமே நடத்த அனுமதிக்கவேண்டும்.  ஒரே நேரத்தில் நிறைய குழந்தைகள் பயிற்சியில் ஈடுபடுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை நியமிக்க அரசு வற்புறுத்தவேண்டும். நீச்சல் விளையாட்டுக்கென்றே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை  தனியார் பள்ளிகளும்,  தனியார் பயிற்சி நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை அரசும், தமிழக நீச்சல் கழகமும் கண்காணிக்கவேண்டும். 
           நம் வீட்டு குழந்தைச்செல்வங்கள் பள்ளியிலும், சாலைகளிலும், வீட்டிலும், போழுதுபோக்கும் இடங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை: