புதன், 31 அக்டோபர், 2012

முதலாளித்துவத்திற்கு ஓர் எச்சரிக்கை..!

கட்டுரை : விக்னேஷ் சேரல்         
        
        “வெனிசுலா இனி ஒருபோதும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் திரும்பிச் செல்லாது; மாற்றத்தை நோக்கிய நமது மகத்தான பயணம் தொடரும்; 21ம் நூற்றாண்டின் சோசலிசத்தை நோக்கிய வெனிசுலாவின் பயணம் உறுதியுடன் தொடரும்” என்று உணர்ச்சிமிகு முழக்கங்களோடு நான்காவது முறையாக ஜனாதிபதி பணியைத் தொடர்கிறார் ஹியூகோ சாவேஸ்.
          80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் - 55.11 சதவீதம் - பெற்று, தலைநகர மாவட்டமான காரகாஸிலும், மொத்தமுள்ள 23 மாநிலங்களில் 21 மாநிலங்களிலும் மிகப்பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் ஹியூகோ சாவேஸ்.

‘சோசலிசமே எதிர்காலம்’ என்ற முழக்கத்திற்கு கிடைத்த வெற்றி இது.

       இத்தேர்தலில் அமெரிக்க ஆதரவோடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களின் பலத்தோடு சாவேஸூக்கு எதிராக களமிறங்கிய ஹென்ரிக் கேப்ரிலஸ் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் (44.27 சதவீதம்) பெற்றிருக்கிறார் என்ற போதிலும், அவரும் ஊடகங்களும் இந்த தேர்தலை, ‘மோசடித் தேர்தல்’ என்று குற்றம் சாட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாவேசுக்கு மக்கள் அளித்த பேராதரவையும், அவரது வெற்றி நாடு முழுவதும் திருவிழா போல கொண்டாடப்படுவதையும் பார்த்து, “சாவேஸின் வெற்றியை முழுமையாக ஏற்கிறேன்; அங்கீகரிக்கிறேன்” என்று சொல்ல வைத்திருக்கிறது.
         உலகத்திலேயே தாங்கள் தான் மிகச்சிறந்த ஜனநாயக நாடு என்றும், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யவேண்டிய பணி தங்களுக்குக் காத்திருக்கிறது என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மார்தட்டிக் கொண்டிருக்கிறது.
            ஆனால், வெனிசுலா என்கிற லத்தீன் அமெரிக்க நாடு அமைதியாக, ஆரவாரமின்றி, அற்புதமாக ஜனநாயகத்தை நிலைநாட்டியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்த வாக்காளர்களில் 80.9 சதவீத மக்கள் அக்டோபர் 7 ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள். தாங்களாகவே முன்வந்து மகிழ்ச்சியோடும், சீரிய உணர்வோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வாக்களித்தார்கள்.
           மக்களின் முழுமையான பங்கேற்புடன் கூடிய ஜனநாயகம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், பகிரங்க மாகவும் நடந்திருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா.
           சோசலிசத்தை நோக்கிய சமூகத்தை கட்டி அமைத்துக்கொண்டிருக்கிறோம் என சாவேஸ் கூறுகிறபோது, அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் பிரச்சாரம் செய்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய ஊடகங்களுக்கு, தேர்தல் ஜனநாயகம் என்பதன் உயர்ந்த பொருளை உணர்த்தியிருக்கிறது வெனிசுலா.
             முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறபோது, எப்படியேனும் தன்னைக் காத்துக்கொள்ள உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத தாக்குதல்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிற போது, சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கிற சாவேஸ் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது, முதலாளித்துவ உலகிற்கு ஓர் எச்சரிக்கையே!

கருத்துகள் இல்லை: