வெள்ளி, 2 நவம்பர், 2012

ரிலையன்ஸ் கொள்ளைக்கு பிரதமர் துணை போகிறார்....!

         கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மிகப்பெரும் கொள்ளைக்கு ஆதரவாக மன்மோகன்சிங் அரசு செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
        இந்த வாரத் துவக்கத்தில் அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் சில மாறுதல்களைச் செய்த பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ப்பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியை நியமித்துள்ளார். இந்த மாற்றத்தின் பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தம் இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டின் வளங்களையெல்லாம் தங்கு தடையின்றி கொள்ளையடிப்பதற்கு பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக வழி வகை செய்துதரும் காங்கிரஸ் கூட்டணி அரசு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையில் ஒட்டு மொத்த வளத்தையும் கொள்ளையடிப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உதவும் விதமாகவே அமைச்சரை மாற்றியுள்ளது. இந்தப்பின்னணியில், நாட்டின் மிகப்பெரும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பகுதியான ‘கே.ஜி. பேசின்’ என அழைக்கப்படும் கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகைகளை முழு வீச்சில் கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சட்ட விரோதமான வழிகளில் உதவி செய்ய அரசு துணைபோகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
         இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
            கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகைகளில் நடக்கும் கொள்ளை குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனை எழுப்பி வருகிறது. கடந்த 2006 - ம் ஆண்டு முதலே இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைவிடாமல் எழுப்பி வருகிறார்கள். எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு எரிவாயு விலை உயர்த்தப்பட்டது; தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிகமாக செலவாகிறது என்று கணக்கை மிகைப்படுத்திக்காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ணயிக்க வேண்டுமென அரசை நிர்ப்பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி (தங்கம் முலாம் பூசிய கவரிங்கை விற்பது போல) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடித்தது; இதன் விளைவாக மின்சாரம் மற்றும் உரங்களின் விலை அதிகரித்தது போன்ற அனைத்தையும் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் ஏராளமான கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. கடைசியாக 2011 மே மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன்சென், பிரதமருக்கு கடிதம் எழுதினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிர்ப்பந்திப்பதை ஏற்று எரிவாயு விலை ஒருபோதும் அதிகரிக்கப் படக்கூடாது என அக்கடிதத்தில் தபன்சென் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டது; ரிலையன்ஸ் நிறுவனத்தின் விலை உயர்வு கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும் கூட, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பதாகவே பிரதமர் அலுவலகத்தின் தலையீடு அமைந்தது. இந்தப் பின்னணியிலேயே, பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திலிருந்து ஜெய்ப்பால் ரெட்டி மாற்றப்பட்டிருப்பது பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
            இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து எப்படிப்பட்ட நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பது இங்கே அப்பட்டமாக அம்பலமாகிறது. பெட்ரோலியத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர், மிக விரைவான முடிவுகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன. இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஒட்டுமொத்த நாடே கவனித்துக்கொண்டிருக்கிறது. மக்களின் நலன்களைக் காவுகொடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்கு உதவும் விதமாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்வதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரிலையன்ஸ் நிறுவனம் கேட்பதைப்போல இயற்கை எரிவாயு விலையை பிரதமரோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமோ உயர்த்தக்கூடாது. ஒப்பந்தப்படி அதற்கான காலம் 2014 ஏப்ரல் மாதத்திலேயே வருகிறது. அதேபோல, தனது மூலதனச்செலவு அதிகரித்து விட்டதாகக் கூறி அரசாங்கத்திடமிருந்து, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கை ஒருபோதும் ஏற்கப்படக்கூடாது. மேற்கண்ட நிறுவனத்தின் மூலதனச் செலவு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட எரிவாயுவின் அளவு உள்ளிட்ட அனைத்தையும் பற்றி மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு, தபன்சென் எம்.பி., எழுதிய கடிதத்தின் நகலையும் பிரகாஷ் காரத் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: