செவ்வாய், 11 டிசம்பர், 2012

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் ஏ.கே.கோபாலனுக்கு வங்கதேசத்தின் உயரிய விருது...!

        இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியுமான ஏ.கே.கோபாலனை வங்கதேசம் அரசாங்கம் கவுரவிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவராக விளங்கிய தோழர் ஏ.கே.கோபாலன், வங்க தேசத்தின் விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பைக் கணக்கில்கொண்டு இறப்பிற்குப் பிந்தைய விருதாக ‘சுதந்திர விருது’ வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. 
        வருகிற  டிசம்பர் 15ஆம் தேதி டாக்காவிலுள்ள வங்கபந்து சர்வதேச மாநாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி சில்லூர் ரஹ்மான், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய இருவரும் இணைந்து விருதை வழங்குகிறார்கள். ஏ.கே.கோபாலனின் மருமகனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை துணைத்தலைவருமான பி.கருணாகரன் விருதைப் பெற்றுக் கொள்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏகேஜி பவனுக்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், ஏ.கே.கோபாலனை கவுரவப்படுத்தும் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
         கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் ஜோதிபாசு, இந்திரஜித் குப்தா ஆகியோரையும் வங்கதேச அரசு ஏற்கனவே ’சுதந்திர விருது’ வழங்கிக் கவுரவித்துள்ளது. நீண்ட காலம் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும், பாட்டாளி மக்களின் படைத்தலைவராகவும் செயலாற்றிய ஏகேஜி, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற நிலையில் அவர் வழங்கிய ஆதரவைக் கணக்கில் கொண்டு வங்க தேசத்தின் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. வங்கதேச சுதந்திரத்தின் 40 - ஆம் ஆண்டு கொண்டாட்ட தினத்தில் இவ்விருது வழங்கப்படுகிறது. வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்றது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா இங்கெல்லாம் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் எவ்வித ஊசலாட்டமும் இல்லாமல் ஆதரவு தெரிவித்த தலைவராவார் ஏ.கே.கோபாலன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான பி.கருணாகரன் விருதைப் பெற்றுக் கொள்வதற்காகவும், வங்கதேசத்தின் விருந்தினராகவும் வருகிற டிசம்பர் 13 அன்று டாக்காவிற்குச் செல்கிறார். 

கருத்துகள் இல்லை: