சனி, 29 டிசம்பர், 2012

பிரார்த்தனையை நிறுத்தி விடு...! கோபத்தைக் குவித்து விடு...!












அ . குமரேசன்
பத்திரிகை ஆசிரியர்
        கோடிக்கணக்கானவர்களின் பிரார்த்தனைகளோடு அவர் சிங்கப்பூர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பல கோடிப்பேர் விரைவில் அவர் குணம் பெற பிரார்த்தித்தார்கள். இன்று அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறார்கள்.

அவர் இறந்துவிட்ட செய்தியோடுதான் இன்றைய நாள் தொடங்குகிறது. இனியாவது பிரார்த்தனைகளை (அட அது எந்த மதத்தின் கடவுளை நோக்கியதாக இருந்தாலும்) விட்டுத்தொலையுங்கள். அவரது உயிரைக் காப்பாற்ற உதவாத பிரார்த்தனைகளால் அவரது ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?

பிரார்த்தனைகள் ஆண்டவனாகப்பட்டவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பவைத்து நம் நியாய ஆவேசங்களைத் தணியவைப்பதற்கே. நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நம்மை ஒதுஙகவைத்து அயோக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கே.

தில்லிப் பேருந்துப் பாலியல் வன்கொடுமையை இழைத்த குற்றவாளிகள் மீது கோபப்படுவது, அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கக்கோருவது, கடுமையான சட்டங்கள் தேவை என வலியுறுத்துவது... இவை மட்டும் போதுமா?. நாடு முழுவதும் இப்படிப்பட்ட வேட்டைகளுக்கு இலக்காக்கப்படுகிற பெண்களுக்காக, அவர்களைத் தாக்குகிற ஆணாதிக்க ஆணவத்திற்கு எதிராக யோசிக்க வேண்டாமா?

பெண் என்றால் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரம்புகட்டுகிற பழைய/புதிய பண்பாட்டு பீடாதிபதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

அன்பான அம்மாவாய், அடக்கமான மனைவியாய் வீட்டோடு இருந்தால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று போதிக்கிற மதவாதிகள் மீது
உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

பெண்ணைக் கடவுளாகச் சித்தரிப்பது நம்ம கலாச்சாரமாக்கும் என்று சொல்லிக்கொண்டே அவளைக் கோவிலின் கருவறைக்குள் கூட அனுமதிக்காத ஆகமவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

ஆண் தனது வக்கிரப்பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடாமல், பெண் தனது உடலை வெளிக்காட்டுகிற ஆடைகளை அணியலாகாது என்று அவள் மீது புடவைகளையும் பர்தாக்களையும் அங்கிகளையும் போர்த்துகிற வன்மர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

சாதித்தூய்மையைக் காக்க வேண்டிய பெண் காதல் திருமணம் செய்துகொள்வதன் மூலம், அதிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் விந்துக்களைப் பெறுவதன் மூலம் சமூகத்தை மாசுபடுத்துகிறாள் என்று கூறி, அவளது வாழ்க்கைத் துணை தேர்வு உரிமையைக் கொச்சைப்படுத்தி நிராகரிக்கிற சாதியவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

பெண்ணும் ஆணும் பழகினால் அது பாலியல் நோக்கம் கொண்டதுதான், அதில் நட்போ தோழமையோ இருக்க முடியாது என்று அறிவித்து, அப்படிப் பழகுகிறவர்களுக்குப் பாடம் கற்பிப்பதாகக் கையில் தாலிக்கயிறு அல்லது ரர்க்கிக் கயிறுடன் அலைகிற பண்பாட்டு அடக்குமுறையாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

“பொம்பளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா அழகா என்கிட்ட வா... உன்னை நான் ஏத்துக்கிடுறேன்” என்று வசனம் பேசுகிற சூப்பர் ஸ்டார்களின் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

ஒரு பக்கம் இப்படிப்பட்ட பரபரப்பான “கற்பழிப்பு” செய்திகளை வெளியிட்டுக் கொண்டே, பெண்ணை வெறும் போகப்பொருளாக அரைகுறை அம்மணத்தோடு நிறுத்தும் நுகர்வுப்பொருள் விளம்பரங்களைக் கூச்சமில்லாமல் வெளியிடும் ஊடகங்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

இப்படிப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம், பெண்களைப் பாதுகாக்க உரிய சட்டங்கள் கொண்டுவருவோம் என்று பேட்டிகொடுத்துவிட்டு, பெண்ணை மேலும் மேலும் ஓரங்கட்டுவதற்கான பொருளாதாரத் துரோகக் கொள்கைகளைச் செயல்படுததும் ஆட்சியாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

வன்முறைகளையும் ஊழல்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே, இந்த அடிப்படையான அம்சங்கள் குறித்துச் சிந்திக்க விடாமல் தடுத்து. மையமான அரசியல் போராட்டங்களில் மக்கள் பங்கேற்க விடாமல் கெடுத்து, உலக-உள்நாட்டு சுரண்டல் கூட்டங்களுக்குத் தொண்டாற்றுகிற நுனிப்புல் மேய்ச்சல்காரர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

அரசியல் - சமுதாய - பொருளாதார போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை, இந்த நாட்டைப் பொருததவரையில் வர்க்க - வர்ண - பாலினப் பாகுபாட்டுப் போராட்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற புரிதலோடு போராட்டக் களம் காண்கிற இயக்கங்களோடு சேர்ந்து உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

நம் கோபத்தின் வெப்பம் இவ்வாறு குவிகிறபோது எழுகிற நெருப்பில்தான் இந்த இழிவுகள் எரிந்து சாம்பலாகும்.

கருத்துகள் இல்லை: