புதன், 12 டிசம்பர், 2012

புதுச்சேரியில் இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா...!

          இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா  வருகிற  டிசம்பர்-16 அன்று புதுச்சேரியிலும், டிசம்பர்-18 அன்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இவ்விருநாடுகளும் அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்ற நாடுகள். வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹோ-சி-மின்  இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களோடு தொடக்கத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்தார். 1927 - ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் மாநாட்டில் ஜவகர்லால் நேருவை ஹோசிமின் சந்தித்தார். பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய வியட்நாம் மக்கள் 1954 - ஆம் ஆண்டில் விடுதலை பெற்றனர். வியட்நாம் விடுதலை பெற்றதும் அந்நாட்டிற்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர்களில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார். நாட்டின் விடுதலைக்கு பின் வியட்நாமின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஹோசிமின் 1958 - ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
         இரு நாடுகளிடையே நட்புறவும், ஒருமைப்பாடும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே வேர்விட்டு வளர்ந்தது. வியட்நாமின் தென்பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்ற வேளையில், தென் வியட்நாம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மக்கள் தங்களது சகோதர ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் பல்வேறு இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்தினர். உலகின் மிகப் பெரும் ஆதிக்க சக்தியாக விளங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைப்பாவை பொம்மை அரசையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய சின்னஞ்சிறு வியட்நாமிய மக்கள் 1975 - ஆம் ஆண்டில் இறுதி வெற்றி பெற்றனர். வியட்நாமின் விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை அந்நாட்டு மக்கள் புரிந்துள்ளனர். வடக்கு, தெற்கு எனப் பிரிந்திருந்த வியட்நாம் ஒரே நாடாக இணைந்தது. வியட்நாமின் பாரம்பரியம், தனித்தன்மை ஆகியற்றினடிப்படையில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் அந்நாட்டு மக்கள் தங்கள் மண்ணில் சோஷலிச அமைப்பைக் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டக் காலத்தில், ''உன் பேரும் என் பேரும் வியட்நாம், ஒரு தாயின் மக்கள் நாம் வியட்நாம்'' என்ற முழக்கம் இந்தியா வெங்கும் எதிரொலித்தது. இந்தியா, வியட்நாம் மக்களிடையே நிலவும் நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலக அமைதிக்கான போராட்டங்களில் ஒன்றிணைந்து நிற்கவும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் தொடர்ந்து பணியாற்று வருகிறது. இந்தப் பணியின் தொடர்ச்சியாக அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகமும், வியட்நாம்- இந்தியா நட்புறவு அமைப்பும் இணைந்து, நம் நாட்டிலும், வியட்நாமிலும் இந்தியா- வியட்நாம் நட்புறவு விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. 
           முதல் நட்புறவு விழா மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் நடைபெற்றது. இரண்டாவது விழா வியட்நாமிலும், மூன்றாவது விழா மீண்டும் இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. நான்காவது விழா மீண்டும் வியட்நாமில் நடை பெற்றது. தற்போது ஐந்தாவது இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா புதுச்சேரியிலும், சென்னையிலும் நடைபெற உள்ளது. வியட்நாமிலிருந்து வருகை தரும் குழுவில், வியட்நாம்- இந்தியா நட்புறவு அமைப்பின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என 30 பேர் இடம் பெறுகின்றனர். புதுச்சேரியில் டிசம்பர் - 16 அன்றும், டிசம்பர் - 18 அன்று சென்னையிலும் வியட்நாம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னரும், வியட்நாம் நாட்டின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சென்றனர். தற்போது தான், முதல் முறையாக, வியட்நாம் கலைக்குழுவினர் புதுச்சேரிக்கும் தமிழகத்திற்கும் வந்து, கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். வியட்நாமின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இந்த இரு மாநிலங்களின் மக்களுக்கும் முதன்முறையாகக் கிடைக்க உள்ளது. 
நன்றி : 

கருத்துகள் இல்லை: