செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதியின் இல்லத்தை மூடிவைத்த புதுவை அரசு....!


     பாரதி சுதந்திர போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக மக்களிடம் எழுச்சித்தீயை மூட்டி, அக்னிக்குஞ்சுகளாய் கவிதைகளை படைத்த மண் புதுவை மண். அன்றைய காலக்கட்டத்தில் புதுவையில் ஈஸ்வரன் கோயில் தெருவில் கடற்கரையை ஒட்டி அவர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் புதுவை அரசு பல ஆண்டுகளாக பராமரித்து வந்தது. வெளிநாட்டிலிருந்தும், வெளியூரிலிருந்தும் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோர் பாரதியின் வீட்டிற்கு செல்வதில் தவறுவதே இல்லை. ஆராய்ச்சிப் படிப்புக்கும் இங்குள்ள புத்தகங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இந்த பாரதியார் இல்லத்தில் புதுச்சேரியிலுள்ள தமிழறிஞர்களும், புத்தக வாசிப்பாளர்களும், இலக்கியவாதிகளும் மாதம்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது வழக்கம். ஆண்டுக்கு இரு முறை பாரதியின் பிறந்தநாளின் போதும், நினைவுநாளின் போதும் அரசு இங்கே விழா எடுத்து பாரதியை சிறப்பிக்கும். பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களின் விழாக்களும் இங்கே பாரதியின் இல்லத்திலிருந்து தொடங்குவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.
         இவ்வளவு சிறப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள பாரதியின் இல்லத்தை  இன்று புதுச்சேரி அரசு பூட்டு போட்டு மூடிவைத்துள்ளது. பிரிட்டிஷ்காரர்களாலும், பிரஞ்சுக்காரர்களாலும் கட்டிப்போட முடியாத ஒரு மாமனிதன் வாழ்ந்த இல்லத்தை இன்று புதுச்சேரி அரசு பல மாதங்களாக மூடிவைத்துள்ளது. இன்று அந்த மகாகவியின் பிறந்தநாளில் கூட அவரது இல்லம் திறந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது. இப்படியாக பல மாதங்களாக மூடிவைத்திருப்பதை புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்கம் உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளும் அரசின் இச்செயலை வன்மையாக கண்டித்தும் அரசின் போக்கு மாறவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மந்திரிகளின் வீடுகளை  மராமத்து வேலைகளை செய்து அழகுபடுத்தியும் விரிவுபடுத்தியும் வீட்டைப் புதுப்பிக்கும் வேலைகளுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் மாநில அரசு பாரதியின் வீட்டைப் புதுப்பிப்பதற்கு தயங்குவதேன் என்பது புரியவில்லை.
               முதலமைச்சர் ரங்கசாமி எல்லா விஷயங்களிலும் காட்டும் மெத்தனப்போக்கை இதிலும் காட்டாமல், இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த அக்னிக்கவிஞன் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து ஒளியேற்ற வேண்டும் என்பது தான் புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பு  என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

கருத்துகள் இல்லை: