செவ்வாய், 1 ஜனவரி, 2013

பாரதி - பகத் சிங் கனவு கண்ட இந்தியாவை படைப்போம்....!



















            முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2012 - ஆம் ஆண்டில் பல்வேறு நல்ல நல்ல நிகழ்வுகளையும், பல்வேறு கசப்பான நிகழ்வுகளையும் கடந்து இன்று 2013 - ஆம் ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். இன்னிக்கு நிறைய பேரு தீர்மானம் போட்டுருப்பாங்களே...? இன்னியிலிருந்து நான் சிகரெட்டையே தொடவே மாட்டேன்னு ஒருத்தரூ முடிவெடுப்பார். இன்னொருத்தரு இன்னியிலிருந்து நான் தண்ணியே அடிக்கவே மாட்டேன்பா அப்படின்னு முடிவெடுப்பார். உடம்புக்கு ஆகாதுன்னு தானே இது போன்ற தீர்மானமெல்லாம் போடுறாங்க. உடம்புக்கு ஆகாதுன்னா உடனே விட்டுவிட வேண்டியது தானே அந்த சனியனை. அதுக்காக ஒரு நாள் பாத்து, தீர்மானம் போட்டு தான் விடுனுமாக்கும். ஆரம்பிக்கும் போது தீர்மானமா போட்டீங்க. இப்படி சில பேரு கூவிக்கிட்டு திரிவாங்கே.
             புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் இதுவல்ல. நாம் முடிவு செய்யவேண்டியது இதுவல்ல. வரும் புத்தாண்டில் நாம் என்ன செய்யவேண்டும். இந்த புத்தாண்டின் பலன் என்ன தெரியுமா...? நான் சொல்லுறேன் கேளுங்க..! ''வருமானம் கூடாது. வருமானத்திற்கு அதிகமா செலவு ஆகும். பணம் விரையமாகும். சேமிப்பு இருக்காது. பணவீக்கம் இன்னும் அதிகமாகும்.  வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். கடன் தொல்லை தாங்கமுடியாது. அதனால கணவன் மனைவிக்குள்ள சண்டைவரும்.  புள்ளைங்க படிப்பில் கவனம் செலுத்தமாட்டாங்க. சினிமா, வெளியூர் பயணம் குறைந்து போகும்''  இந்த புத்தாண்டு பலன் எந்த ''ராசிக்காரங்களுக்கு'' என்றால், இந்தியாவிலுள்ள அனைத்து ''ஜீவராசிகளுக்கும்'' இது தான் இந்த புத்தாண்டின் பலன்  என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிச்சைக்காரர்கள் மேலும் பிச்சைக்காரங்களா போயிட்டு இருப்பாங்க. ஆனா அவிங்க கிட்ட பேங்க் பாஸ் புத்தகம் இருக்கும், பான் கார்டு இருக்கும், ஏ . டி . எம். கார்டு இருக்கும். பசி இருக்கும். பணம் இருக்காது.
           இதெல்லாம் எதோ ஜோசியம் சொல்லுகிறேன்னு நினைக்காதீங்க. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் வகையறாக்கள் செய்யப்போகிற சித்து விளையாட்டுகள் ஏராளமா இருக்கு. அந்த சித்து விளையாட்டுகள் தான் மக்களை இந்தப் பாடுபடுத்தப்போகுது.
         இது தான் உண்மையான சுதந்திர இந்தியாவா...? ஒரு பக்கம் பணக்காரர்கள் பெரும்பணக்காரர்களாக வளர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கே ஏகப்பட்ட சலுகைகளை ஆட்சியாளர்கள் கொட்டிகொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் ஆட்சியாளர்களே  கோடிக்கணக்கான சாதாரண, நடுத்தர மற்றும் ஏழை மக்களை வாட்டிவதைக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவாகவும், ஒழியும் இந்தியாவாகவும் சுதந்திர இந்தியா இரண்டுப்பட்டு கிடக்கிறதே. இந்த பாகுபாடுகளை ஒழிக்க அல்லவா இன்றைய இளைஞர்கள் தீர்மானம் போடவேண்டும்.
          இதற்காகத்தானே இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ''சுதந்திர இந்தியா'' எப்படி இருக்கவேண்டும் என்று பாரதியும், பகத்சிங்கும் ஆகிய இரண்டு இளைஞர்கள்  கனவு கண்டார்கள். ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' என்று கனவு கண்டவன் மாவீரன் பகத்சிங் என்பதை மறந்து விடக்கூடாது. எல்லோரும் எல்லாமும் பெற்ற சுதந்திர இந்தியாவிற்காக தீர்மானம் போடவேண்டும். அதற்காக சபதம் ஏற்கவேண்டும்.
          தேச விடுதலை என்பது ஒரு பகுதியினருக்கு மட்டுமல்ல.
          ''பறையருக்கும் இங்கு தீயர்
                   புலையருக்கும் விடுதலை
           பரவரோடு குறவருக்கும்
                  மறவருக்கும் விடுதலை''  
 
என்று அனைவருக்குமான விடுதலையை வேண்டினான் பாரதி.
          ''ஏழை யென்றும்  அடிமை யென்றும்
                   எவனும் இல்லை ஜாதியில்
           இழிவுகொண்ட மனிதரென்பது
          இந்தியாவில் இல்லையே''
 
என்று சமூக நீதி தவறாத இந்தியாவிற்காக கனவு கண்டான் பாரதி. இந்த சமூக மாற்றங்களுக்காக இன்றைய இளைஞர்கள்   தீர்மானம் போடவேண்டும். அதற்காக சபதம் ஏற்கவேண்டும்.
                  கடந்த பத்து நாட்களாக நாடு பூராவிலும் இருந்து இளைஞர் கூட்டம் '' மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' வீறுகொண்டு எழுந்தார்கள். நாட்டில் எது நடந்தாலும் அதை கண்டுகொள்ளாது, கைகளில் லேப்டாப்பும், மொபைல் போனும் வைத்துக்கொண்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நிற்க நேரமில்லாமல் பறக்கும் இந்த இளைஞர் கூட்டம் டெல்லி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது வெகுண்டெழுந்தார்கள். எங்கிருந்து வந்தது இவ்வளவு கோபம். தன்  வீட்டு சகோதரிக்கு நேர்ந்தது போல் வீறுகொண்டு எழுந்ததை பார்க்கும் போது பாரதி சொன்ன ''ரௌத்திரம் பழகு'' என்கிற அக்னி வரி தான் நினைவுக்கு வந்தது. இதேப்போல் எதிர் காலத்தில் பெண்களை மதித்தல் வேண்டும் என்பதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீர்மானம் போட்டிட வேண்டும். அதற்காக சபதம் ஏற்றிட வேண்டும்.
''மனதி லுறிதி வேண்டும்
   வாக்கினி  லேனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
   நெருங்கின பொருள் கைப்பட  வேண்டும் ;
கனவு மெய்பட வேண்டும்,
   கைவசமாவது விரைவில்  வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
   தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்;
   காரியத்தி லுறிதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
   பெரியகடவுள் காக்க வேண்டும்;
மண் பயுனுற வேண்டும்,
   வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்;''  
 
என்ற பாரதியின் எழுச்சி வரிகளை உறுதி ஏற்றிடவேண்டும். இதைத் தான் நாடும், நாமும் எதிர்ப்பார்க்கிறோம்.  

கருத்துகள் இல்லை: