ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்....!

      இலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப்  படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..
     அதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப்  படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..
                போலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...
                வக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...
          படத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...
            முஸ்லீம்  தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...
            இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
           அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
          'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...
     'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...
          அதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே... 
அப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு குறைப்பிரசவமாக போய்விட்டது.           
        ஆரம்பத்திலேயே DTH - இல் திரையிடுவதற்கு கமல்ஹாசன் முடிவெடுத்த போதே திரையரங்கு உரிமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். பிறகு கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக்கொண்டு திரையரங்கில் திரையிட முடிவெடுத்து தேதியும் குறித்தாகிவிட்டது. இவைகள் எல்லாமே இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே நடக்கும் விஷயங்கள் ஆகும். தணிக்கைக் குழுவே எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்கி பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஒரு மாநில அரசு எப்படி இஸ்லாமிய அமைப்பைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்கமுடியும். அதுவும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் நிறுவனம் ஒன்று சட்டத்தின் அடிப்படையில் படத்தை தணிக்கை செய்து திரையிட அனுமதியளித்தப் பிறகு அதை ஒரு மாநில அரசு தடை செய்வது என்பது சட்டவிரோதமானது.
            திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்த பிறகு, அந்த படத்தை திரையிடலாமா என்று யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்பினர் கேட்டுக்கொண்ட போது, பிடிவாதம் பிடிக்காமல் 100 பேர் அடங்கிய இஸ்லாமிய அமைப்பினர்களுக்கு படம் திரையிடுவதற்கு முன்பே தனியாக போட்டுக் காண்பித்தது என்பது கமல்ஹாசனின் பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகின்றது. நல்ல வேளை ஒபாமா கோச்சிப்பாருன்னு அவருகிட்டேயும் உத்தரவு வாங்கனும்னு யாரும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் திரைப்படத்தை பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட 100 பேர்கள் அல்ல. அவர்கள் சொல்லுவது போல தமிழக அரசும் படத்தை தடை செய்தது என்பதும் ஜனநாயகம் அல்ல. இந்த விஷயத்தில் ஏதோ ''அரசியல் நெடி'' அடிப்பது போல் தெரிகிறது. ''நாரத வேலையை'' செய்தவர் சக்கர நாற்காலியில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது நமக்கு தெரிகிறது.
           தீவிரவாதத்தைப் பற்றிய மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அது இந்துமத தீவிரவாதமானாலும், கிருத்துவமத தீவிரவாதமானாலும், இஸ்லாமிய தீவிரவாதமானாலும் அவைகள் அத்தனையும் எதிர்க்கவேண்டியவையே. எந்த மத தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. மனித இனத்தையே அழிக்கக்கூடிய - மனிதநேயத்தையே அழிக்கக்கூடிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட  வேண்டிய இந்த மதவாத அமைப்பினர் தீவிரவாதத்தை பற்றி திரைப்படத்தில் காட்டினால் அதை எதிர்ப்பது ஏன் ...? தீவிரவாதத்தினாலேயே  அழிக்கமுடியாத மதத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் அழித்துவிட முடியுமா...?
          திரைப்படம் என்பது ஒரு கற்பனை உலகம் தான். அது பலத்தரப்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு கனவு தொழிற்சாலை. திரைப்படங்களை  ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே பார்க்கவேண்டும். அது ஒரு கலை. அதற்கு மதமோ... சாதியோ கிடையாது என்பதை சாதிய, மதவாத அமைப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.
         இப்படியே போச்சினா.... படம் ஷூட்டிங் நடக்கும் போதே ஜவஹிருல்லாவையும், இராமகோபாலனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.            

கருத்துகள் இல்லை: