திங்கள், 18 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...!

           நேற்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கட்சி கிளைக்கூட்டம் முடித்துவிட்டு, வெளியே வீதியோரமாய் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று யாரோ இரண்டு ''குடிமகன்கள்'' எங்களை நெருங்கி வந்தனர். அவர்கள் குடித்திருந்தாலும் நிதானமாகத்தான் இருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம், '' சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...அதைப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..."  என்று கொஞ்சம் கோபமும்,
ஏமாற்றமும் கலந்து கூறினார்கள். ''என்னாப்பா...  என்ன ஆச்சு...?"  என்று கேட்டோம். ''சார்... விசுவரூபம் ஒரு தமிழ்ப் படம்ன்னு கமல்ஹாசன் சொன்னார் சார்... ஆனா அது இங்கிலீஷ் படம் சார்... எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்... பாதியிலேயே எழுந்து வந்துட்டோம் சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாரு சார்... இதப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..." என்று அந்த இருவரில் ஒருத்தர் கோபமாகவே சொன்னார். இதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிக்கிறதா, அழுகிறதா என்றே தெரியவில்லை. ''இதுக்கெல்லாம் வந்துடுங்க...பெட்ரோல் விலை ஏறிப்போச்சி... போராட வாங்கன்னு கூப்பிட்டா வராதீங்க... '' என்று எங்களோடு இருந்த ஒரு தோழர் அவர்களிடம் கடுமையாக கடிந்து கொண்டார். ஆனால் அவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு பிரச்சனை தான். தமிழ் என்று வெளியே போஸ்டரில் போட்டிருப்பதை நம்பி உள்ளேப் போய் பார்த்தால், தமிழைத் தவிர வேறு மொழியில் இருந்தால் ஏமாற்றமாக தானே இருக்கும். டிக்கெட் காசை திரும்பக்கேட்டால் கூடத் தவறில்லை தான்.
       கலை - இலக்கியம் என்பது சாதாரண பாமரனையும் சென்றடைய வேண்டும். கலை - இலக்கியம் என்பது மக்களுக்காகவே. அந்த கலையும் இலக்கியமும் மக்களின் புரிதலுக்கு அந்நியப்பட்டுப்போனால் மக்கள் அவைகளை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்பதற்கு மேலே சொன்ன அந்த இருவரே சாட்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாக திரைப்படம் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளும், அறிவுஜீவிகளும் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு, திரைக்கு முன்னால்  உட்கார்ந்து கொண்டு  திரைப்படம் பார்க்கும் பாமரனை நினைத்துப் பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படிப்பட்ட கலைஞர்கள்  மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள். சாதாரண பாமரனை நினைத்துப் திரைப்படம் எடுத்ததால் தான் எம்ஜியார்  இன்று வரை மக்களின் மனதில் நிற்கின்றார்.
        நடிகர் கமல்ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மகா கலைஞன் தான். அதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. அந்த திறமைகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இருத்தல் அவசியம். திரைப்படம் என்பது மக்கள் மொழியிலேயே இருந்தால் தான் அது வெற்றிபெறும்.

உறுத்தலும், மறுத்தலும்....

              நான் விஸ்வரூபம் படம் பார்த்தபோது எனக்கு விளங்கின இரண்டு விஷயங்கள். ஒன்று கடவுள் மறுத்தல் சம்பந்தமான வசனம். இன்னொன்று அமெரிக்க விசுவாச வசன உறுத்தல். வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் கடவுள் மறுப்பு சம்பந்தமான வசனம் இதிலேயும் வருகிறது. அமெரிக்க போலீஸ் கமலையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். கமலின் மனைவி விசாரணையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுவார். என்னை திட்டுகிறாயா என்று அந்த பெண் போலீஸ் கேட்க, இல்லை கடவுளை கும்பிடுகிறேன்னு கதாநாயகி சொல்லுவார். அவர் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்று சொல்லும் போது, அந்த பெண் போலீஸ் ''நாலு கை இருந்த எப்படி சிலுவையில் அறைவார்கள்'' என்று கேட்பார். அதற்கு அவர் ''இல்ல நாங்க கடல்ல போட்டுடுவோம்'' என்று சொல்லுவார். இந்த காட்சியின் போது மக்கள் ஒரு சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.காரணம் அது ஆங்கில வசனம் என்பதால்.
             ஒரு காட்சியில் ''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்'' என்று வரும். கமலுக்கு ஏன் இந்த அமெரிக்க விசுவாசம்...? இந்த வசனம் அவரை அறியாமல் வந்திருக்கமுடியாது. எதற்காக இப்படி வசனத்தை திணிக்கவேண்டும் என்பது தான் திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு உறுத்தலான விஷயமாக பட்டது.
        மேலே சொன்ன  இரண்டும் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து என்னால் புரிந்துகொள்ள முடிந்த இரண்டு காட்சிகளும் வசனங்களும் மனதில் நின்றவைகள்.  

1 கருத்து:

andygarcia சொன்னது…

''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்''

அடுத்த சீன்லயே அமெரிக்ககாரன் குண்டு போட்டு ஓமர் குடும்பம் அழிந்துவிடும்.படத்த ஒழுங்கா பாருங்க பாஸ் (அது கிண்டல் வசனம்)