செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

என்ன ஆச்சரியம்... ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் நாகரீகம்...!


           தமிழகத்தில் இன்று ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது.  தமிழக மக்கள் தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். உண்மை தானா ... சாத்தியம் தானா...?  என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதுவும் நேரிலேயே பார்த்தவர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அப்படியொரு கண்கொள்ளக் காட்சியது.
         தமிழ்நாடு கேட்காமலேயே கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் அது ஆச்சரியம் இல்லை.... அழகிரியே ஸ்டாலினுக்கு திமுக கட்சித் தலைவராக முடி சூட்டிவிட்டால் அதுவும் ஆச்சரியம் இல்லை.... மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று தேசபக்தி வந்து மக்கள் மீது அக்கறையுடன் ஆட்சி செய்தாலும் கூட ஆச்சரியம் இல்லை.... தன்னை தூக்கி எரிந்து பேசியவர்களை அல்லது தன்னால்   தூக்கி எறியப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  ஆனால் இன்று மாலை சென்னையில் நடைபெற்ற சந்திப்பு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. நடுரோட்டில்  ஜெயலலிதா - வைகோ இடையே நடைபெற்ற சந்திப்பு தான் அது.
          தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அருகில் கோவளத்தில் இருந்து நடைபயணம் துவக்கினார். இன்று மதியம் 3 மணியளவில் சிறுதாவூர் அருகே பையனூர் கிராமத்தில் வைகோ தொண்டர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில்  முதல்வர் ஜெயலலிதா  வந்து கொண்டிருந்தார். சாலையில்  வைகோ செல்வதை பார்த்த ஜெயலலிதா  காரை நிறுத்த சொல்லி காரில் இருந்து இறங்கி நேரே வைகோ அருகில் சென்று நலம் விசாரித்துப் பேசினார்.
.           தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்று தெரியாது. ஆனால் ஜெயலலிதாவின் மனதில் ஏற்பட்ட  மாற்றம் பாராட்டுக்குரியது. இன்று புதிதாக அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதாவை வாயார பாராட்டவேண்டும்.

     

கருத்துகள் இல்லை: