புதன், 13 பிப்ரவரி, 2013

வினோதினியின் உடல் புதுவை வந்தது - நெஞ்சை பிளந்தது...!

         இன்று மாலை நாங்கள் புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகில் மறைந்த வினோதினியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கனத்த இதயத்துடன் காத்திருந்தோம்.
        இரவு 7.15 மணிக்கு அவரது உடலை சுமந்துகொண்டு இங்கே வந்து சேர்ந்தது. கொடூரனால் சிதைக்கப்பட்ட வினோதினியின் உடலுக்கு அஞ்சலை செலுத்துவதற்கும், பார்ப்பதற்கும் கூட்டம் ஆண்களும், பெண்களும், இளைஞர்களுமாய் கூடிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்  தோழர்கள் வெ. பெருமாள், தா. முருகன், ரங்கசாமியின் அமைச்சர்கள் மூன்று பேர், முன்னாள் முதலமைச்சர் வெ. வைத்திலிங்கம் உட்பட அரசியல் கட்சித்தலைவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், மாதர், வாலிபர் மற்றும் மாணவர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்களும் ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்து மறைந்த வினோதினிக்கு அஞ்சலி செலுத்தினர்.
        நானும் பார்த்தேன் கருகிய அந்த மலரை. நேற்று காலை வினோதினி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட பிறகு, சென்னையில் கடந்த மூன்று மாதமாகவே மருத்துவமனையில் வினோதினிக்கு துணையாக இருந்து வந்த அவரது தாய் மாமா ரமேஷ் அவர்களிடம் பேசியபோது, ''எல்லாம் முடிஞ்சி போச்சி சார்'' என்று அழுது கொண்டே சொன்ன அந்த வார்த்தையும், பக்கத்தில் வினோதினியின் அப்பா - அம்மா இருவரின் அழுகுரலும் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. இரண்டு நாட்களாக என் மனம் கனத்து கிடந்த இந்த சூழ்நிலையில், புதுவை வந்த அவரது உடலை பார்க்கும் போது  அதிர்ந்து போனேன். படத்தில் இருக்கும் அந்த முகமா இப்படி சிதைந்து கிடப்பது. நெஞ்சம் எரிமலையாய் வெடித்தது. துக்கம் அடைத்தது. கோபம் கொப்பளித்தது. யார் மீது இந்த சமூகத்தின் மீதா...? அல்லது பெண்களை போற்றாத இளைஞர்கள்   மீதா...? இனியாவது இந்த சமூகம் பாடம் கற்றுக்கொள்ளட்டும். ஆண்  பிள்ளைகளுக்கு பெண்களைப் போற்ற - உயர்வு செய்ய கற்றுத் தரட்டும். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு வினோதினியே கடைசி பலியாக இருக்கட்டும். 























              

கருத்துகள் இல்லை: