புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி....!

         தொன்னூறு நாட்கள் நீடித்த ஜீவமரணப் போராட்டம் முடிந்துபோய்விட்டது. ஆணாதிக்க வெறியை அனுமதித்துக்கொண்டே, பாதிக்கப் படும் பெண்களின் அவலக்குரலுக்காக கண்ணீரும் வடித்துக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தின் கன்னங்களில் ஓங்கி அறைந்திருக்கிறது, நமது இளம் சகோதரி வினோதினியின் மரணம். இரு மனமும் இணைந்தால்தான் காதல் என்ற மகத்துவத்தை உணராமல், ஒருதலைக் காதல் எனும் வெறிபிடித்து, குரூரமாகச் சிந்தித்து விட்ட கயவன் வீசிய திராவகம், அந்த 23 வயதுப் பொறியியல் பட்டதாரியின் உடலைப் பொசுக்கி, உயிரையும் பறித்துவிட்டது.நாள்தோறும் பெண்களும், இளம் பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்ளும் பாலியல் கொடூரங்கள் தீவிரமாகிக்கொண்டேயிருக்க, தில்லி மாணவியின் பாலியல் வன்கொடுயை ஏற்படுத்திய அதிர்வுகள், ஊடகங்களின் இதர பல பரபரப்புகளால் மெல்ல அடங்கத் துவங்கி யிருந்த நிலையில், வினோதினியின் மரணம், இந்தியாவின் மனசாட்சியை மீண்டும் தட்டி யெழுப்புகிறது.
            திராவகம் வீச்சு கொடூரக் குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு கூறியிருப்பது எவ்வித மாற்றமும் இல்லாமல் அமலாக வேண்டும் என தேசம் எதிர்பார்க்கிறது. ஆனால், கடும் தண்டனை தருவதுபோலக் கண்கட்டி வித்தை செய்கிற மன்மோகன் அரசின் அவசரச் சட்டம், இதுபோன்ற வழக்குகளில் தமது கடமையைப் புறந்தள்ளுகிற காவல் துறையையும், அதிகாரிகளையும் தப்பிக்கவிடுகிறது. தில்லி மாணவி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தபோது, பொறுப்பைத் தட்டிக்கழித்த காவல்துறையினரைப் போலவே, காரைக்காலிலும் வினோதினி மீதான திராவக வீச்சையும் காவல்துறையினர் அலட்சியம் செய்தார்கள். போராட்டங்கள் தீவிரமடைந்த பின்னரே ஓரளவு செயல்பட்டார்கள். எனினும், இப்போதும்கூட மெத்தனம் தொடர்கிறது. இவர்களை யார் கேட்பது? எந்தச் சட்டம் பொறுப்பு? திராவக வீச்சு தொடராமல் இருக்க, அரசிடமும், காவல்துறையிடமும் திட்டங்கள் என்ன? பொதுவெளியில் கொடிய திராவகம் விற்கப்படுவது குறித்து கட்டுப்பாடு என்ன? வழிதவறி, வெறிகொண்டு, மூர்க்கத்தனமாக மாறும் சூழலில் இருந்து இளைஞர்களை மீட்க என்ன திட்டம்? ஆணும், பெண்ணும் சமம்; காதல் என்று வந்தால் பெண்ணின் சம்மதம் அவசியம் என்ற அடிப்படையான விஷயங்களைக் கூட ஆண்பிள்ளைகளுக்கு எப்போது சொல்லித் தரப்போகிறீர்கள்? என்று ஓராயிரம் கேள்வி களை எழுப்புகிறாள் சகோதரி வினோதினி.
               தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக கேள்வி எழுப்புகிற வினோதினியின் வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும்; தன் மகளின் கல்வியை மட்டுமே நம்பியிருந்த வினோதினியின் பெற்றோரில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்; திராவக வீச்சுக்கு எதிராக உரிய கடுமையான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; பெண்கள் மீதான வன்குற்றங்களைத் தடுக்கும் விதமாக நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழுவின் பரிந்துரைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. புதுவை அரசும் மத்திய அரசும் இவற்றை உடனடியாக நிறை வேற்றவேண்டும்.
நன்றி :  

கருத்துகள் இல்லை: