வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குமுதம் ரிப்போர்டரின் வக்கிர புத்தி...!

         இன்றைக்கு உலகமயத்தின் அரக்கக்குழந்தையான ''வணிகப்போட்டி'' என்பது ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. மக்களிடம் நிலைத்து நிற்பதற்காகவும் , கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவும் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும்   மனசாட்சியே இல்லாமல் நீதி, நியாயம், நேர்மை, தர்மம் இவைகளை கொன்றுவிட்டு  வெட்கமில்லாமல் வீதியில் அம்மணமாய் உலா  வருகின்றன. இது மாதிரியான பத்திரிகைகள் எல்லாம் நம் வீட்டிற்குள்ளே நுழைவதற்குக் கூட அருகதையற்றவையாகத் தான் இருக்கின்றன.
            அப்படிப்பட்ட பத்திரிகையில் ஒன்று இன்று அதை பார்க்கும் போதே நமக்கெல்லாம் அருவருப்பை வரவழைத்திருக்கிறது. அந்த பத்திரிகை எதுவுமில்லை. குமுதம் குடும்பத்தைச் சேர்ந்த ''குமுதம் ரிப்போர்டர்'' தான் இன்றைக்கு துர்நாற்றம் அடிக்குமளவுக்கு செய்தியை கொடுத்திருக்கிறது. அட்டை படத்தில் ''குஷ்பு இன்னொரு மணியம்மை?'' என்றத் தலைப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும், திரைப்பட நடிகை குஷ்புவையும் இணைத்து படம் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடனேயே நமக்கு கோபம் வரவில்லை. அருவருப்பைத் தான் தூண்டியது. பத்திரிகை சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாமா...? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிகைகள் கண்டதையெல்லாம் எழுதி கவலைப்படுகின்றன. இதன் மூலம் குமுதம் பத்திரிகையின் வக்கிரபுத்தி வெளிப்பட்டிருக்கிறது.  
           சமிபத்தில் புதுடெல்லியில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது பத்திரிக்கைகளின் இன்றைய செயல்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையின் காரணமாக மூன்றரை இலட்சம் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் என்று பி. சாய்நாத் வெளியிட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திரைப்பட நடிகை கரீனா கபூர் பற்றிய கிசுகிசுவையும், சச்சின் அடித்த நூறாவது சதம் பற்றிய செய்தியையும்  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள் என்று நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார். இப்படித் தான் இன்றைய பத்திரிகைகள் இலாபம் ஒன்றே குறிக்கோளாய் அலைகின்றன. அதற்கு குமுதம் ரிப்போர்டரும் விதிவிலக்கு அல்ல. குமுதம் ரிப்போர்டரை பொருத்தவரையில் இலாபம் மட்டுமல்ல, நிச்சயமாக ''யாரையோ'' திருப்திப்படுத்தவும் இந்த செய்தியை பிரசுரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது. 

                இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் மணியம்மையாரை கேவலப்படுத்தியதற்காக  நீங்கள் திருப்திபட்டுக்கொள்ளலாம். அல்லது குஷ்புவையும், ''தோழர்'' கருணாநிதியையும்  (அவர் தானுங்க தன்னை ஒரு கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாரு) கேவலப்படுத்தியதற்காக நீங்கள் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்று எழுதுவதால் பெண்கள் அரசியலுக்கு வருவதும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதும் தடைப்பட்டுபோகும் என்பதை ஊடகங்கள் மறந்துவிடக்கூடாது. இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பெண்களுக்கு, ''இதே கதி தங்களுக்கும் ஏற்பட்டுவிடும்'' என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படி விலகிச் செல்லவேண்டும் என்பது தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பதையும், ஆதிக்க சாதியினரின் சிந்தனை என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.   
       தயவுசெய்து இனியாகிலும் பத்திரிகைகள் திருந்தட்டும். ஒரு நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் பத்திரிகைகளுக்கு மாறவேண்டும். இது போன்ற புறச்சூழ்நிலைகள் தான் ஒரு சில இளைஞர்களின் கொடூரமான எண்ணங்களுக்கும், வக்கிரமான புத்திகளுக்கும் ஊக்கம் தருகின்றன என்கிற சமூக சிந்தனை பத்திரிகையாளர்கள் புத்தியில் எழவேண்டும். இனியாகிலும் பத்திரிகைகள் நல்ல சிந்தனையை வளர்க்கின்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை: