செவ்வாய், 26 மார்ச், 2013

இசையால் இதயங்களை வசமாக்கிய டி. எம். சௌந்தரராஜனுக்கு விருது...!

91 வது பிறந்த நாளைக் கொண்டாடும் டி.எம்.எஸ். பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கு பினராயி விஜயன் உதவுகிறார்.
       தமிழ்த் திரையுலகில் பாடல்களுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. பாடல்கள் அவற்றின் மொழி வளத்தால் மட்டும் பாராட்டு பெறுவதில்லை. அவற்றை பாடுகிறவர் தான் மக்களிடம் அதை எடுத்துச் செல்கின்றனர். மக்களின் மனதில் பதிய வைக்கின்றனர். அந்தப் பாடல்கள் சாகாவரம் பெறுகின்றன. சாகாவரம் பெற்ற பாடல்களை நூற்றுக்கணக்கில் பாடி தமிழ்த் திரை ரசிகர்களின் மனதை மட்டும் அல்லாது, தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அவர் தனது 91வது வயதை மார்ச் 24 அன்று நிறைவு செய்தார். தம்முடைய 60 ஆண்டுகளுக்கு மேலான திரைப்பட வாழ்வில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பாடல்களும் 2500க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களும் பாடியுள்ளார். அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ''ஸ்வரலயா இசை'' நிறுவனமும் ''கைரளி தொலைக்காட்சி'' நிறுவனமும் இணைந்து “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தன. ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கழக்குட்டம் அல்-சஜ் கருத்தரங்க மையத்தில் நடந்த விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
       இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச்செயலாளர் பினராயி விஜயன், பின்னணிப்பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பின்னணி பாடகர்கள் மாதுரி, சுஜாதா, உன்னி மேனன், விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன், எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.ஜெயச்சந்திரனுக்கு ஸ்வரலயா விருது அளிக்கப்பட்டது. பிறந்தநாள் கொண்டாடும் டி.எம்.எஸ். கேக் வெட்டினார். அவரை பினராயி விஜயன் கேக் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று கேக் வெட்ட உதவினார். பின்னர் அவர் டி.எம்.எஸ்.சுக்கு கேக் ஊட்டி விட்டார். அவருக்குப்பின் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோர் கேக் ஊட்டி விட்டனர். டி.எம்.சௌந்திரராஜனுக்கு ஜேசுதாசும், ஜெயச்சந்திரனும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர். அவருக்கு விருதும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. 1922ம் ஆண்டில் புரோகிதம் செய்யும் சௌராஷ்டிரா குடும்பத்தில் துகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்திரராஜன் பிறந்தார். ஏழு வயதில் கர்நாடக இசையைக் கற்க தொடங்கிய அவர், தனது 21ம் வயதில் மேடைகளில் பாட ஆரம்பித்தார். 1946ல் தயாரிப்பு தொடங்கி 1950ல் வெளியான கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் ‘ராதே என்னை விட்டு ஓடாதேடி’ என்ற பாடல்தான் அவருடைய முதல் பாடல். அதையடுத்து மந்திரிகுமாரியில் ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப்பாடினார். தமிழ்த்திரையுலகில் பிரவேசித்த அவர் பின்னணிக்குரல் கொடுக்காத கதாநாயகர்களே இல்லை என்ற அளவுக்கு அவர் உயர்ந்தார். கூண்டுக்கிளியில் ‘கொஞ்சும் கிளியான பெண்ணை’ என்ற பாடலுக்கு சிவாஜிகணேசனுக்கு முதல் முதலாக இவர் குரல் கொடுத்தார். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனில் அவரை தனக்கு பின்னணி பாடவைத்தார். 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' என்ற பாடல் இவர் எம்.ஜி.ஆருக்கு பாடிய முதல் பாட்டு. இருவரும் ஓய்வு பெறும் வரை அவர்களின் பாடல் குரலாக டி.எம்.எஸ். திகழ்ந்தார். நடிகர்களின் குரலுக்கொப்ப தன்னுடைய குரலை மாற்றிக்கொண்டு பாடுவதில் வல்லவரான டி.எம்.எஸ். திரைப்படங்களில் ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், எம்.ஆர்.ராதா (சரக்கு இருந்தா அவுத்து விடு-குமுதம்), எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ஏ.நாகேஸ்வரராவ், ரவிச்சந்திரன், நாகேஷ், காந்தாராவ், டி.எஸ்.பாலையா, ஜக்கையா என இவர் பின்னணி பாடிய நடிகர்களின் பட்டியல் நீளமானது. 2010ம் ஆண்டில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கீதத்திலும் இவர் குரல் உள்ளது.
நன்றி :

கருத்துகள் இல்லை: