ஞாயிறு, 3 மார்ச், 2013

இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற திரைப்படங்கள் தேவைதானா...?

          
               
                  தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பக்கம் பூரண மது ஒழிப்புக்கு போராட்டங்களும், இயக்கங்களும், தொடர் உண்ணாவிரதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குடிப்பழக்கத்தின் காரணமாக எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையும், பல பேருடைய குடும்பங்களும் சீரழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து, சமூக சிந்தனையாளர்கள் மதுவிற்கு எதிரான - அரசே நடத்தும் மதுபானக் கடையான ''டாஸ்மாக்'' எதிரான போராட்டங்கள் வலுவாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசோ டாஸ்மாக் மூலமாக 25,000 கோடிக்கு மேல் வருமானம் வரவேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களை நெருக்கிக்கொண்டிருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் என்ன செய்வார்கள்...? வழக்கமாக வருகின்ற வாடிக்கையாளர்களை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக குடிக்கவைக்கலாம். அல்லது புதிய புதிய குடிகாரர்களை உருவாக்கலாம். இது தான் நடக்கும். இலட்சக்கணக்கான இளைஞர்களின் சீரழிவிலும், பலபேருடைய குடும்பங்களின் சீரழிவிலும் தான் தமிழக அரசை நடத்தவேண்டும் என்கின்ற சூழ்நிலையில், படம் முழுதும் குடிப்பதும், புகைப்பதுமான பழக்கமாகவும், மேனரிசமாகவும் கொண்டு நடிக்கும் ஒரு கதாநாயகனின் திரைப்படம் - ''வசந்தமாளிகை'' என்பது இன்றைய சூழ்நிலையில் ஏற்கத்தக்கதல்ல. சிவாஜிகணேசன் நடித்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் வேறு நல்லப்படமா இல்லை.
         தற்போது திரைப்படங்களில் எப்போதாவது தான் குடிப்பதும், புகைப்பதுமான காட்சிகள் வருகிறது. அந்த சமயங்களில் ''குடி குடியை கெடுக்கும்'' - ''புகைப்பது உடல் நலத்திற்கு கேடு'' போன்ற வாசகங்களை அந்த காட்சியோடு சேர்த்து காட்டுவதை சட்டம் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், வசந்தமாளிகையில் என்ன செய்வார்கள்...? திரைப்படம் முழுக்க ''குடி குடியை கெடுக்கும்'' - ''புகைப்பது உடல் நலத்திற்கு கேடு'' என்ற வாசகங்களை காட்டுவார்களா...? அல்லது அந்த திரைப்படத்தின் போஸ்டர்களில், வசந்தமாளிகை என்ற அந்த திரைப்படத்தின் டைட்டிலோடு சேர்த்துப் போடுவார்களா...? எப்படியோ இந்த திரைப்படம் புதிய குடிகாரர்களை உருவாக்காமல் இருந்தால் சரி.
         தேவதாஸ், வசந்தமாளிகை போன்ற படங்கள் ஒரு காலத்தில் சிறந்த திரைப்படங்களாக இருந்திருக்கலாம். அவைகளெல்லாம் அந்தக்காலத்தில் ஏற்றப்படமாக இருந்திருக்கலாம். வசூலை அள்ளிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்களெல்லாம் இந்த காலத்திற்கு ஏற்றத் திரைப்படங்கள் அல்ல. இன்றைய தலைமுறையினற்கு ஏற்றத்தக்கத் திரைப்படங்கள் அல்ல என்பதை திரைப்படத் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை: