ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

வர்க்கப் போரில் சமரசம் இல்லை....! - அலெக்ஸான்ட்ரா லிமேரி

            உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ( WORLD FEDERATION OF TRADE UNIONS ) பிரதிநிதியாக கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் சிஐடியுவின் அகில இந்திய மாநாட்டில் அந்த அமைப்பின் ஊடகத்துறை தலைவர் அலெக்ஸான்ட்ரா லிமேரி பங்கேற்றிருக்கிறார்.    “ஐந்து கண்டங்களின் 120 நாடுகளைச் சேர்ந்த 86 மில்லியன் தொழிலாளர்கள் இடம் பெற்றிருக்கும் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் சிஐடியு அகில இந்திய மாநாட்டை வாழ்த்துகிறோம். 2011 - ஆம் ஆண்டு சிஐடியு உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. அந்த அமைப்பின் தலைமை வகிக்கும் அங்கத்தினர்களாக இருக்கும் ஏழு உறுப்பினர்களில் ஒன்றாகவும், செயற்குழு உறுப்பினராகவும் சிஐடியு இருக்கிறது. உலக அளவில் வர்க்க அடிப்படையிலான தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிஐடியு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது” என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.

         “சர்வதேச அளவில் வர்க்கரீதியாக ஆய்வு செய்து தீர்மானகரமான முறையில் சிறப்பாகச் செயல்படும் சங்கமாக சிஐடியு திகழ்கிறது. சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினையாக சிஐடியுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உலக அளவில் வர்க்க அடிப்படையில் போராடுவது, வர்க்க சமரசம் செய்வது என்ற இரு முக்கியமான பிரிவுகளாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வர்க்க அடிப்படையிலான போராட்டத்தின் மூலம் தொழிலாளர், உழைக்கும் மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதேசமயம் சர்வதேச தொழிற் சங்க கூட்டமைப்பு (ஐடிஎப்) வர்க்க சமரச அடிப்படையில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதாவது இன்றைக்கு இருக்கும் நிலையில் உற்பத்தியாளர்களுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி சிறு, சிறு கோரிக்கைகளை மட்டும் கேட்டுப் பெற்று சிறு முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படையில் முதலாளித்துவ சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று அவை செயல்படுவதில்லை. இதை சரணாகதிப் பாதை என்று நாங்கள் சொல்கிறோம்.
     முதலாளித்துவ நாடுகளில் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீடித்த நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஏற்கனவே வலுவான போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட தொழிலாளர்களின் நலன்கள் வெட்டிச் சுருக்கப்படுகின்றன. ஆனால் இந்த நிலையில் வர்க்க சமரசப் பாதையில் செல்லும் தொழிற்சங்கங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றன. இன்று மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக மூலதனம் அவுட் சோர்சிங் செய்வதில் ஈடுபடுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கேள்வி வருகிறது. மூலதனத்திடம் இருந்து தொழிலாளர்கள் வளமான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மூலதனத்துக்கு எந்த தேசமும் கிடையாது.அதை தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.    
     பக்கத்து நாடு, வெளிநாடு என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களும் இதே போன்ற நிலையைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தொழிலாளி வர்க்கம் சர்வதேசிய பார்வையோடு அனைத்து நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டும். நவீன தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் பின்னணியில் இத்துறைகளில் வேலை செய்வோர் தொழிலாளி வர்க்கமே இல்லை என்றும், இவர்களது பொருளாதார நிலை மாறியிருக்கிறது என்றும் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் மூளை, உடல் உழைப்பைச் செலுத்தும் இவர்களும்  தொழிலாளர்கள் தான். இந்த  துறையில் ஈடுபடும் இளம் தொழிலாளர்கள் மீது பரிவோடு கவனம் செலுத்தி தொழிற்சங்கங்கள் அணிதிரட்ட வேண்டிய நிலை இருக்கிறது. இன்று உலகம் சந்திக்கும் சிக்கலான சூழ்நிலையில் இனம், மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் ஒற்றுமைப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது” 
என்று உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்கே உரிய அரசியல் தெளிவோடு செய்தியாளர்களிடம் விளக்கினார் அலெக்ஸாண்ட்ரா.
நன்றி : 

கருத்துகள் இல்லை: