சனி, 20 ஏப்ரல், 2013

வெறிபிடித்த மிருகங்களுக்கு மத்தியில் வாழும் பெண் குழந்தைகள் - ஒரு தேசிய அவமானம்...!


     பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை ஒருவன் நாசப்படுத்துகிறான் என்றால் அவன் நிச்சயமாக மனிதனாக இருக்க முடியாது. வெறிபிடித்த மிருகமாகத்தான் இருப்பான்.  ஆண்கள் எல்லோரும் நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மாமா என்றும், சித்தப்பா என்றும், அண்ணன் என்றும், ஆசிரியர் என்றும், நண்பன் என்றும், தோழன் என்றும் குழந்தைகள் அழைத்துப் பழகுகிறார்கள். ஆனால் இனி குழந்தைகள் அப்படி பழகுவதற்கு யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலர் மனித மிருகங்களாக மாறி வருகின்றனர். இப்படித்தான் டெல்லியில்  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மனித மிருகத்தால் ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு இன்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
         இது போன்ற நிகழ்வு என்பது சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த தைரியம் எங்கிருந்து தான் வந்தது...? அரசும், சட்டமும், சமூகமும் ஒன்றும் செய்யாது என்ற தைரியமா....? நீதிமன்றம் காலம் கடத்தி தானே தண்டனை வழங்கப்போகிறது என்ற துணிச்சலா....? மனசாட்சியை கொன்றுவிட்டார்களா...? ''பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு'' என்று பாரதியால் பெருமையுடன் பாடப்பட்ட இந்த நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு ''தேசிய அவமானம்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 




கருத்துகள் இல்லை: