புதன், 9 அக்டோபர், 2013

பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்...!

 

                எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைகிறதோ அல்லது நாட்டு மக்கள் எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் கட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களை திசைத்திருப்புவதற்கு ஏதாவது ''சித்து விளையாட்டில்'' ஈடுபடுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் இது தான் காங்கிரஸ் கட்சியின் அரசியலாக கருதப்படுகிறது. தற்போது நாடு முழுதும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையினான மத்திய ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பெருகிவரும் வேலையின்மை, வேலையிழப்பு, பணவீக்கம், ரூபாய் மதிப்பிழப்பு போன்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாதத்தனத்தால் மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் நாடு முழுதும் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ஆந்திர மக்களிடம் மிகப்பெரிய சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
          அரசியல் ஆதாயத்திற்காக தெலங்கானா பிரிவினைக்கு ஊக்கம் கொடுத்தது மட்டுமல்லாது, அதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்கள் - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தையே விரும்பக்கூடிய ஆந்திர மக்கள், அரசே செய்யும் பிரிவினை வேலைகளைக் கண்டு கோபங்கொண்டு மாபெரும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை - ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தனி மாநிலம் வேண்டும் என்று போராடவில்லை. ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் வலுசேர்க்கும் விதமாகத்  தான் போராடுகிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரமாநிலத்திற்காக ஒட்டுமொத்த மாநில மக்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பக்கம் நிற்கவேண்டிய மத்திய அரசு அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஊரடங்குச்சட்டம், கண்டதும் சுடுதல் போன்ற அடக்குமுறை உத்திரவுகளை பிறப்பித்துள்ளது என்பது துரதஷ்டமானது. மேலும் இச்செயல் பிரிவினை வேண்டுவோர்க்கு பலம் சேர்க்கும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்க்குலைக்கும் செயல். இது ஆபத்தானது. விபரீதமானது. இது அரசே செய்யும் பயங்கரவாத செயலாக கருதப்படும்.
             குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ளவேண்டும். பிரிவினை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் எதிர்காலத்தை பலியிடக்கூடாது.



கருத்துகள் இல்லை: