வியாழன், 2 ஜனவரி, 2014

25 ஆண்டு கால இயக்கப்பணியில் புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு...!

         



         இடதுசாரி சிந்தனையுடன் பல்வேறு சமூக மற்றும் முற்போக்கு கருத்துகளை வீதிதோறும் ''உரக்கப் பேசி'' வீதி நாடகம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய சப்தர் ஹாஷ்மி என்ற மகா கலைஞனின் பெயரில் புதுச்சேரியில் ''சப்தர் ஹாஷ்மி கலைக்குழு'' இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிவைக்கப்பட்டு, நேற்று ஜனவரி 1 அன்று தனது ''இருபத்தைந்து ஆண்டு கால இயக்கப்பணியை'' சிறப்பாக கொண்டாடியது.
              நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே புத்தாண்டு தினத்தன்று டெல்லியில் அந்த மகா கலைஞன் சப்தர் ஹாஷ்மி ''உரக்கப் பேசு'' என்ற வீதி நாடகம் நடத்திக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் மத்தியில் அன்றைய ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். எனவே அந்த மகா  கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொலை செய்யப்பட்ட அதே நாளில் புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு  காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புதுவை கடற்கரையில் ''12 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி'' நடத்தி வருகிறது. 
             இம்முறையும் நேற்று புத்தாண்டு தினத்தன்று சப்தர் ஹாஷ்மிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், கலைக்குழுவின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையிலும்  புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில்  ''12 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி'' மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடைபெற்றது. 
            இதில் புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தோழர்கள் வி.பெருமாள், டி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு காலையில் தொடங்கி வைக்க, மாலை நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.ஆர்.ராமமூர்த்தி கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை: