திங்கள், 20 ஜனவரி, 2014

தேசவுடைமைக்கு போராடிய AIIEA - வின் அகில இந்திய மாநாடு வெல்லட்டும்...!

      
           சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் இன்சூரன்ஸ் என்ற பேரில் பொதுமக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டு கம்பனிகளை நடத்திவந்த காலகட்டத்தில், 1951 - ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் கோ-ஆபரேடிவ் லைப் அஷூரன்ஸ் சொசைடி என்ற இன்சூரன்ஸ் கம்பெனி உட்பட 245 தனியார் கம்பெனிகளில் பணிபுரிந்த ஊழியர்களை ஒன்றிணைத்து அன்றைய கல்கத்தாவில் தோழர்கள் சுனில் மைத்ரா, சரோஜ் சௌத்ரி மற்றும் சந்திரசேகர் போஸ் போன்ற மாபெரும் தலைவர்களின் முயற்சியால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டது. ஊழியர்களின் நலன் சார்ந்த சொந்தக் கோரிக்கைகளுக்காக அல்லாமல், மக்களின் உழைப்பு நிதியை கொள்ளையடிக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்யவேண்டும் என்ற உன்னதமான கோரிக்கையோடு தொடங்கப்பட்டு, இன்று வரையில் ஊழியர்  நலன்களுக்கு மட்டுமின்றி, தேச பாதுகாப்பு, மக்கள் நலன், பாலிசிதாரர் சேவை போன்றவைகளுக்காகவும் அர்ப்பணிப்புணர்வுடன் அளப்பரிய போராட்டங்களை நடத்தி, இந்திய தொழிற்சங்கங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூட்டிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 23 - ஆவது அகில இந்திய மாநாடு நாக்பூரில்  இன்று மாலை தொடங்கப்பட்டது.
              பிரம்மாண்டமான பேரணிக்குப் பின்,  அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லா கான் சங்கத்தின் செங்கொடியை விண்ணதிரும் முழக்கங்களுடன் ஏற்றிவைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி மாநாட்டை தொடங்கிவைத்து பேருரையாற்றினார். சங்கத்தின்  நிறுவனத்தலைவர்களில்  ஒருவரான மூத்த தோழர் சந்திரசேகரபோஸ் அவர்கள் ஆரம்பக்காலத்திலிருந்து எல்லா அகில இந்திய மாநாடுகளிலும் கலந்துகொள்வது போல் இந்த மாநாட்டிலும் கலந்துகொள்வது மாநாட்டின் சிறப்பம்சமாகும்.
               மாநாட்டில் பங்குபெறும் என் அன்பிற்கினிய தோழர்கள் அனுப்பிய மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியின் படங்கள் இதோ...!         

 

 


 

 

கருத்துகள் இல்லை: