புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டு - இனியொரு விதி செய்வோம்....!

               2014 - புத்தாண்டு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த கால ஏமாற்றங்களோடும், எதிர்கால எதிர்ப்பார்ப்போடும் பிறக்கிற புத்தாண்டு என்று தான் சொல்லவேண்டும். தொலைவில் நமக்கு வழிகாட்டும் ஒளி தெரிகிறதா என்று அகல விரித்து ஏக்கத்துடன் பார்க்கும் கண்களை நம்மால் பார்க்கமுடிகிறது. நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் ஒரு பக்கம். அம்மக்களை சுரண்டி இலாபவெறியுடன் சொத்து சேர்க்கும் பகாசூரர்கள் இன்னொரு பக்கம். சமநிலை இல்லாத - சமதளம் இல்லாத தேசமாய் நம் தட்டுத்தடுமாறி செல்கிறது நம் தேசம்.
              2014 மே மாதம் மக்களவைத் தேர்தலை நோக்கி செல்கிறது. வரும்  காலங்களில் நம்மை கைபிடித்து வாழ்வின் உயர்நிலைக்கு அழைத்துச் செல்வார்  யார்...? என்று ஏக்கப்பெருமூச்சு விடும் மக்களை ''மாற்றுக் கொள்கையுடன்'' அரவணைத்து அழைத்துச் செல்ல இடதுசாரிக்கட்சிகள் எதிர்கால திட்டங்களுடன் காத்திருக்க,  வகைவகையாய் ஊழல் புரிந்து, சொத்துகள் சேர்த்து, வழக்குகள் - விசாரணைகள் ஏதுமின்றி, தண்டமோ தண்டனையோ பெறாமல், சுதந்திரமாய் வளம் வந்து கூச்சமின்றி மீண்டும் ஆட்சியில் அமரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு பக்கமும், மதத்தின் பெயரால் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து, சிறுபான்மையோரை விரட்டியடித்து, பொதுத்துறைகளை  மேலும் அழித்தொழித்து தனியாரை வாழ்விக்க ஆட்சிக்கட்டிலில் ஏறத்துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியோ இன்னொரு பக்கம்.
             பகாசூர கார்ப்போரேட் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் மாற்றாக தேச நலப்பணியில் அக்கறையோடு, எல்லோரும் எல்லாமும் பெற போராடும் இடதுசாரிக்கட்சிகள் தான் நம் நாட்டிற்கும், ஆட்சிக்கும் இன்றையத் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் மூலம் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு எல்லாமும் இந்நாட்டு மக்கள் அனைவரும் தடையில்லாமல்  பெறவேண்டும். அதற்காக ''இனியொரு விதி செய்வோம்... அதை நிறைவேற்றப் போராடுவோம்... இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கையை உயர்த்துவோம்.... தேசத்தை - மக்களை காப்பாற்றுவோம்... அதற்காக இப்புத்தாண்டில் உறுதியேற்போம்....''
               போரின்றி உலகில் அமைதி நிலவி... மனிதம் தழைத்து.... மானுடம் ஓங்கி... உலக மக்கள் மகிழ்வுடன் வாழ  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....!

1 கருத்து:

வேகநரி சொன்னது…

புது வருட வாழ்த்துக்கள்.