வியாழன், 16 ஜனவரி, 2014

பொதுவுடைமை கருத்துகளை பேசி ''புரட்சி நடிகராக'' உயர்ந்த எம்.ஜி.ஆர்....!

                ஒரு சாதாரண நாடக நடிகனாக தனது ஏழாவது வயதில் கலைப்பயணத்தை தொடங்கி, பின்னர் திரைப்படத்தில் நுழைந்து புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எனப் படிப்படியாக முன்னேறி தமிழக முதல்வராக உயர்ந்தவர் தான் இன்றும் தமிழ் மக்களின் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர். என்ற மனிதர்.
                  ஏழு வயதிலேயே தன்  குடும்ப வறுமையின் காரணமாக நாடகக் கம்பெனியில் சேர்ந்த எம்.ஜி.ஆர். நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ச்சிபெற்று சினிமா உலகத்தில் நுழைந்து நாடறிந்த பெரிய நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அந்த வகையில் அவர் மக்களின் பேராதரவைப் பெற்று, மக்களின் மனதில் நீங்காத கதாநாயகனாய் இடம் பிடிப்பதற்கு ''பொதுவுடைமைக் கருத்துகளையும்''  ''பொதுவுடைமைவாதிகளையும்''  பயன்படுத்திகொண்டது அவரது புத்திசாலிதனத்தை தா காட்டுகிறது. பொதுவுடைமைக் கருத்துகளை கொண்ட வசனங்களும், பாடல்களும், கதைகளும், திரைப்படத்தின் தலைப்புகளும், பொதுவுடைமைவாதி போன்ற கதாபாத்திரங்களும் தான் எம்.ஜி.ஆர் பால் மக்களை வெகுவாக ஈர்த்தன. திரைப்படங்களில் அவர் பெற்ற வெற்றிகளின் வேர்களை தோண்டிப்பார்த்தால், அங்கே பொதுவுடைமை நீர் பாய்ந்த சுவடுகள் தெரியும்.
             குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்,  எம்.ஜி.ஆர் முதன்முதலாக தானே தயாரித்து இயக்கிய ''நாடோடி மன்னன்'' திரைப்படத்தில், மன்னன் மார்த்தாண்டனாகவும், மன்னராட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சிக்காரன் வீராங்கனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் புரட்சிக்காரன் வீராங்கன் பேசும் வசனங்கள் யாவும் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் உள்ள ஷரத்துகள் தான் என்பது எம்.ஜி.ஆருக்கும், அன்றைய  கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல். அந்தக் காலத்திலேயே வீராங்கன் பேசும் வசனத்தைக் கேட்டு இரசிகர்களின் கைத்தட்டலில் திரையரங்கமே அதிர்ந்தன. அந்த வசனங்கள் யாவும் கண்ணதாசன் எழுதியது தான் என்றாலும், சாதாரண மக்களை கவரும் வண்ணம் வசனங்களை எழுதுவதற்கு  கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தான் பயன்பட்டது.   பிற்காலத்தில் அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை வசனமாக பேசிய எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவராக அழைக்கப்பட்டு ஆட்சிக்கு வந்துவிட்டார். அறிக்கையை கொடுத்த  கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்கள் ஜனநாயக புரட்சிக்காக இன்னும் போராடிக்கொண்டே இருக்கிறது.
                 ஆரம்பக் காலத்திலிருந்தே எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றால், அநியாயங்களை எதிர்க்கும பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், அறியுரை வழங்கும் பாடல்கள், உழைப்பாளி மக்களை உயர்த்தும் பாடல்கள், வீரம் செறிந்த பாடல்கள் என அவரது எதிர்ப்பார்ப்புக்கு தகுந்தாற்போல் பாடலாசிரியர்களும் மக்களை கவரும்படியாக பாடல்களை எழுதி கொடுத்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் ''மக்கள் கவிஞர்'' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர் எழுதிய அத்தனை பாடல்களும் எம்.ஜி.ஆரின் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
              இப்படியாக தான் புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துகளை பேசியும், பாடியும் தான் ஒரு சாதாரண எம்.ஜி.ராமச்சந்திரன் பிற்காலத்தில் ''புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்'' - ஆக உயர்ந்தார்.

கருத்துகள் இல்லை: