சனி, 29 மார்ச், 2014

வாரணாசியில் மோடி - பின்னணி என்ன...?


  கட்டுரையாளர் :  பிரகாஷ் காரத்                    
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                   
       மக்களவைத்தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசியிலிருந்து போட்டியிடுகிறார். அச்சுறுத்தலுடன் கூடிய அரசியல் செய்தியை தருவதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. தீவிரமான இந்துத்துவா கொள்கையே தேர்தல் பிரச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கும் என்ற சமிக்ஞையை பாஜக-வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தருகின்றன. வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதன் நோக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக பாஜக எதுவும் கூறாத போதும், வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதால் மக்களவைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் பகுதிகளிலும் அக்கட்சிக்கு பலன் கிடைத்திடும் என ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான காரணம் மூடி மறைக்கப்படுகிறது.
                20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி மதவாத இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகனாக எல்.கே.அத்வானி முன்னிறுத்தப்பட்டாரோ, அதுபோல தற்போது அதனுடைய புதிய அதிர்ஷ்ட நாயகனாக மோடி முன்னிறுத்தப்படுகிறார். வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவது என்பது, அந்த புனிதமான நகரத்தின் ஆன்மீகத் தன்மை குறித்தும், அங்கு எவ்வாறு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது - இஸ்லாமிய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுப் புடவைகள் இந்து வர்த்தகர்களால் வியாபாரம் செய்யப்படுகிறது, பிரபல ஷெனாய் கலைஞரான பிஸ்மில்லாகான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தார் -என்றெல்லாம் கார்ப்பரேட் ஊடகத்தை தேனொழுகப் பேச வைத்துள்ளது. இத்தகையதொரு சூழலை முன்னெடுத்துச் சொல்கிற வாரிசுதாரராக பரம்பரை சொத்தை அடைபவராக மோடியை முன்னிறுத்தும் முயற்சியே இது ஆகும்.

மோடி - இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகன்              

              உண்மையில் சொல்லப்போனால், நிச்சயமாக அப்படி எதுவுமில்லை. இரண்டாவதாக குஜராத்தின் மற்றொரு இடத்திலிருந்து போட்டியிடுவதுடன், வாரணாசியிலிருந்தும் மோடி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய மற்றும் கூடுதல் அபாயகரமான சங்கேத குறியீடும் அடங்கியுள்ளது. மதவாதத்தின் வரலாறும், வன்முறையை தூண்டுவதற்கான அதன் அடாவடியான முயற்சிகளும், உத்தரப்பிரதேசம் மதரீதியாகப் பிளவுபட்டபோது அதில் முக்கிய இலக்காக வாரணாசி இருந்தது என்பதெல்லாம் வேண்டுமென்றே மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது அல்லது பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு, 10-ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபொழுது, 1991ம் ஆண்டில் என்ன நடந்தது என்பதனை திரும்பிப் பார்த்திட வேண்டும்.
                1990ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்எஸ்எஸ்-சும் பாஜக-வும் சேர்ந்து அத்வானியின் ரதயாத்திரையை துவக்கின. அக்டோபர் மாதத்தில் அத்வானியின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டு, அவர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வெடித்த மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆர்எஸ்எஸ்-விஎச்பி தலைமையில் நடத்தப்பட்ட ராமர் கோவில் இயக்கத்தின் இலக்காக இருந்த பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தி, உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தின் மையப்புள்ளியாக இருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி, வாரணாசியில் க்யான்வாபி மசூதி மற்றும் மதுராவில் ஈத்கா ஆகிய மூன்று இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் கூக்குரல் எழுப்பியது. அயோத்தியில் ராமர் கோவில், காசியில் சிவன் கோவில் மற்றும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் ஆகியன கட்டப்பட்டுள்ளன. 

வாரணாசி - வகுப்புவாத வன்முறைக்கான இலக்கு                   

                இவ்வாறாக, வாரணாசி நகரம் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் முக்கிய இலக்கானது. அதுவரை வாரணாசி நகரமானது வகுப்புவாத சக்திகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வாரணாசி நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளே செல்வாக்கினைப் பெற்றிருந்தன. எனினும், ராமஜென்மபூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஷிலபூஜன் யாத்திரையை துவங்கிய பின்பு இந்நிலைமை மாறிப் போனது. 1989ல் இந்நகரத்தில் முதன்முறையாக மதமோதல் ஏற்பட்டது. நவம்பர் 1991ல் அடுத்த கட்ட மதக்கல வரம் நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி நடை பெற்ற சம்பவத்தில் ஒரு மதத்தினைச் சார்ந்தமக்கள் கொல்லப்பட்டனர், இதற்கு பழி வாங்கும் விதமாக நவம்பர் 13 அன்று மீண்டும் படுகொலைகள் நிகழ்ந்தன.
              இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியான மதன்புராவில் காவல் துறை நுழைந்து, அங்கு வசித்து வந்த பிரபல மருத்துவரான டாக்டர் அனீஸ் என்பவரை வெளியே இழுத்து வந்து அவரை அடித்துநொறுக்கியது. பின்னர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். இந்தவன்முறை சம்பவத்தின்போது கிட்டத்தட்ட 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதற்கு பிறகு வந்த ஆண்டில் இந்நகரத்தில் மக்கள் மதரீதியாக பிளவுபடுவது உச்சகட்டத்தினை எட்டியது. விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பாபர்மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதனையடுத்து தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டனர். “ஹர ஹர மகாதேவ”, “அல்லாஹு அக்பர்” ஆகிய முழக் கங்களின் பின் இரு மதத்தை சார்ந்தவர்களும் அணிதிரள்வது அதிகரித்தது. வாரணாசி நகரமானது இந்துத்துவா சக்திகளின் கொத்தளமாக மாறிப்போனது.

களத்தில் சிபிஎம்            

                 அடுத்து வந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும், வாரணாசி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதரீதியான பிளவு மக்கள் மத்தியிலே அதி கரித்து வந்த பின்னணியில் 1991, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்டது. 1991ல் ஜனதா தள கட்சியின் ஆதரவுடனும், பின்னர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு, நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது வாரணாசி தொகுதியின் கிராமப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் பாஜக பெரும்பாலான வாக்கு களைப் பெற்றது.
                    1996 மற்றும் 1998-99 ஆகிய கால கட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகபெற்ற செல்வாக்கினை அதனால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் வெறும்10ல் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந் தது. இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறு வது என்பது பாஜகவிற்கும், அதன் பிரதம மந்திரி வேட்பாளாரான நரேந்திர மோடிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். 16வது மக்களவைக்கான தேர்தல்களை மனதில் கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜகஆகியன உத்தரப்பிரதேசத்தில் மதரீதியான பிளவை உண்டாக்குகிற சூழலை ஏற்படுத் திடுவதுடன், திட்டமிட்டு மதரீதியிலான பதற்றத்தை உருவாக்கிடவும் நீண்ட காலதிட்டத்தை செயல்படுத்தின. மோடியின் முக் கிய தளபதியான அமித் ஷா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். 

உத்தரப்பிரதேசத்தில் மதமோதலுக்கான வரைபடம்                

                    2012 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெற்று அரசினை அமைத்த பிறகு இந்த வரைபடம் செயல்படுத்தப்பட துவங்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்கிற மிக மோசமான மதரீதியிலான பொய்ப்பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்சும் அதன் பரிவாரங்களும் முழுமூச்சாக கட்டவிழ்த்து விட்டன. பசுக்கள் இஸ்லாமியர்களால் உணவுக்காக கொல்லப்படுவதாகவும், இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை ஆசை காட்டி ஏமாற்றுவதாகவும் மற்றும் இதர மதஉணர்வை தூண்டக் கூடிய பிரச்சனைகள் திட்டமிட்டு எழுப்பப்பட்டன.
                  கோசிகலன்பகுதியில் முதல் முறையாக மதமோதல் நடைபெற்றபோது, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டது கவலையளிப்பதாக இருந்தது. அடுத்து வந்த இரண்டாண்டு காலத்தில், பிரதாப்கர், பரேய்லி, சஹரன்பூர், பைசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநிலம் முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மதமோதல் நிகழ்வுகள் அரங்கேறின. பைசாபாத்தின் நகர்ப்புற பகுதியில் மோதல் நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு, அம்மாவட்டத்தின் இதர கிராமப்புற பகுதிகளிலும் மோதல்களை தூண்டிவிடுவதற்கான முயற்சிகளும் அதே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக செப்டம்பர் 2013ல் முசாபர்நகர் மதக்கலவரம் நடைபெற்றது.
                பல நூறாண்டுகளாக ஜாட் பிரிவு மக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வசித்து வந்த கிராமங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கிராமப்புற மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளதையே வெளிப்படுத்தின. அதுவரை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மதமோதல் நிகழ்வுகள் எல்லாம் நகர்ப்புற பகுதிகளையே மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தன. 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகள் என்பன, 1990 களின் துவக்க ஆண்டுகளில் நடைபெற்ற அதிர்ச்சியில் உறையச் செய்த மதமோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதிலுமாக முதன்முறையாக நடைபெற்ற மோதல் நிகழ்வாகும். இப்படித்தான் மோடியின் நுழைவிற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று மோடிவாரணாசியில் பேரணி ஒன்றை நடத்தினார். கூட்டமேடையின் பின்னணியில் சிவபெருமானின் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
          சோமநாதரின் மண்ணிலிருந்து பாபா விஷ்வநாத்தின் பூமிக்கு வந்திருப்பதாக அக்கூட்டத்தில் மோடி பேசினார். சோமநாத்திலிருந்துதான் மோடி தனது ரதயாத்திரையைத் துவக்கினார். “ஹர ஹர மகாதேவ்” என்கிற மதரீதியான மந்திரத்தைப் போல் “ஹர ஹர மோடி” என்ற மந்திரத்தை பாஜக தொண்டர்கள் உச்சாடனம் செய்தனர். இவர்களது இந்த நடவடிக்கையானது, அந்நகரத்தில் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 1992ல் இந்துத்துவா வெறியர்கள் உச்சாடனம் செய்த முழக்கங்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. 

மிகப்பெரிய யுத்தம்                   

                    வாரணாசியில் இருந்து பாஜகவின் வேட்பாளரான மோடி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றிட வேண்டிய நாடகத்திற்கு சங்பரிவார் எழுதிய கதை வசனத்தின் ஒரு பகுதியே ஆகும். இது பீகாருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலானது உத்தரப்பிரதேச மாநில மக்களை கடந்த 15 ஆண்டுகளாக உற்சாகப்படுத்திடவில்லை என்பது உண்மை யாகும். இந்த உண்மையின் பின்னணியில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இருக்காது என்றபோதும், அதே அரசியல் ரீதியிலான செய்தி ஒளிவுமறைவாகவும், இரகசியமாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ராமர் கோவிலுக்கான தீவிரமான இந்துத்துவா பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டபோது பார்க்கப்பட்ட பழைய முகங்கள் எல்லாம் இன்று இவர்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில் பின்னுக்குப் போயுள்ளனர். மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள கல்யாண் சிங் தனது மகனை வேட் பாளராக நிறுத்தியுள்ளார்.
              உமா பாரதியும், சாக்ஷி மஹராஜூம் கூட இம்மாநிலத்திலிருந்து தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். “இந்து தேசியவாதி” என தன்னைத் தானே பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மோடிதான் இந்த யுத்தத்தினை நடத்திட இவர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார். எனவே, இது ஏதோ வாரணாசியில் மோடிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மட்டுமல்ல. இந்திய நாட்டின் மிகப்பெரிய மாநிலத்திலும், நாடு முழுவதிலும் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திட முயலும் ஒட்டுமொத்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கிடும். இதில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்தர் அன்சாரியின் குவாமி ஏக்தா தள் ஆகிய கட்சிகளும் அடங்கும். 2009ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த அன்சாரி, மாபியா கும்பலை நடத்தி வருபவர். தற்போது இவர் சிறையில் இருக்கிறார். இத்தகையதொரு சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
             இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளரின் பெயரை ஒரு மாதத்திற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. ஒரு வலுவான பொதுவான காங்கிரசல்லாத மதச்சார்பற்ற வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்திடுவதற்கான இசைவு ஏற்பட்டிருக்குமேயானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் களத்திலிருந்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றிருக்கும். அத்தகையதொரு கூட்டு மேடை என்பது இல்லாத சூழலில், வாரணாசி தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் போட்டியிடுவதும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திடு வதற்கான அரசியல் பிரச்சாரத்தை வலுவான முறையில் நடத்திடுவதும் அவசியமாகும்.
தமிழில் : எம்.கிரிஜா               

கருத்துகள் இல்லை: