திங்கள், 14 ஜூலை, 2014

சூதாட்டக் களமாகும் தேசம்...!


 கட்டுரையாளர் : வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்                   
       
               ஊடகங்களின் அர்த்தமற்ற ஆரவாரங்களுடன் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மோடி அரசின் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக பன்னாட்டு நிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும்,  காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்யும், இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும். அது மட்டுமின்றி, இப்படிசெய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.
          பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்தினால், பல ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தி செய்ய பன்னாட்டு மூலதனம் வரும் என்ற பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் அப்படியே வந்தாலும், தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அவை கொடுக்கும் என்றஉத்தரவாதமும் கிடையாது. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் தேசப்பற்று உள்ளஅனைவரும் எதிர்க்க முன்வரவேண்டும்.

வங்கிகள் நாசமாகும்                               

           மற்றொரு அபாயகரமான முன்மொழிவு ஒன்று பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் கூறுகிறது. முதலில், பன்னாட்டு நிதியம் முன்மொழியும் பாசில் நெறிமுறைகள் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அடித்தளம் அமைய வேண்டுமா என்பதே சர்ச்சைக்கு உரிய பிரச்சனை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளாக இருப்பதால் இவை வாடிக்கைதாரர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளன.
            கடந்த காலங்களில், இந்தியன் வங்கி போன்ற வங்கி களைப்பற்றி தனியார் வங்கி ஆதரவாளர்களும் ஊடகங்களும் பெரும் பீதியைக் கிளப்பிவிட்ட போதும்மக்கள் தொடர்ந்து தங்கள் சேமிப்புகளை பொதுத்துறை வங்கிகளில் தான் கொண்டுசேர்த்தனர். கடனை திருப்பித்தராமல் மோசடி செய்யும் சில பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் அரசு நிர்ப்பந்தத்தில் கடன் தரும் நடவடிக்கையால் சில வங்கிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் கூட, பொதுத்துறை வங்கிகள் இன்றும் பொதுமக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே உள்ளன. அப்படியே இந்த வங்கிகளின் மூலதன அடித்தளத்தை உயர்த்த வேண்டும் என்று கருதினால் அதை அரசே மூலதனம் அளித்து செய்ய வேண்டும். சாதாரண மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயரில் விற்கப்பட உள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் அவர்கள் நேரடி பொதுத்துறை வங்கி உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற கவர்ச்சிகரமான ஆனால் தவறானவாதத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
             உண்மையில் இவ்வாறு பொது மக்கள் வாங்கும் பங்குகள் அவர்கள் கையில்நிலைத்து நிற்காது. அவர்கள் விற்கும் பங்குகளை பெருமுதலாளிகள் வாங்கி காலப்போக்கில் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் செல்வாக்கு ஓங்கும். பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதுதான் அரசின் உண்மையான நோக்கமும் கூட. எனவே இதுவும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அம்சம் ஆகும்.

வெற்று அறிவிப்புகள்                    

          நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. இவைபட்ஜெட்டில் இடம் பெறாது. எடுத்துக்காட்டாக, வேளாண் துறைக்கு வங்கிகள் மூலம் எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன்அளிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான். இது அரசின் வரவு-செலவு-தொடர்பான விஷயம் அல்ல. மேலும் இப்படி கடன்கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. செலவு மேலாண்மை ஆணையம் ஒன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு பற்றி தெளிவு எதுவும் இல்லை. இப்படி ஏராளமான ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறாத பெரிதும் சிறிதுமான அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அமைச்சர் அள்ளி வீசிஉள்ளார்.
          அவை அனைத்தையும் பற்றி இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த அறிவிப்புகளை அமலாக்கும் பொழுதுதான் அவற்றின் விளைவுகள் புலப்படும். எனினும் அவற்றில் பல அபாயகரமானவை என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் சூதாட பெரும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வரிவிகிதங்கள் நிலையாக இருக்கும், மாற்றப்படமாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்புகள் முன்தேதியிட்டு மாற்றப்படாது என்ற வாக்குறுதி வோடபோன் போன்ற கம்பெனிகளை குஷிப்படுத்தும் விளைவை கொண்டது. (ஆனால் நாம் உள்நாட்டில் ரயில்பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் டிக்கட் வாங்கிய தேதியில் ஒரு விலை, அது பின்னர் மாற்றப்பட்டு ரயிலில் நாம் ஏறியவுடன் கூடுதல் கட்டணம் தரும் நிலை என்பது தொடர்கிறது!) 

தேக்கம் தொடரும்                      

                  பட்ஜெட் முன்வைத்துள்ள வரவு- செலவு கணக்குகள் மற்றும் முன்மொழிவுகளுக்குள் செல்வோம். அவற்றை எடைபோட, முதலில் எத்தகைய பொருளாதாரச்சூழலை நாடு சந்திக்கிறது என்பதைக் காண வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. அதிலும், தொழில்துறை தேக்க நிலையில் உள்ளது. வேளாண் துறை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது, ஆனால் மொத்தத்தில் அதன் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. பன்னாட்டுப் பொருளாதாரம் நெருக்கடியில் தொடர்கிறது.
           இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்த கிராக்கியை அதிகப்படுத்தும் வகையில் அரசு கூடுதல் திட்ட ஒதுக்கீடு செய்வதும் உள்நாட்டு சந்தையை வேகமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தேவை. ஆனால் பட்ஜெட் அப்படி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2013-14ஆம் ஆண்டில் மொத்த திட்ட ஒதுக்கீடு பட்ஜெட் கணக்குப்படி 5,55,322 கோடிரூபாயாக இருந்தது. 2014-15க்கு 575 ஆயிரம் கோடி என்ற அளவிற்குத்தான் உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் பெருமளவு உயர்வு இல்லை. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது உண்மை அளவில் சென்ற ஆண்டை விட குறைவு ஆகும். அரசின் மொத்த செலவும் பட்ஜெட் கணக்கில் ஒப்பிடுகையில் பதினாறு லட்சத்து 65 ஆயிரம் கோடியில் இருந்து பதினேழு ஆயிரத்து 95 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது. இதுவும் தேக்க நிலை தான்.
          எனவே வளர்ச்சியை அரசு மூலம் ஊக்குவிக்கும் முயற்சி பட்ஜெட்டில் இல்லை. துறைவாரியான திட்ட ஒதுக்கீடுகளும் இதையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஊரக வளர்ச்சி துறையில் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி 80,194கோடி ரூபாய்.இந்த ஆண்டு 83,793 கோடி. உண்மை அளவில் குறைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு 65,869கோடி. இந்த ஆண்டு 68,728கோடி. உண்மை அளவில் சரிவு. ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சென்ற ஆண்டு 32745கோடி இந்த ஆண்டு 34225கோடி. எந்த முன்னேற்றமும் இல்லை, சரிவு தான். இந்த உதாரணங்கள் போதுமானவை. ஆக, முக்கிய துறைகளான, ஊரக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, ஆரோக்கியம் போன்றஅமைச்சக திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் குறைந்துள்ளன.

செல்வந்தவர்களுக்கு மகிழ்ச்சி                       

              அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறைவு. செல்வந்தர்கள் மீது எந்த வரி விதிப்பும் புதிதாகஇல்லை என்பது மட்டுமல்ல. அவர்களிடம் வருமான வரித் துறை நெளிவுசுளிவாக நடந்துகொள்ளும் என்றும் ஆங்காங்கு பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெரும் மத்தியதர பகுதியினருக்கு தரப்பட்டுள்ள வருமான வரி சலுகை என்பது இந்தப்பகுதியினர் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, இதனால் ஏற்படும் பணப்பயன் விலைவாசி உயர்வில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை. மேலும், இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதும் செய்யாத நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
            மொத்தமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளால் அரசுக்கு இழப்பாக இருக்கும் இந்த நிதி ஆண்டில் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் மறைமுக வரிகள் மூலம் 7 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருமானம் கிட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ 19 லட்சம் வரவு செலவு செய்யும் பட்ஜெட்டில் இந்த வரி முன்மொழிவுகளின் தாக்கம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ரயில் கட்டண உயர்வு, தொடர்ந்து எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது போன்றவை விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் என்பதும் பட்ஜெட்டும் அதே பாதையில் பயணிக்கிறது என்பதும் உண்மையே.
            சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மானியங்களுக்கு செலவிடப்பட்ட தொகை 2,55,516 கோடி. இந்த ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் சொற்பமான அளவில் 5142 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நாம் கடுமையான விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான். அதுவும் இராக் நிலைமைகளை கணக்கில் கொண்டால் எரிபொருள் விலைகள் பன்னாட்டு சந்தையில் உயரும் என்பது திண்ணம். மானிய ஒதுக்கீடு உண்மை அளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விகித குறைப்பால் களித்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.

‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம்                

              செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் வரி விதித்து வளம் திரட்ட மறுக்கும் மத்திய பா ஜ க அரசு, பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. அதீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசு அனுமானிக்கிறது. இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால் ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலமும் மானியங்களை மேலும் வெட்டுவதன் மூலமும். செலவுகள் மேலும்வெட்டப்படும். மறுபுறம் பொதுத்துறை சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
            தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதலில் பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி அதன் அமைச்சராக அருண் ஷோரியை நியமித்து அழகு பார்த்தது. மீண்டும், காங்கிரசை விஞ்சும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு விற்று தனது ‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம் என்பதை பாஜக நிரூபிக்க முனைகிறது என்பது இந்த பட்ஜெட் சொல்லும் முக்கிய செய்தி. இந்த பட்ஜெட்டில் மட்டும் நாற்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதுதான்.
           இது ஒரு துவக்கமே.நல்ல நாட்கள் வந்து விட்டன. யாருக்கு என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நல்ல நாட்களை அனுபவித்த இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு இன்னும் கூட நல்ல நாட்கள் வரவுள்ளன, மோடி அரசு தனது முதல் பட்ஜெட் மூலம் தனது எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசும் கட்சியும். அதில் உலாவரும் போலி சுதேசிகளும் தற்சமயம் தற்காலிகமாக தலைமறைவாக உள்ளனர் போலும்!
நன்றி : தீக்கதிர்                         

கருத்துகள் இல்லை: