ஞாயிறு, 20 ஜூலை, 2014

இஸ்ரேலின் அடாவடித்தனத்தை மோடி கண்டிக்காததேன்...?

                           இன்னும் கொஞ்சகாலம் போனால்  உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை தேடவேண்டியிருக்கும். அந்த அளவிற்கு இஸ்ரேல் கரையான் அரிப்பது போல பாலஸ்தீனம் என்ற ஒரு முழு நாட்டை சட்டவிரோதமாக கொஞ்சம்கொஞ்சமாக ஆக்கிரமித்து எஞ்சியிருக்கும் இடத்திலும் பாலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழவிடாமல் அடாவடித்தனம் பண்ணுகிறது. அமெரிக்காவின் ''நெருங்கிய கூட்டாளி'' என்ற ஒரு  தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, உலக நாடுகள் எவருக்கும் பயம் கொள்ளாமலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்சம் இல்லாமலும், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து, அடாவடித்தனமாக ஆக்கிரமிப்புகளை செய்து அங்கு தங்களது குடியிருப்புகளை உருவாக்கி மனித குலத்திற்கு எதிராக இஸ்ரேல் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
                அதன் ஒரு பகுதியாக, பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சிறு பகுதியான காஸா என்ற  மக்கள் கூட்டமாக வாழும் பகுதியின் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் மூர்க்கத்தனமாக குண்டுகளை வீசி 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்திருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து காயத்திற்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். இது தவிர ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும்.
               இவ்வளவு பெரிய நாசகர பயங்கரவாத செயலில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. இதை எந்த சர்வதேச ஊடகங்களும் ஒரு செய்தியாகக்கூட இதுவரையில் வெளியிடவில்லை. பயங்கரவாதத்தை பற்றியும், மனித உரிமை பற்றியும் வாய் கிழிய பேசும் அமெரிக்காவும் இஸ்ரேலின் இந்த இரக்கமற்ற செயலைப்பார்த்து வாய்மூடி மவுனம் சாதிக்கிறது. உலக அமைதி - ஒற்றுமை பற்றியெல்லாம் கவலைப்படும் ஐக்கிய நாடுகள் சபையோ பாராமுகமாய் இருக்கிறது. ஆனால் உலகின் பல்வேறுப்பகுதிகளில் வாழும் மனிதாபிமானம் கொண்ட அமைப்பினரும், மக்களும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்பி ஆங்காங்கே பேரணிகளை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதைப்பார்க்கும் போது  சற்று ஆறுதலாக இருக்கிறது.
                நம் நாட்டில்  கூட இடதுசாரிக்கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் இஸ்ரேலுக்கெதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பிவருகிறார்கள். இதே நேரத்தில் புதுடெல்லியில் பாராளுமன்றம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு தானாகவே முன் வந்து,  நேர்மையற்ற இந்தப் போரை கண்டித்து விவாதித்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கலாம். பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் எடுத்து சொல்லியும், சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளும் நமக்கு நட்பு நாடுகள் என்பதால் கண்டிப்பதற்கில்லை என்று மோடி அரசு நழுவிவிட்டது. இஸ்ரேலை கண்டிப்பதன் மூலம் அதன் நெருங்கிய கூட்டாளியும் மோடி அரசின் ''பெரிய அண்ணனுமான'' அமெரிக்காவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதும், இதன் மூலம் அமெரிக்கா உடனான உறவில் விரிசல் வந்துவிடக்கூடாது என்பது   தான் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள நிர்பந்தங்கள்  என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இஸ்ரேலை கண்டிக்காததன் மூலம் மோடி தனது நீண்டநாளைய ''அமெரிக்க கனவு பயணத்தை'' நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியாமல் இல்லை.

கருத்துகள் இல்லை: