புதன், 3 செப்டம்பர், 2014

மோடியின் 100 நாள் ஆட்சியும் ஈர்க்கும் ஆடையலங்காரமும்....!

                 ''வளர்ச்சி... வளர்ச்சி'' என்று சொல்லி மக்களை ''வளைச்சி வளைச்சி'' ஓட்டுக்கேட்டு வெறும் 31 சதவீத வாக்குகளே பெற்றாலும், தேர்தலில்   வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்ற அடிப்படையில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்று இன்று நூறாவது நாளை தொடுகிறது. அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கு நூறாவது நாளை தொடுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நூறு நாட்களில் மோடி தலைமையிலான ஆட்சி என்ன சாதித்தது....? நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன் என்று தன்னை பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மோடி கடந்த நூறு நாட்களில் என்ன சாதித்து காட்டினார்....? இந்த கேள்வியெல்லாம் நூறு நாளிலேயே கேட்டா எப்படி...? இன்னும் 5 வருஷம் இருக்கு இல்ல..? அப்படின்னு கேள்வி வரும். ஏன் இந்த ''நூறு நாள்'' அளவுகோளை எடுக்கிறோம் என்றால், தேர்தல் நேரத்தில மோடியும், அவரது கூட்டாளிகளும் தான் நாங்கள் பதவியேற்று 100 நாளில ''வானத்தை வில்லா வளைப்போம்... மணல கயிறா திரிப்போம்... நாங்க வித்தியாசமானவங்க...'' என்றெல்லாம் வாய் ஜாலமும் வார்த்தை ஜாலமும் மாயா ஜாலமும் காட்டித்தான் இப்போ ஆட்சியில உட்கார்ந்துகிட்டு இருக்காங்க.
                   ஆனால் இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன...? மோடி என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறாருன்னு பார்த்தா தலையே சுத்தும். இவர்கள் பதவியேற்றவுடன் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்திக்காட்டினார். இரயில் கட்டணத்தையும்  கடுமையாக உயர்த்திக்காட்டினார். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு... இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீடு... இரயில்வே துறையில் அந்நிய  நேரடி முதலீடு... என அந்த மூன்று துறைகளையும் பார்சல் செய்து இந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணம் போகும்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பரிசுப்பொருளாய் கொடுக்க  ஏற்பாடுகள் செய்தார். 64 ஆண்டுகாலமாக இயங்கிவந்த திட்டக்கமிஷனுக்கு மூடுவிழா நடத்த கருத்துக்கேட்டார்.  வசதியற்ற மக்களுக்கு வருமானம் இல்லையென்றாலும் பரவாயில்லை. காசு இல்லையென்றாலும் பரவாயில்லை. பசிக்கிற வயித்துக்கு சோறில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம் என்று ''கட்டாய வங்கிக்கணக்கு'' அறிமுகம் செய்துவைத்தார். ஏறுகின்ற விலைவாசியை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பதவியேற்ற 100 நாட்களில் பூட்டான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். தேர்தல் வரையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவர், பிரதமராக ஆனப்பிறகு பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால் வெளிநாட்டில் பேசுவார். இவைகள் தான் மோடியின் 100 நாள் சாதனைகளாக மக்களால் இன்றைக்கு முணுமுணுக்கப்படுகின்றன.
                 ஆனால் மோடியின் அரசியல் காலத்தை மூன்று காலமாக பிரிக்கலாம். ஒன்று...  பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு  முந்தைய காலம்.  இரண்டு... பிரதமர் வேட்பாளர் காலம். மூன்று... பிரதமர் பதவிக்காலம். இதுல 100 நாள் பிரதமர் பதவிக்காலம் தான் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் கருதவேண்டும். மேலே சொன்ன சாதனைகள் ஒருபுறமிருக்க. இன்னொரு பக்கம்... இந்த பிரதமராக இருக்கும் இந்த 100 நாட்களில் நரேந்திரமோடி சுமார் 200-க்கும் அதிகமான ஆடை அணிந்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல ஒரு முறை அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிந்ததில்லையாம். இந்தியாவில் உள்ள முக்கிய உடையலங்கார நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் தான் இது. இன்றைக்கு ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் மோடியின் ஆடை அலங்காரங்களைப் பார்த்து ஜப்பானிய பிரதமரே அசந்துபோய்விட்டாராம். ஜப்பானில் ஒரே நாளில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான்கு வெவ்வேறு விதமான ஆடைகளில் கலந்துகொண்டாராம். அந்த நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்துகொண்ட ஜப்பானிய பிரதமரே ''அடேங்கப்பா....!!!!! இவ்வளவு டிரெஸ் வெச்சிகிட்டு நம்மகிட்ட கடன் கேட்கிறாரே'' என்று அசந்துபோய் விட்டாராம்.
           பொதுவாகவே நரேந்திரமோடி பொதுவாகவே ஒரு ''அலங்காரப்பிரியர்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நடையலங்காரம், உடையலங்காரம், பாவனையலங்காரம், சொல்லங்காரம்... உடலசைவில் அலங்காரம்... என இந்த அலங்காரங்களில் மோடி அதிக நாட்டமும் மோகமும் கொண்டவர். அதற்காகவே பணத்தையும் நேரத்தையும் சிந்தனையையும் செலவிடக்கூடியவர் என்று அவருக்கு அருகிலிருப்பவர்களே சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மோடியிடம் பதவியேற்ற இந்த 100 நாட்களில் இப்படிப்பட்ட  அலங்காரங்களில் அதிகமான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது. மக்கள் தன்னை ஒரு பிரதமராக பார்ப்பதை விட ஒரு ''ஹீரோவாக'' பார்க்கவேண்டும் என்று அதிக கவனம் செலுத்துகிறார் என்றே சொல்லவேண்டும்.  பிரதமர் என்ற முறையில் அவர்  ஒரு இடத்திற்கு சென்றால், தன்னுடைய நடை, உடை, பாவனைகளாலும், ஏதாவது ''வித்தியாசமான'' செயல்களாலும் அங்கு கூடியிருப்பவர்களை தன்பால் ஈர்க்கும் வேலைகளில் சிந்தித்து செயல்படுகிறார். .
                மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன்முறையாக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும் போதே, அவரது சிந்தனையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தேசத்தின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும், இழப்புகளையும் சந்தித்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று பாராளுமன்றத்தின் உள்ளே நுழையும் போது ஜவஹர்லால் நேரு கூட செய்யாத செயலை, இந்திய பெருமுதலாளிகளின் செலவில் பிரதமர் பதவியை பெற்ற நரேந்திரமோடி செய்தபோது அதைப்பார்த்த நமக்கெல்லாம் புல்லரித்துப் போனது. அதை அருகிலிருந்து பார்த்த தாத்தா அத்வானியே ''அய்யோ.... போதும் டா சாமி'' என்று அழுதுவிட்டார் என்றால் பாருங்களேன். பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே நுழையும் போதே அதன் படிகளை குனிந்து வணங்கி முத்தமிட்டு நுழைந்தாரே மோடி அது தான் அவரது 100 நாள் சாதனையின் முதல் படிக்கட்டு. அன்றையிலிருந்து மேலே சொன்ன சாதனைகளை திறம்பட செய்து இன்று ஜப்பான் நாட்டில் அந்த நாட்டு மக்களின் முன்னால் ''டிரம்ஸ் சிவமணி'' போல் மோடி டிரம்ஸ் வாசித்து காட்டினாரே அது தான் அவரது 100 நாள் சாதனைகளின் கடைசிப் படிக்கட்டு. அன்று முதல் இன்று வரை இந்த 100 நாட்களில் தன்னை  ஒரு பிரதமர் என்று காட்டிக்கொள்வதை விட ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ள அவர் பலவாறு யோசித்ததும், அதற்காக  நேரத்தையும், பணத்தையும் செலவழித்ததும்,  இந்த 100 நாட்களில் அவர் உபயோகப்படுத்திய விதவிதமான ஆடைகளையும், அதன் எண்ணிக்கையையும்  நிச்சயமாக யாராலும் மறுக்கமுடியாது. ஒரு பிரதமருக்கு இப்படியெல்லாம் ஆடையலங்காரம் செய்துகொள்ள நேரமிருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள் அவருக்கு வாக்களித்த மக்கள். இவர் பிரதமர் வேலையைத்தவிர மற்ற வேலைகளை ''ரூம் போட்டு யோசித்து'' செய்கிறார் என்று அவருக்கு வாக்களிக்காத ''பெரும்பான்மை'' மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: