வெள்ளி, 26 செப்டம்பர், 2014

''மங்கல்யான்'' - இந்தியாவிற்கு பெருமையளிக்கும் சாதனை...!

         
 
            ''மங்கல்யான்'' - இந்திய விண்களம் நேற்று முன் தினம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. செவ்வாயும் நாம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை நமது விஞ்ஞானிகள் நிருபித்துக்காட்டியிருக்கிறார்கள். சிவப்பு கிரகத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த நான்காது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இதற்கு முன்னர் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருகிறது. ஆனால் மேலே சொன்ன மூன்று நாடுகளுமே செவ்வாயை நோக்கிய தங்களது முதல் மற்றும் அடுத்தடுத்த பயணங்களில் தங்களது இலக்கை எட்டமுடியாமல் தோல்வியடைந்து தொடர் முயற்சிக்குப் பின்னரே வெற்றியடைந்தன. ஆனால் நமது நாடு மட்டுமே தனது முதல் முயற்சியிலேயே தனது இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்து சாதனைப்படைத்து விண்வெளி வரலாற்றில் முத்திரைப்படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல நமக்கு முன்னரே ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளெல்லாம் செவ்வாயை நோக்கிய தங்களது முயற்சியில் இலக்கை அடையமுடியாமல் தொல்வியடைந்திருகின்றன என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் செய்தியாகும். 
                மேலும் இந்த மங்கல்யான் விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்த, இஸ்ரோ நிறுவனம் செய்த செலவுகளை கணக்கிட்டால், மற்ற நாடுகள் இதற்காக செய்த செலவுகளை காட்டிலும் மிக மிக குறைவு என்பது மட்டுமல்ல. நம் நாட்டில் உத்திரபிரதேசத்தில் அன்றைய முதலமைச்சர் மாயாவதி தனக்காக சிலை செய்து வைத்த செலவை காட்டிலும், குஜராத் மாநிலத்தில் இன்றைய பிரதமர் நரேந்திரமோடியின் ''கனவு திட்டமான'' வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஆகும் செலவை காட்டிலும்  மங்கல்யானுக்கு ஆன செலவு என்பது மிகவும் குறைவு  என்பதும் குறிப்பிடத்தக்கது. மங்கல்யான் பூமியிலிருந்து 68கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடைய இஸ்ரோ செய்த செலவு ரூ.450 கோடி மட்டுமே. அனால் மாயாவதி சிலைக்கு ஆன செலவோ ரூ.685 கோடி என்பதும், பட்டேல் சிலைக்கு ஆகும் செலவோ ரூ.2600 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.  
               உலகமே வியக்கும் வகையில் சிறப்புப்பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்குப்பின்னால் இஸ்ரோவில் பணிபுரியும் பல இந்திய விஞ்ஞானிகளின் அறிவும்,  ஆற்றலும், திறமையும், உழைப்பும் உள்ளன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆண் மற்றும் பெண் விஞ்ஞானிகள் என இருபாலரும் இணைந்தே இந்த வெற்றிக்கு பாடுபட்டிருக்கின்றனர். ஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் எப்போதும் போல் இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் மட்டுமே இருப்பது போல் காட்டுகின்றன. வழக்கம் போல் இங்கேயும் பெண்களின் அறிவும், ஆற்றலும், திறமையும், உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பது தான் வருத்தமான விஷயமாக இருக்கின்றன. மங்கல்யான் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் பணிபுரியும் மொத்தமுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களில்  இருபது  சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்   பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சுமார் 14,246 பெண்களின் பங்களிப்பும் மங்கல்யான் வெற்றியில் இருக்கிறது என்பதும்  நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டவுடன் அந்த வெற்றிக்கு பங்களித்த அங்கே கூடியிருந்த பெண்களும் தங்களுக்குள் கைத்தட்டி, கைக்கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நாம் நெஞ்சார பாராட்டவேண்டும்... வாழ்த்தவேண்டும்.

கருத்துகள் இல்லை: