ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்ற நேரமும், மக்கள் வரிப்பணமும் விரயம்...!

                        பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும், சொத்துக் குவிப்பு வழக்கு ஒருவழியாக வருகிற செப்டம்பர் 20 - ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்கள். தீர்ப்பை வைத்து நாட்டில் மக்களிடையே சூதாட்டமே நடைபெறுகிறது. சொல்லப்போகிற  தீர்ப்பு என்பது சாலைகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடும் விதமாக இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்போடு அதிமுகவும், திமுகவும் காத்திருக்கிறார்கள். தீர்ப்பு என்பது ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருந்தால் அது அதிமுகவிற்கு கொண்டாட்டமாக இருக்கும். அதுவே பாதகமாக இருந்தால் திமுகவிற்கு கொண்டாட்டமாகவே இருக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு திண்டாட்டமாகவே இருக்கும்.
               கடந்த 2000 - ஆம் ஆண்டில் தருமபுரியில் நடைபெற்ற பஸ் எரிப்பும், பஸ்ஸில் இருந்த மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் எரிந்து கருகிப்போன சம்பவத்தை இன்னும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. கொடைக்கானல் ப்லெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியபோது நடைபெற்ற அதிமுகவினரால் நடத்தப்பட்ட கொடுமையான சம்பவம் தான் அது. இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் இந்த நாட்டில் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதை தலைவர்கள் தான் தங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். 
             இது ஒருபுறமிருக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருவதற்கு பதினொரு  ஆண்டுகள் தேவைப்பட்டது என்றால் எவ்வளவு பொன்னான நேரங்களை நீதிமன்றம் விரயம் செய்திருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருமே நீதிமன்றத்தை உதாசினப்படுத்தி இருக்கிறார்கள் என்று  தான் அதற்கு பொருள் கொள்ளவேண்டும்.
              நீதிமன்ற நேரம் விரயம் ஆனது மட்டுமல்ல மக்களின் வரிப்பணமும் ஏராளமாக விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதினொரு ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு மட்டும் இதுவரையில் கர்நாடக அரசு ரூ.2.86 கோடிசெலவு செய்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தி வெளியே வந்திருக்கின்றது. இதில் ரூ.1.46 கோடியை தமிழக அரசு கர்நாடக அரசிடம் செலுத்திவிட்டதாம். இன்னும் ரூ.1.40 கோடி கர்நாடக அரசுக்கு தரவேண்டிய பாக்கியிருக்கிறதாம். மக்கள் பணத்தை சட்டவிரோதமாக குவித்த வழக்கிற்கு ஆகிற இத்தனைக் கோடி ரூபாய் செலவும் மக்களின் வரிப்பணம் தான் என்று என்னும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. 
                 இப்படியே தேர்தலுக்கு தேர்தல் மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் மாறி மாறி ஓட்டுப்போடும் தமிழக மக்கள் அப்பாவிகளா... ஏமாளிகளா.... அல்லது முட்டாள்களா...?

கருத்துகள் இல்லை: