வியாழன், 20 நவம்பர், 2014

தமிழகத்தில் காலூன்ற மோடி நடத்தும் அரசியல் நாடகம்...!

                
                 தான் ஆசைப்பட்டது போல் ஆட்சியை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்  நரேந்திரமோடி என்றாலும், நாடு முழுதுமான மக்கள் பேராதரவோடு வெற்றிபெற்று பிரதமரானவரில்லையே. வெறும் 32 சதவீத மக்களே தேர்ந்தெடுத்த பிரதமர் இவர். அதிலும் குறிப்பாக ஒரு சில மாநில மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போன்ற இந்தி மொழி பேசாத மாநில மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமல்ல தேர்தல் நேரத்தில் இவரது கவர்ச்சிகரமான தேர்தல் பிரச்சாரமும், மதவாத பிரச்சாரமும் இம்மாநில மக்களிடம் எடுபடவில்லை என்பதும் உண்மை. 
           இந்த சூழ்நிலையில் தான் எப்படியாவது இந்த மாநிலங்களில் தான் காலூன்றவேண்டும் என்பதும், இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு வலிமை வாய்ந்த கட்சியாக வளரவேண்டும் என்பதும், அதன் மூலம் அனைத்து மக்களும் நேசிக்கும் ''தேசத்தலைவராக'' வரலாறு பேசவேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்து சுடர்விடத்தொடங்கியது  என்பது மட்டுமல்ல, அவர் சார்ந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட அட்டவணையில் முதன்மையாகவும் உள்ளது.
                  ஆனால் மோடி எதிர்ப்பார்ப்பது போல் மதத்தை வைத்து வித்தை காட்டுவதற்கும், கலவரம் நடத்துவதற்கும், அதன் மூலம் மக்களை ஈர்ப்பதற்குமான ஏற்ற மாநிலங்களாக அந்த மூன்று மாநிலங்களும் இல்லை. இவைகளை கண்டு ஏமாறுகின்ற அளவிற்கு  அம்மாநில மக்களும்  இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் மேற்குவங்கமும், கேரளாவும் வலிமையான இடதுசாரி சிந்தனைகளை கொண்ட மக்கள் வாழும் மாநிலங்கள் என்பதும், தமிழகம் இன்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் செழிப்பாய் வளர்ந்த மாநிலம் என்பதும் தான்,  பிற்போக்குத்தனமான மதவாத   சக்திகளான பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்த மூன்று மாநிலங்களிலும் நுழையமுடியாமைக்கு முக்கிய காரணம். 
             எனவே தான் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றவேண்டும் என்பதற்காக பல்வேறு அஸ்திரங்களை எடுத்தார்  நரேந்திரமோடி. ஊழல் குற்றங்களை புரிந்த இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மீதான ''ஆமை வேக'' நீதிமன்ற வழக்குகளை விரைவுப்படுத்தியும், அதன் மூலம் அவ்விரு திராவிடக்கட்சிகளின் தலைவர்களுக்கு ''வாய்ப்பூட்டு'' போட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் செய்து இரு திராவிடக்கட்சிகளையும் காணாமல் போகும்படி செய்வதன் மூலம் நாடு முழுதும் உள்ள மாநிலக்கட்சிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ன் நெடுநாளைய விருப்பப்படி அமெரிக்காவில் உள்ளது போன்ற இரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான வேலையில் மோடி திட்டமிட்டு செயல்படுகிறார். 
                 இரு திராவிடக்கட்சிகளால் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க-வை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவதற்காக புத்திசாலித்தனமான குறுக்குவழிகளை மோடி கையாள்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்ற மாநிலங்களைப் போல் மதவாதம் இங்கே எடுபடவில்லை.   வழக்கமாக சினிமா நடிகர்களை தான் தமிழக மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால், திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த்க்கும், கமல்ஹாசனுக்கும் வலைவிரித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் அவர் விரித்த வலையில் சிக்கவில்லை. எனவே வழக்கமாக எல்லா தமிழக கட்சிகளும் தமிழர்களின் ஓட்டுக்காக கையில் எடுக்கும் ''தமிழின உணர்வு'' அஸ்திரத்தை மோடியும் கடைசியாக எடுத்திருக்கிறார். 
             தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சனை என்ற எளிதில் தீப்பற்றிக்கொள்ளும், இன உணர்வுகளைத் தூண்டும் ''பிரம்மாஸ்திரத்தை'' எடுத்தார். அதற்காக இலங்கை அதிபரும், மோடியின் நண்பருமான ராஜபட்சேவுடன் கூட்டணி அமைத்தார். சுப்பிரமணியசாமி இவ்விருவருக்கும் (ராமர்) பாலமாய் இருந்து உதவினார். மூவரும் சேர்ந்து ''மோடியும் ஐந்து மீனவர்களும்'' என்ற நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினார்கள். 2011-ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக பிடிக்கப்பட்டு இன்றுவரையில் சிறையிலிருந்த ஐந்து இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திடீரென்று சென்ற அக்டோபர் 30-ஆம் தேதியன்று அந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட, தமிழக மீனவ சமுதாயமும், ''தமிழின  உணர்வு'' கொண்ட தமிழக கட்சிகளும் ராஜபட்சேவை நோக்கி கொந்தளிக்க, உடனே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்களோ என்ற பயத்தை திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பிவிடப்பட, வெளிநாட்டில் உள்ள  இந்திய குடிமக்களின் உயிரை காப்பாற்றவேண்டியது ஒரு பிரதமரின் கடமை என்பதைக்கூட தமிழக மக்கள் மறந்துவிட, தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்றுங்கள் என்று ஆபத்தாண்டவன் - அநாதை இரட்சகனான நரேந்திரமோடியை கும்பிட்டு வேண்டிக்கொள்ள, உடனே அதற்காகவே காத்திருந்த மோடி ''பெரிய மனசு பண்ணி'' தன்னுடைய ''சமாதானத்தூதர்'' சுப்பிரமணிசாமியை இலங்கைக்கு அனுப்பிவைக்க, கட்டளையை ஏற்று உடனே இலங்கைக்குள் குதித்த சு.சாமி ''நிறுத்துங்க... நிறுத்துங்க... போடாதீங்க...'' என்று கத்திக்கொண்டு ராஜபட்சேவை நோக்கி ஓடிவர, தண்டனையை நிறைவேற்றுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த இராஜபட்சே அவரை பார்க்க, சு.சாமி மோடி கொடுத்தனுப்பிய அரசு முத்திரையிட்ட கணையாழியை ராஜபட்சேவிடம் காட்ட, அவரும் என்ன விஷயம் என்று கேட்க, சு.சாமியோ அந்த ஐந்து மீனவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றாமல் விடுதலை அளித்து உயிருடன் இந்தியாவிற்கு அனுப்பும்படி மோடி அன்புடன் கேட்கச் சொன்னதாக சொல்ல, இந்த செய்திகளை உடனுக்குடன் ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும், ஊடகங்களிலும் சுட சுட வெளியிட, அதற்காகே காத்திருந்த ராஜபட்சே தூக்குமேடையில் நின்றுக்கொண்டிருந்த அந்த ஐந்து மீனவர்களையும் கீழே இறக்குவிட்டு விடுதலை அளித்து இந்தியாவை நோக்கி பறக்கச்செய்ய, இன்று வரையில் சோகத்தில் ஆழ்ந்திருந்த தமிழக மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சி கொப்பளிக்க, இந்த இனிய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த தமிழக பாரதீய ஜனதாக்கட்சியோ ஆனந்த பெருக்கெடுத்து தூக்குமேடைக்கே சென்றுவிட்ட அந்த ஐந்து மீனவர்களின் உயிர்களை பிரதமர் மோடி தான் காப்பாற்றினார் என்று அரசியல் மசாலா தடவி பிரச்சாரம் செய்துவருகின்றது என்பது தான் இதுவரையில் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் நாடகமாகும். இந்த நாடகத்திற்கு நமோவும், சு.சாமியும், ராஜபட்சியும் சேர்ந்து கதை. வசனம், இயக்கம் செய்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. 
              நம்ப ''செல்பி புள்ள''  நரேந்திரமோடி, இலங்கையிலிருந்து அரை மணி நேரத்தில் வீடு போய்  சேரவேண்டிய அந்த ஐந்து மீனவர்களை, நேராக புதுடெல்லி இழுத்துக்கிட்டு வந்து தன்னுடன் செல்பி போட்டோ எடுத்து ட்வீட்டரில் போட்ட பிறகு  தான்,   மோடி   அவர்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். இனி தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக்கட்சி மிக நன்றாக வளரும். தமிழகம் வெளங்கிடும்.

1 கருத்து:

பனிமலர் சொன்னது…

http://panimalar.blogspot.com/2014/11/blog-post.html

நான் எழுதியது போலே உள்ளது உங்களது கருத்தும்..

பனிமலர்