ஞாயிறு, 9 நவம்பர், 2014

தூய்மை இந்தியா : மோடிக்கு கற்றுத்தந்த கமல்ஹாசன்...!

 


                நரேந்திரமோடி கடந்த காந்தி ஜெயந்தியின் போது ''தூய்மை இந்தியா'' என்ற இயக்கத்தை தொடங்கிவைத்தார். வீடு,  அலுவலகம், பள்ளி, கோயில் இப்படி நம்மைச்சுற்றி இருக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று சொல்லி அந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். பரவாயில்லையே நம்ப பிரதமர் சாதாரண மக்கள் வாழுகிற  பகுதியில் இருக்கிற குப்பை மேட்டில் வெகுநாட்களாக அள்ளப்படாமல் நாற்றமடித்துக்கொண்டிருக்கும் குப்பைகளை வரிந்துகட்டிக்கொண்டு சுத்தம் செய்யப்போகிறார் என்றெல்லாம் மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்த  நரேந்திரமோடி வழக்கம் போல் மடிப்புக்கலையாத புத்தாடை, பளப்பளன்னு மேக்கப் என ஒரு ஹீரோ கணக்கா  வந்திறங்கினார். ஏற்கனவே சுத்தமாக இருந்த சாலையில் கொஞ்சம் இலைகள் பறித்துவந்து போடப்பட்டிருந்தன. புது துடைப்பம் கம்பில்  கட்டப்பட்டு அவருக்காக காத்துக்கிடந்தது. வந்திறங்கியவர் கையில் துடைப்பம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே எடுத்துக்கொண்ட பயிற்சியின்படி, ஏற்கனவே கொட்டப்பட்ட 10 - 15 இலைகளை மண்ணோ அல்லது தூசுகளோ பறக்காமல் இலாவகமாக பெருக்கி சுத்தம் செய்தார். இந்த ''அரிய'' காட்சியை நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் கேமராக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு படம் பிடித்தன. இந்த மெய்சிலிர்க்கும் காட்சிகளை நேரடியாக ஒளிப்பரப்பி, மோடியின்  கொள்கைகளை  பரப்பிய அடிமை தொலைக்காட்சிகளும் உண்டு.
            இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாட்டுல துடைப்பத்தை பிடிக்காதவனெல்லாம் துடைப்பத்தை தூக்கிக்கிட்டு பெருக்க ஆரம்பிச்சிட்டானுங்க. கேட்டா தூய்மை இந்தியாவாம்.
                 அதேப்போல் ஒரு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளன்று ''தூய்மை இந்தியா'' இயக்கம் தொடங்கப்பட்டது.  தன்னுடைய பிறந்தநாளன்று தானும் ஏதாவது மக்கள் நல உதவிகளை  செய்வதும்,   தன்  இரசிகர்களையும்     அவ்வாறே செய்யவைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ள கமல்ஹாசன், இந்த ஆண்டு நேற்று முன் தினம் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க ''தூய்மை இந்தியாவை'' கையில் எடுத்துக்கொண்டார். ஆனால் இவர் துடைப்பத்தை தூக்கிக்கிட்டு பெருக்குவது போல் படப்பிடிப்பு நடத்தவில்லை. மாறாக தன்னுடைய இரசிகர்களை சென்னைக்கு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரிக்கு அழைத்தார். ஏரியை சுற்றியும் மக்காத மற்றும் அழுகிய குப்பைகள் நிரப்பப்பட்டு, ஆங்காங்கே தேவையில்லாத செடிகள் வளர்ந்து நீர்நிலையே அசுத்தமாய் கிடந்தது. இந்த ஏரி மட்டுமல்ல. இது போல் தமிழகம் முழுதும் உள்ள 25 ஏரிகளை என் இரசிகர்கள் இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அறிவியல்பூர்வமாக சுத்தம் செய்வார்கள். இது தான் என்னுடைய ''தூய்மையான இந்தியா'' என்று அறிவித்தார்.
                  இந்த ஏரி சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதாக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை அழைத்திருந்தார்.  நடிகர் ரஜினிகாந்தை தன்  கட்சிக்கு வரவழைத்து தமிழ்நாட்டில் வளரமுடியாமல் கிடக்கும் தனது கட்சியை வளர்த்து மோடிக்கு காட்டவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக ரஜினியை விடாமல் துரத்திக்கொண்டிருந்த தமிழிசைக்கு எதிர்ப்பாராமல் வந்த கமலின் அழைப்பு ஒரு பூபாள ராகமாய் ஒலிக்க நிகழ்ச்சி நடக்கும் ஏரிக்கரைக்கே ஓடிவந்துவிட்டார். வழக்கமாக கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் இடதுசாரி சிந்தனையாளனாகவும், கடவுள் மறுப்பாளனாகவும் காட்டிக்கொள்வாரே தவிர வேறு அரசியலையும், அரசியல் கட்சியையும் சார்ந்தவராக காட்டிக்கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில் தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு பாரதீய ஜனதாக்கட்சித் தலைவரை எப்படி அழைத்தார் என்ற கேள்வி அவரது இரசிகர்களுக்கே எழுந்தது.
              பிறகு தான் புரிந்தது.... தூய்மையான இந்தியாவென்றால் துடைப்பத்தை எடுத்து ரோட்டைப் பெருக்குவதல்ல.  சுற்றுச்சூழலை பாதுகாக்க - குடிநீரை பாதுகாக்க அசுத்தம் செய்யப்பட்டு காணாமல் போய்கொண்டிருக்கும் ஏரிகளை சுத்தம் செய்வது தான் ''சுத்தமான இந்தியா'' என்று உங்கள் தலைவருக்கு சொல்லுங்கள் என்று தமிழிசையை வரவழைத்து பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பது தான் இந்த நிகழ்ச்சியில் மறைந்திருக்கும் உண்மை. 

கருத்துகள் இல்லை: