செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மோடியின் முகத்திரையை கிழித்த டெல்லி மக்கள்...!


           தொடப்பக்கட்டையை வைத்துக்கொண்டு ''தூய்மை இந்தியா'' திட்டத்திற்கு  போஸ் கொடுத்து ''விளம்பர அரசியல் விரும்பியான'' பிரதமர் நரேந்திரமோடியின் முகத்திரையை டெல்லி மக்கள் ''கிழிகிழியென்று'' கிழித்திருக்கிறார்கள். டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மிகப்பெரிய சாதனைப் படைத்திருக்கிறது. பாரதீய ஜனதாக்கட்சியோ வெறும் மூன்றே இடங்களில் தான் ''முக்கி முக்கி'' வெற்றிபெறமுடிந்தது. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை இழந்திருக்கின்றது. இந்த தேர்தல் முடிவு என்பது ஆம் ஆத்மி கட்சியின் மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் காட்டவில்லை. மகா ஊழல் சக்தியான காங்கிரஸ் கட்சியின் மீதும், மதவாத சக்தியான பாரதீய ஜனதாக்கட்சியின் மீதும் அவர்களுக்கு இருக்கும் வெறுப்பையும், கோபத்தையும் தான் காட்டுகிறது.
                   ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல் ஆட்சியும், கடந்த ஏழு மாதகால பாரதீய ஜனதாக்கட்சியின் மதசார்பின்மைக்கு எதிரான தான்தொன்றித்தன்மான ஆட்சியும் டெல்லி மக்களிடம் ஏற்படுத்திய  ஒரே மாதிரியான எண்ண அலைகள் சுனாமி  பேரலையாக உருமாறி அந்த இரண்டு கட்சிகளையும் விழுங்கிவிட்டன. கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் நடைபெற்ற சில மாநில சட்டமன்றத்தேர்தல்களில்,  ''மோடி அலை'' என்ற பெயரில் மோடி-அமித்ஷா கூட்டாளிகளின் வார்த்தை ஜாலங்களினாலும், கவர்ச்சியான விளம்பரங்களினாலும் வெற்றிபெற்று சட்டமன்றங்களை கைப்பற்றியது போல் டெல்லி சட்டமன்றத்தேர்தலிலும் மோடி-அமித்ஷா கூட்டாளிகள் கிரேன் பேடியையும் சேர்த்துக்கொண்டு வலம் வந்தார்கள். வழக்கம் போல் மோடி அலையை காட்டி வெற்றிபெற்றுவிடலாம் என்று கனவுகண்டார்கள். ஆனால் டெல்லி மக்கள் மோடி அலையை ஊதித் தள்ளிவிட்டார்கள். மோடி வித்தை டெல்லி மக்களிடம் பலிக்கவில்லை. மோடியின் ''அகாஜுகா'' ஆர்ப்பரிப்புகளையும், ஆரவாரங்களையும் நேரில் பார்ப்பவர்களாயிற்றே. நேரம் பார்த்து பாரதீய ஜனதாக்கட்சிக்கு வெச்சாங்க ஆப்பு.
                சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் ஆட்சிசெய்யும் மோடி-அமித்ஷா கூட்டாளிகளுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாக இருக்கட்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி செய்தால், மக்கள் அவர்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்பதை இனியாவது மோடியும், அவரது கட்சியும் புரிந்துகொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: